ஞாயிறு, 3 ஜூலை, 2011

பதவியிலிருப்போரை மாற்ற தி.மு.க., தலைமை முடிவு செய்துள்ளது.

தலைமையின் முடிவால் தி.மு.க., மாவட்ட செயலாளர்கள் அதிர்ச்சி

கட்சி அமைப்பை மாற்றி அமைப்பதோடு, நீண்ட காலமாக ஒரே பதவியிலிருப்போரை மாற்ற தி.மு.க., தலைமை முடிவு செய்துள்ளது. இது, மாவட்டச் செயலர்கள் இடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குக்கிராமங்களிலும் கிளைகளைக் கொண்டது தி.மு.க., இக்கட்சியில், மாநில அளவில் கட்சித் தலைவருக்கு முதலிடம். அடுத்து பொதுச் செயலர், பொருளாளர் உட்பட மற்ற நிர்வாகிகள் உள்ளனர். மாவட்ட அளவில், மாவட்டச் செயலருக்கு முதலிடம். அடுத்த நிலையில் மற்ற நிர்வாகிகள் வருவர். அதேபோல் ஒன்றிய, நகர நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். இவை தவிர, இலக்கிய அணி, வழக்கறிஞர் அணி, மகளிர் அணி, இளைஞர் அணி என பல அணிகள் உள்ளன. பல அணிகள் இருந்தாலும், கட்சி அளவில் மாவட்டச் செயலர்களே அதிகாரம் மிகுந்தவர்களாக உள்ளனர். சட்டசபை தேர்தல், உள்ளாட்சி தேர்தல், என அனைத்திலும், மாவட்டச் செயலர் ஆதரவு பெற்றவர்களுக்கே வாய்ப்பு வழங்கப்படுகிறது. அவர்களை மீறி செயல்படுவோர், கட்சியில் நீடிப்பது சிரமம். பல மாவட்டச் செயலர்கள், கருணாநிதியின் துவக்க காலத்திலிருந்தே உடனிருந்து கட்சிக்கு சோதனைகள் ஏற்பட்டபோது, தோள் கொடுத்தவர்கள். எனவே, அவர்கள் மீது குற்றச்சாட்டுகள் எழுந்தாலும், தலைமையால் நடவடிக்கை எடுக்க முடியவில்லை.

சேலம், தூத்துக்குடி, விழுப்புரம், வேலூர், திருநெல்வேலி, என பல மாவட்டங்களில், மாவட்டச் செயலர் பதவி ஒருவரிடமே நிரந்தரமாக உள்ளது. அவர்களின் நடவடிக்கையால் பாதிக்கப்பட்டோர், தனி கோஷ்டியாக செயல்படுவதால், கட்சியில் பூசல் அதிகரித்துள்ளது.கடந்த 2001ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் தி.மு.க., தோல்வி அடைந்தது. தோல்விக்கு மாவட்டச் செயலர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து, மாவட்டச் செயலர்களின் அதிகாரத்தை குறைக்க, மண்டலச் செயலர்கள் நியமிக்கப்பட்டனர். மீண்டும் 2006ம் ஆண்டு ஆட்சிக்கு வந்ததும், மாவட்டச் செயலர்கள் அதிகாரத்துடன் வலம் வரத் துவங்கினர். மண்டலச் செயலர் பதவி இருப்பதே தெரியாத நிலை ஏற்பட்டது.சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தலில் தி.மு.க., தோல்வியைத் தழுவியது. தோல்விக்கு பொறுப்பேற்று, ஒரு மாவட்டச் செயலர் கூட, பதவியை ராஜினாமா செய்ய முன் வரவில்லை.

குறுநில மன்னர்கள் போல் செயல்பட்ட, மாவட்டச் செயலர்களால்தான் தோல்வியை சந்திக்க நேரிட்டது, எனத் தொண்டர்கள் கட்சி தலைமையிடம் முறையிட்டனர்.அவர்களின் கருத்துக்களுக்கு மதிப்பளித்து, மாவட்டச் செயலர்களின் அதிகாரத்தை குறைக்க, மாவட்டக்கழக அமைப்பை கலைப்பது, அதற்கு பதிலாக, லோக்சபா தொகுதி, சட்டசபை தொகுதி வாரியாக குழுக்கள் அமைப்பது, என தி.மு.க., முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக, தலைமை பொதுக்குழு உறுப்பினர்கள் வரும் 15ம் தேதிக்குள், தங்கள் கருத்துக்களை கட்சி தலைமைக்கு அனுப்ப வேண்டும், என தலைமைக் கழகம் அறிவித்துள்ளது.கட்சி அமைப்பை மாற்றுவதன் மூலம், வயதான நிர்வாகிகளைப் பதவியிலிருந்து கழற்றி விட கட்சி முடிவு செய்துள்ளது.

இதை வெளிப்படுத்தும் விதமாக, திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையத்தில் நடந்த தி.மு.க., கூட்டத்தில், முன்னாள் அமைச்சர் துரைமுருகன் பேசும்போது, ""கட்சியில் வயதானவர்கள், இளைஞர்களுக்கு வழிவிட வேண்டும். எல்லா மட்டத்திலும் இதை அமல்படுத்த வேண்டும். அப்போது தான் கட்சி வளரும். இல்லையெனில், கட்டிக்காத்த இயக்கம் கண்ணெதிரிலே உருக்குலையும் அபாயம் உள்ளது,'' என்றார்.

மாவட்ட பொதுக்குழு உறுப்பினர்களில் பெரும்பாலானோர், தற்போதுள்ள மாவட்டச் செயலர்களால் பாதிக்கப்பட்டவர்கள். எனவே, கட்சி தலைமையின் முடிவிற்கு ஆதரவு அதிகமாகவே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், மாவட்டச் செயலர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.

இது குறித்து கட்சி நிர்வாகிகள் சிலர் கூறியதாவது:கட்சி தலைமை, மாவட்ட அமைப்பை கலைக்க முடிவு செய்துவிட்டது. பெயரளவிற்கே கருத்து கேட்கிறது. மாவட்ட அமைப்பை கலைத்தாலும், லோக்சபா தொகுதி தலைமைப் பதவிக்கு, பெரும்பாலான மாவட்டச் செயலர்கள் வந்து விடுவர். சில மாவட்டங்களில் இரண்டு மாவட்டச் செயலர்கள் செயல்படும் நிலை உருவாகும். அவர்களுக்குள் ஈகோ தலை தூக்கினால், கோஷ்டி பூசல் அதிகரிக்கும். மாவட்ட அமைப்பை மட்டும் கலைக்க முடிவு செய்திருப்பதாக, கட்சி தலைமை அறிவித்துள்ளது. லோக்சபா தொகுதி, சட்டசபை தொகுதி குழுக்கள் எவ்வாறு அமைக்கப்படும், ஒன்றிய, நகர, கிளை அமைப்புகள் மாற்றப்படுமா என்ற விவரம் தெரியவில்லை. கோவையில் ஜூலை 23 மற்றும் 24ம் தேதி பொதுக்குழுக் கூட்டம் நடைபெறுகிறது. அப்போதுதான் முழு விவரம் தெரிய வரும். அதுவரை கட்சியினரிடம் குழப்பமே நீடிக்கும்.இவ்வாறு நிர்வாகிகள் தெரிவித்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக