திங்கள், 4 ஜூலை, 2011

சிறுவனை சுட்டுக்கொன்ற இராணுவ வீரரை தமிழக பொலிஸாரிடம் ஒப்படைக்க வேண்டும் : ஜெயலலிதா வலியுறுத்தல்!

சிறுவனை சுட்டுக்கொன்ற இராணுவ வீரரை உடனடியாகத் தமிழக பொலிஸாரிடம் ஒப்படைக்க வேண்டுமென்றும், இராணுவவீரர் மீது சட்டப்படி நடவடிக்கையெடுக்கப்படும் என்றும் முதலமைச்சர் ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்;

சென்னை தீவுத்திடல் அருகிலுள்ள இந்திரா காந்தி நகரைச் சேர்ந்த கூலித்தொழிலாளி குமார் என்பவரின் 13 வயது மகன் தில்சன் ஞாயிற்றுக்கிழமை மதியம் 1.30 மணியளவில் கொடிமரச்சாலை இராணுவ வளாகத்தில் அமைந்துள்ள மரத்தில் ஏற முயன்றபோது அங்குள்ள இராணுவக் காவலாளி ஒருவர் அந்தச் சிறுவனை நோக்கித் துப்பாக்கியால் சுட்டார்.அதன் விளைவாக சிறுவன் தில்சனின் தலையில் குண்டு பாய்ந்து பலத்த காயம் ஏற்பட்டது.
அதையடுத்து அந்தச் சிறுவன் உடனடியாக சென்னை அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டது. இந்தத் துயரச் சம்பவத்தைக் கேள்விப்பட்டவுடன் வேளாண்மைத்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், மின்சாரத்துறை அமைச்சர் நத்தம் ஆர்.விஸ்வநாதன், தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ஆகியோர் உடனடியாக மருத்துவமனைக்கு சென்று காயமடைந்த சிறுவனுக்கு உயரிய மருத்துவ சிகிச்சை அளிக்கப்படுவதை உறுதி செய்யுமாறு ஆணையிட்டனர்.
எனினும் சிகிச்சை பலனின்றி சிறுவன் தில்சன் மரணமடைந்தான் என்ற செய்தி என்னை ஆற்றொணாத் துயரத்தில் ஆழ்த்தியது. மரத்தில் ஏற முயன்ற 13 வயதுச் சிறுவன் தீவிரவாதியோ, பயங்கரவாதியோ அல்ல என்பதை பாதுகாவலர் எளிதில் தெரிந்து கொண்டிருக்க முடியும். இருப்பினும் அந்தச் சிறுவன் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியிருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.இவ்வாறு துப்பாக்கிச்சூடு நடத்தியிருப்பதை யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாது.
எனது ஆணையின் பேரில் தமிழக அரசின் தலைமைச் செயலாளர் இராணுவ ஜெனரல் அதிகாரிக்குக் கடிதம் எழுதி இந்தக் கொடூரச் செயலைச் செய்த இராணுவ வீரரை உடனடியாகத் தமிழக பொலிஸிடம் ஒப்படைக்க வேண்டுமென்று கோரியுள்ளார். அந்த இராணுவ வீரர் மீது சட்டப்படி நடவடிக்கையெடுக்கப்படுவதை நான் உறுதி செய்வேன் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன். எனவே, உயிரிழப்பு ஏற்பட்டுள்ள இந்தத் துயரமான சூழ்நிலையில் பொதுமக்கள் அமைதி காத்து சட்டம்,ஒழுங்கை நிலைநாட்ட பொலிஸாருக்கு முழு ஒத்துழைப்பளிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக