செவ்வாய், 12 ஜூலை, 2011

பழனி மாணிக்கத்துக்கு கேபினட் அந்தஸ்து?ஜெயந்தி நடராஜனுக்கு அமைச்சர் பதவி?

டெல்லி: ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் அமைச்சரவையில் இன்று பெரிய அளவிலான மாற்றங்கள் இருக்கலாம் என்று கருதப்படுகிறது. பல புதிய அமைச்சர்கள் இடம்பெறக் கூடும் என்றும், சிலர் நீக்கப்படக் கூடும் என்றும், சிலரது இலாகாக்கள் மாற்றப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இன்று மாலை 5 மணிக்கு அமைச்சரவை மாற்றப்படுகிறது. 2வது ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் 2வது அமைச்சரவை மாற்றம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

ஜெயந்தி நடராஜனுக்கு அமைச்சர் பதவி?

முக்கியத் துறைகளான பாதுகாப்பு, உள்துறை, நிதி, வெளியுறவு ஆகிய துறைகளைத் தவிர்த்து பிற துறைகளில் மட்டும் மாற்றம் மேற்கொள்ளப்படவுள்ளது. சட்ட அமைச்சர் வீரப்ப மொய்லி, சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித், ஊரக வளர்ச்சி பஞ்சாயத்து ராஜ் அமைச்சர் விலாஸ் ராவ் தேஷ்முக், நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கமல்நாத் ஆகியோரது இலாகாக்கள் மாற்றப்படவுள்ளன.

சுற்றுச்சூழல் இணை அமைச்சராக செயல்பட்டு வரும் ஜெயராம் ரமேஷ் கேபினட் அமைச்சராக்கப்படலாம்.

ஜெயந்தி நடராஜனுக்கு அமைச்சர் பதவி தரப்படும் என்றும் பேச்சு அடிபடுகிறது. அதேபோல முரளி தியோராவின் மகன் மிலிந்த் தியோராவுக்கு பதவி கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. முரளி தியோரா தனது பதவியை ராஜினாமா செய்து விட்டார் என்பது நினைவிருக்கலாம்.

ரயில்வே அமைச்சர் யார்?

ரயில்வே துறைக்கு புதிய அமைச்சர் என்ற எதிர்பார்ப்புதான் பெரிதாக உள்ளது. மமதா பானர்ஜி தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு மேற்கு வங்க முதல்வராகி விட்டதால் அந்த இடத்தை தனது கட்சிக்கே தர வேண்டும் என நிபந்தனை போட்டுள்ளார். அவரது கட்சியைச் சேர்ந்த திணேஷ் திரிவேதி ரயில்வே அமைச்சராக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தர்போது அவர் சுகாதாரத் துறை இணை அமைச்சராக இருக்கிறார். அதேபோல அக்கட்சியைச் சேர்ந்த சுதீப் பந்தோபத்யாய் இணை அமைச்சராக்கப்படலாம்.

திமுக சார்பில் புதிதாக 2 பேரை சேர்க்க வேண்டியுள்ளது. அவர்கள் யார் என்பதும் எதிர்பார்ப்புக்குள்ளாகியுள்ளது. ஒருவேளை திமுக அமைச்சரவையில் 2 பேரை சேர்க்க விரும்பினால், திமுக கூறும் நபர்களை சேர்க்க காங்கிரஸ் ஒத்துக் கொண்டால், டி.ஆர்.பாலு மற்றும் டிகேஎஸ் இளங்கோவன் அமைச்சர்களாகலாம் என்று தெரிகிறது.

நிதித்துறை இணையமைச்சர் பழனிமாணிக்கத்துக்கு கேபினட் அந்தஸ்து தரப்படலாம் என்றும் கூறப்படுகிறது.

இன்றைய அமைச்சரவை மாற்றம் சற்றே விரிவானதாக இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுவதால் டெல்லியில் பரபரப்பு தொற்றிக் கொண்டுள்ளது. மாலை 5 மணியளவில் அமைச்சரவை மாற்றம் நடைபெறும் என்று தெரிகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக