திங்கள், 4 ஜூலை, 2011

சிறுவன் நரபலி? தூத்துக்குடியில் பள்ளி மாணவன்


தூத்துக்குடியில் டியூஷன் சென்று மாயமான பள்ளி சிறுவன், கோவில் கிணற்றில் பிணமாக மிதந்தான். முன்விரோதத்தில் இச்சிறுவன் நரபலி தரப்பட்டதாக புகார் கூறிய ஊர்க்காரர்கள், கோவிலுக்கு தீவைத்தனர்.
தூத்துக்குடி, ஆரோக்கியபுரம் அடுத்த ஜோதிபாசு நகர் மளிகைக்கடை உரிமையாளர் வேல்ராஜ். இவரது மனைவி உஷா. இவர்களுக்கு, மெட்ரிக் பள்ளியில் 3ம் வகுப்பு படித்த குணசேகர் ராஜா, 8), 2ம் வகுப்பு படிக்கும் அபிஷேக் ராஜா, 7, என்ற இருமகன்கள். நேற்று முன்தினம் மாலை 5 மணிக்கு இவர்கள், வழக்கம் போல அருகிலுள்ள ஒருவரின் வீட்டிற்கு டியூஷன் படிக்கச் சென்றனர். பாத்ரூம் செல்வதாகக்கூறி, 6 மணிக்கு குணசேகர் ராஜா மட்டும் வீட்டிற்கு வந்தார். மீண்டும் டியூஷன் செல்வதாக தாயாரிடம் கூறிச் சென்றார். 8 மணிக்கு அபிஷேக் ராஜா வீடு திரும்பிய நிலையில், குணசேகர் ராஜா நீண்ட நேரமாகியும் வீடுதிரும்பவில்லை. டியூஷனுக்கும் வரவில்லை என, தெரிவிக்கப்பட்டது. கலக்கமடைந்த பெற்றோர், குடும்பத்தினர், ஊர்க்காரர்கள், அவனை பல இடங்களிலும் தேடியும் கிடைக்காததால், தாளமுத்துநகர் போலீசிலும் புகார் செய்தனர்.

நேற்று முன்தினம் நள்ளிரவு 11.30 மணியளவில், அங்கு காளியம்பாள் கோவில் வைத்துள்ள ஆறுமுகம் என்பவரின் வீட்டின் அருகேயுள்ள உறை கிணற்றில் குணசேகர் ராஜா, பிணமாக மிதந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த அவரது உறவினர்கள், குறிசொல்லி, பில்லி சூனியம் செய்யும் ஆறுமுகமே, முன்விரோதத்தில் குணசேகர் ராஜாவை நரபலி பலி கொடுத்து கிணற்றில் வீசியதாக குற்றம் சாட்டினர்.

ஆறுமுகம், மனைவி நாச்சியார், மகன்கள் ராமர்பாண்டி, லட்சுமணபாண்டி, திருமூர்த்தி ஆகியோரை சரமாரியாக அடித்து உதைத்தனர். இதில், படுகாயமடைந்த அவர்கள், தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். ஆறுமுகம் வீடும் சேதப்படுத்தப்பட்டது. அவரது கோவிலுக்கும் தீவைக்கப்பட்டது. மேற்கூரை எரிந்து நாசமானது. பிரச்னையை தவிர்க்க போலீசார் லேசான தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். குணசேகர் ராஜா உடல் கிணற்றிலிருந்து மீட்கப்பட்டது.

ஊர்க்காரர்கள் குற்றம் சாட்டுவது என்ன: ஆறுமுகம் நிர்வகித்துவரும் காளியம்பாள் கோவிலுக்கு அவ்வூர்க்காரர்கள் யாரும் செல்லமாட்டார்கள். அந்த கோவில் அருகிலேயே ஊருக்கு சொந்தமான கருமாரியம்மன் கோவில் உள்ளது. இந்த இருகோவில்களுக்கு இடையே நிலத்தகராறு இருக்கிறது. இந்நிலையில், கருமாரியம்மன் கோவிலில் சமீபத்தில் கும்பாபிஷேகம் நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை இறந்துபோன சிறுவன் குணசேகர் ராஜா தந்தை வேல்ராஜ் முன்னின்று செய்தார். இந்த முன்விரோதத்தில் ஆறுமுகம் குடும்பத்தினருடன் சேர்ந்து, குணசேகர் ராஜாவை கடத்தி நரபலி கொடுத்து கிணற்றில் வீசியதாக ஊர்க்காரர்கள், குணசேகர் ராஜா குடும்பத்தினர் குற்றம் சாட்டுகின்றனர். ஆனால், குணசேகர் ராஜா இறந்ததை, சந்தேக மரணம் என்ற அடிப்படையில் தாளமுத்துநகர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். பிரேத பரிசோதனை முடிவுக்குப்பின்னரே அது கொலையா அல்லது விபத்தா எனத்தெரியவரும்.
கோவிலை இடிக்கக்கோரி மறியல்: ஆறுமுகத்தின் காளியம்பாள் கோவிலை இடிக்க வலியுறுத்தி, ஊர்க்காரர்கள் நேற்று மதியம் அங்கு தருவைக்குளம் மெயின் ரோட்டில் சாலை மறியல் செய்தனர். அதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமென தாசில்தார் கந்தசாமி, ஏ.எஸ்.பி., சோனல் சந்திரா உறுதியளித்ததையடுத்து, மறியல் கைவிடப்பட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக