வியாழன், 28 ஜூலை, 2011

ஹைடெக் கருப்பு பணப்பரிமாற்றம் நடப்பது எப்படி?

துபாயிலிருந்து பெரும்பணத்தினை இந்தியாவுக்கு மாற்றவேண்டும். வேறு எந்த வழியில் வந்தாலும் பிக்கல் பிடுங்கல்கள் அதிகம். வழியென்ன?
முதல்படி, இந்தியாவில் ஒரு மென்பொருள் நிறுவனத்தினை முதலில் வாங்க வேண்டும் அல்லது தொடங்க வேண்டும். சிறப்புப் பொருளாதார மண்டலத்தில் அது இருந்தால் இன்னமும் நல்லது. இந்த மென்பொருள் நிறுவனத்தின் வேலையே துபாய் முதலாளியின் பணத்தினை மாற்றுவது. நுட்பம் தெரியவில்லையெனில் பரவாயில்லை. ஊரில் சல்லிசாக கிடைக்கும் ஏதாவது ஒரு ஈ ஆர் பி, சி ஆர் எம், எஸ் ஏ பி இம்ப்ளிமெண்டேஷன் என்பது மாதிரியான ஜல்லிகளில் ஏதேனுமொன்றை தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். இது வெளிப்பூச்சுக்கு. இது முதல் படி.
இரண்டாம் படி, துபாய் நிறுவனம் இந்தியாவில் யார் யாருக்கு காசு கொடுக்க வேண்டுமோ, அதை ஒரு லிஸ்ட் போடும். அந்த நிறுவனங்கள் எல்லாம் வெற்று இன்வாய்ஸில் இந்த மென்பொருள் நிறுவனத்துக்கு பொருளோ / சேவையோ அளிப்பார்கள். மென்பொருள் நிறுவனம், அத்தனை நிறுவனங்களிடத்திலும் கடன் வசதி பெற்றிருக்கும்.
மூன்றாம் படி, துபாய் நிறுவனம் தங்களுடைய நிறுவனத்தினை உலக வர்த்தகத்தில் இருக்கும் ஜாம்பவான்களுக்கு ஈடாய் மாற்ற முதலில் எல்லாவற்றையும் கணினிமயமாக்க முனைவார்கள். சந்தையில் கிடைக்கும் விலையை விட, 50-100 மடங்கு விலையினை இந்தியாவில் இருக்கும் மென்பொருள் நிறுவனத்துக்கு கொடுப்பார்கள். இந்தியாவில் இருக்கும் பெருந்தலைகள், விஷயமறிந்தவர்கள் உடனே துபாய்க்கு போய் காண்ட்ராக்ட் போட்டு புர்ஜ் அல் அராபில் தங்கி, ஷாப்பிங் மால்களில் அர்மானி வாங்கி, ரஷ்யப் பெண்களோடு ஜல்சா பண்ணிவிட்டு இந்தியாவுக்கு வயர் ட்ரான்ஸ்பர் செய்து விட்டு தான் திரும்புவார்கள்.
நான்காவது படி, இந்தியாவுக்கு வரும் மொத்தப் பணத்தில் மென்பொருள் நிறுவனத்துக்கு எஞ்சும் பணத்தைத் தவிர மீதமத்தனைத்தும் போய் சேர வேண்டியவர்களுக்கு சரியாக பைசா பாக்கியில்லாமல் போய் சேரும். மென்பொருள் நிறுவனம், கடன் வசதி பெற்ற நிறுவனங்கள் அத்தனைக்கும் காசினை திரும்பக் கொடுக்கும். இது சிறப்புப் பொருளாதார மண்டலத்தில் இருப்பதால் வரி ஏதும் கட்டத் தேவையில்லை. கேட்டால் அது ஒரு முழுக்க முழுக்க ஏற்றுமதி மட்டுமே செய்யும் நிறுவனம் (EOU – Export Oriented Unit) என்று சட்டத்தினைக் காட்டி, வரவேற்பறையில் காந்தியின் பொன்மொழிகளை ஒட்டியிருப்பார்கள். சத்யமேவ ஜெயதே.
மேலே சொன்னது போனத் தலைமுறை டெக்னிக். ஆனால் இன்றும் நடந்துக் கொண்டிருக்கிறது. கொஞ்சம் மேம்படுத்தப்பட்ட முறை இப்போது வந்திருக்கும் ’மென்பொருளை சேவையாக வழங்கல்’ (Software as a Service – SaaS) நிறுவனங்கள் வழியே செய்வது. வெப் 2.0 என்கிற கருத்தாக்கம் பரவ ஆரம்பித்த 2003ல் தொடங்கப் பட்ட மாடல் இது. இதில் யாரும் மென்பொருளை வாங்கத் தேவையில்லை. ஜிமெயில் உபயோகிப்பது மாதிரி, நேரடியாக தேவைப்படும் நேரத்தில் மட்டும் பயன்படுத்திக் கொள்ளலாம். பயன்பாட்டுக்கு ஏற்றவாறு காசு. இதை வைத்துக் கொண்டு தான் சேல்ஸ்போர்ஸ் மாதிரியான நிறுவனங்கள் நேர்மையாகவே பில்லியன் டாலர் நிறுவனங்களாக மாறியிருக்கின்றன.
இது லேட்டஸ்ட் வழி. ஏதேனும் ஒரு உதவாத சேவையை இணையம் வழியே தருவதாக சொல்வது. அதற்கு ஊரெங்கும் சந்தாதாரர்கள் இருப்பதாக சொல்லிக் கொள்வது. துர்க்மெனிஸ்தான், லாட்டிவியா, செக் குடியரசு என்று சோற்றுக்கே லாட்டரியடிக்கும் ஊர்களிலிருந்தெல்லாம் சந்தாதாரர்கள் இருப்பார்கள். சின்ன, சின்ன பரிவர்த்தனைகளாக மாற்றி, ஊரெங்கும் காசினை வெஸ்டர்ன் யூனியன் மாதிரி சேவை வழியாக அனுப்பி, சந்தாதாரர்களாக்கி அவர்கள் உங்கள் சேவையினை உபயோகிக்காமலேயே காசு கட்டுவார்கள். இது தான் அடிப்படை.
பத்தாயிரம் குறு நிறுவனங்கள். ஒரு குறு நிறுவனத்தில் 10 நபர்கள். ஒரு நபருக்கு $25 என்றுக் கொண்டால் ஒரு மாதத்துக்கு $2,500,000 [கிட்டத்திட்ட 11 கோடி] வெளுப்பாக்கலாம். கிட்டத்திட்ட 7 பில்லியன் மக்கள் கொண்ட உலகில், இந்த சேவையை ’நம்ப’ பத்தாயிரம் நிறுவனங்கள் இருக்க முடியாதா என்ன ? ஆக ஒரு வருடத்துக்கு 132 கோடி எவ்விதமான கேள்வியும் கேட்காமல் வங்கியில் இருக்கும். வியாபார வருமானம் என்று நாகூசாமல் பொய் சொல்லலாம்.’நேர்மையாய் சம்பாதித்த காசு’.யாரும் கேள்வியே கேட்க முடியாது. அதையும் எதாவது ஒரு குறை வரி தேசத்தில் வைத்திருந்தால் செளகர்யம். வரியும் மிச்சம்.
இதையே வேறு விதமாகவும் செய்ய முடியும். உலக தீவிரவாத குழுக்கள் இப்போது உலகமெங்கும் பணத்தினை பரிமாற்றம் செய்ய நம்புவது எதுவாக இருக்க முடியும் ? வங்கிகள் – மாட்டிக் கொள்வார்கள். வெஸ்டர்ன் யூனியன் – அதிகமாக கேள்விகள் கேட்பார்கள். ஹவாலா – ஏற்கனவே ப்ளாக் லிஸ்டில் இருக்கக் கூடிய பரிவர்த்தனை. பின் எப்படி? இருக்கவே இருக்கிறது கூகிள்
ஹைடெக் கருப்பு  பணப்பரிமாற்றம் நடப்பது எப்படி?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக