ஞாயிறு, 31 ஜூலை, 2011

லண்டனில் நான் ஆற்றிய உரை தொடர்பாக சில இணையத்தளங்களில் உண்மைக்கு மாறான செய்திகள் சுமந்திரன் கூறுகிறா




போர்க் குற்ற விசாரணை நடத்தப்பட வேண்டுமென நான் ஒருபோதும் கூறவில்லை. மாறாக இவை புத்திசாலித்தனமாக உபயோகிக்கப்பட்டால் தமிழ் மக்களின் விடிவுக்கு உதவியாக இருக்கும் என்ற கருத்தை தெளிவாகக் கூறியுள்ளேன் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பி. எம்.ஏ. சுமந்திரன் கூறியுள்ளார்.
லண்டனில் அவர் ஆற்றிய உரை தொடர்பாக சில இணையத்தளங்களில் உண்மைக்கு மாறான செய்திகளை வெளியிட்டிருப்பதாகக் குறிப்பிட்டிருக்கும் சுமந்திரன், அது தொடர்பாக நேற்று வெள்ளிக்கிழமை மேலும் தெரிவித்திருப்பதாவது;
பொதுநல நாடுகளின் பாராளுமன்றக் கழகம் கூட்டத் தொடரில் கலந்துவிட்டு இன்று காலை மீண்டும் இலங்கைக்குத் திரும்பியபோது இலங்கையில் வெளியாகும் ஊடகங்களாலும் சென்ற ஞாயிற்றுக்கிழமை நான் லண்டன் நகரில் செய்த உரையைக் குறித்து செய்திகள் பல வந்திருப்பதை அறிந்தேன். இவை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் லண்டன் கிளை ஒழுங்குபடுத்தியிருந்த இந்தக் கூட்டத்தில் நான் சொன்னதாக சில இணையத்தளங்கள் வெளியிட்ட செய்திகளை மேற்கோள் காட்டியிருக்கின்றன. இந்த இணையத்தள செய்திகள் உண்மைக்குப் புறம்பானதாகவும் வேண்டுமென்றே பிழையான செய்தியைப் பரப்ப வேண்டும் என்ற நோக்கோடும் நான் சொன்னதாகச் சொல்லியிருக்கின்ற இச்செய்திகளை நான் முற்று முழுதாக மறுக்கின்றேன்.
இந்த இணையத்தளங்கள் அக்கூட்டத்தில் களவாகப் பதியப்பட்ட காணொளியின் சில பகுதிகளை இணைத்து பிரதான பேச்சையும் முக்கியமான சில பகுதிகளையும் மறைத்து தொகுக்கப்பட்டுள்ளதைக் காணலாம். எப்படியாயினும் இப்படி வெளியிடப்பட்ட இந்தக் காணொளி தொகுதியிலும் கூட கீழ்க்கண்ட விடயங்களைக் காணலாம்.
1. இலங்கையின் இனப்பிரச்சினைக்கான தீர்வு சிங்கள மக்களில் ஒரு அங்கமாவது நியாயமானதென்று ஏற்றுக்கொள்கின்ற தீர்வாக அமைய வேண்டும் என்று நான் கூறியிருக்கிறேன். அத்தீர்வு அனைத்து சிங்கள மக்களாலேயோ, அவர்களில் பெரும்பான்மையினராலோ ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் என நான் கூறவில்லை.
2. போர்க்குற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும் என நான் ஒருபோதும் கூறவில்லை. மாறாக இவை புத்திசாலித்தனமாக உபயோகிக்கப்பட்டால் தமிழ் மக்களின் விடிவுக்காக உதவியாக இருக்கும் என்ற கருத்தை நான் தெளிவாகக் கூறியுள்ளேன்.
3.புலம்பெயர் நாடுகளில் வாழும் தமிழ் மக்களின் பங்களிப்புக் குறித்து நான் சொன்னவை இந்தக் காணொளித் தொகுப்பில் காணக்கூடிய போதிலும் இந்நிகழ்ச்சியில் நான் ஆற்றிய உரையையும் கேள்வி,பதில் முழுவதையும் இதைக் களவாகப் பதிவு செய்தவர் அதே இணையத்தளங்களில் வெளியிடுவாராக இருந்தால் நான் சொன்ன கருத்துகள் சரியானவை எனத் தமிழ் மக்களுக்குப் புலப்படும். தற்போது கூட கூட்டத்திலிருந்தோரின் கரகோஷம் இந்தத் தொகுக்கப்பட்ட காணொளியிலிருந்து நீக்கப்பட்டதாகத் தென்படவில்லை.
இப்படியாகப் பொய்ப் பிரசாரம் செய்வதன் மூலம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் தாயகத்தில் வாழும் தமிழ் மக்களுக்கும் புலம்பெயர் தமிழ் மக்களுக்கும் இடையில் பிளவுகளை ஏற்படுத்த முயற்சிக்கின்றவர்களுக்கு உதவி செய்யுமே தவிர, தமிழ் மக்களுடைய நிலைப்பாட்டையோ அவர்களைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையோ பலப்படுத்துவதாக அமையாது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக