திங்கள், 25 ஜூலை, 2011

காசு வாங்குனேனே?.. மறந்து போச்சே!'': கல்மாடிக்கு மறதி நோயாம்!

டெல்லி: காமன்வெல்த் ஊழல் வழக்கில் திகார் சிறையில் இருக்கும் சுரேஷ் கல்மாடி டிமென்ஷியா என்னும் ஞாபகமறதி நோயால் அவதிப்படுகிறாராம். இது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டால் வழக்கு விசாரணை பாதிக்கப்படும் என்று கூறப்படுகிறது.

காமன்வெல்த் போட்டிகள் ஒருங்கிணைப்புக் குழு தலைவராக இருந்த கல்மாடி ஊழல் புகாரில் சிக்கி தற்போது திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அண்மையில் கல்மாடியை லோக் நாராயண் தெய் பிரகாஷ் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

அங்கு அவருக்கு எம்ஆர்ஐ ஸ்கேன் உள்பட பல பரிசோதனைகள் செய்யப்பட்டன.

இது குறித்து துணை இன்ஸ்பெக்டர் ஜெனரல் ஆர்.என்.ஷர்மா கூறியதாவது, கல்மாடியின் குடும்பத்தினர் அவர் உடல் நிலை குறித்த அறிக்கை ஒன்றை சிறை அதிகாரிகளிடம் சமர்பித்தனர். அதில் அவருக்கு டிமென்ஷியா என்னும் ஞாபக மறதி நோய் ஆரம்பக்கட்டத்தில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிமென்ஷியா இருப்பவர்களுக்கு ஞாபக மறதி, பலவீனமான பகுத்தறிவு இருக்கும். ஜெய் பிரகாஷ் மருத்துவமனையில் எடுத்த சோதனை முடிவுகளுக்காக காத்துக் கொண்டிருக்கிறோம் என்றார்.

கல்மாடியின் வழக்கறிஞர் ஹித்தேஷ் ஜெயின் கூறுகையில், எனது கட்சிக்காரருக்கு கடந்த 4, 5 ஆண்டுகளாக டிமென்ஷியா பிரச்சனை உள்ளது. இது குறித்து சிறை மற்றும் விசாரணை அதிகாரிகளுக்கு தெரிவித்துவிட்டோம்.

கல்மாடிக்கு இந்த நோய் எப்பொழுதில் இருந்து இருக்கிறது என்று தெரிந்த பிறகு தான், விசாரணை பாதிக்கப்படுமா இல்லையா என்று தெரிய வரும் என்று இந்த வழக்கை விசாரித்து வரும் சிபிஐ வழக்கறிஞர் கே.டி.எஸ்.துல்சி கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக