சனி, 30 ஜூலை, 2011

பாமகவில் விடுதலை சிறுத்தைகள் பொதுக்குழுவில் முடிவு : ராமதாஸ்

பாமகவில் விடுதலை சிறுத்தைகள் சேருவது பற்றி
பொதுக்குழுவில் முடிவு : ராமதாஸ்

திண்டிவனத்தை அடுத்த தைலாபுரம் தோட்டத்தில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர்,‘’தமிழகத்தில் திராவிட கட்சிகளுக்கு மாற்றாக ஒரு புதிய அணியை ஏற்படுத்தும் பா.ம.க. அறிவிப்புக்கு பொதுமக்களிடையே பெரும் வரவேற்பு உள்ளது. சென்னையில் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் பா.ம.க.வின் இந்த முடிவை வரவேற்றுள்ளார்.

பா.ம.க.வும், விடுதலை சிறுத்தைகள் கட்சியும் ஒருமித்த கருத்துள்ள கட்சிகள். இந்த 2 கட்சிகளும் கட்டாய, கட்டணமில்லாத தரமான சமச்சீர் கல்வி மற்றும் தரமான மருத்துவ சிகிச்சையை வலியுறுத்தி வருகின்றன. பா.ம.க. அணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சேருவது குறித்து ஆகஸ்டு 27-ந் தேதி நடைபெறும் பா.ம.க. பொதுக்குழுவில் விவாதிக்கப்படும்.

இது பற்றி திருமாவளவன், விடுதலை சிறுத்தைகள் கட்சி செயலாளர் ரவிக்குமார் ஆகியோரிடம் 2 முறை பேசியுள்ளேன். பா.ம.க. அணியில் சேர்ப்பதற்காக தமிழகத்தில் உள்ள பல இயக்கத்தினர் மற்றும் தமிழ் ஆர்வலர்களுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

விடுதலை சிறுத்தைகள் கட்சி, பா.ம.க. அணியில் சேரும் வாய்ப்புள்ளது. இந்த 2 கட்சிகளும் தொண்டர்கள் அதிகமுள்ளவை. பா.ம.க.வும், விடுதலை சிறுத்தைகள் கட்சியும் ஒரே அணியாக உருவானால் உள்ளாட்சி தேர்தலில் 3-வது அணியாக போட்டியிடுவோம்’’ என்று கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக