சனி, 9 ஜூலை, 2011

யாருக்கும் பதவியில்லை-திமுக முடிவு!ராசா, தயாநிதிக்கு பதில்

சென்னை: தயாநிதி மாறன் தனது பதவியை ராஜினாமா செய்து விட்டதால், அவருக்குப் பதில் திமுகவிலிருந்து யார் அமைச்சராக்கப்படவுள்ளார் என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில், காலியாகவுள்ள ராசா மற்றும் தயாநிதி மாறன் ஆகியோரின் இடங்களுக்கு திமுக சார்பில் யாரையும் பரிந்துரைப்பதில்லை என்ற முடிவுக்கு திமுக தலைவர் கருணாநிதி வந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

5 ஆக சுருங்கிய திமுகவின் பிரதிநிதித்துவம்

மத்திய அமைச்சரவையில் திமுகவுக்கு மொத்தம் 3 கேபினட் அமைச்சர்கள் மற்றும் 4 இணை அமைச்சர்கள் இருந்தனர். இவர்களில் தற்போது தயாநிதி மாறன், ராசா ஆகிய இரு கேபினட் அமைச்சர்களும் ராஜினாமா செய்து விட்டனர். மு.க.அழகிரி மட்டுமே கேபினட் அமைச்சராக இருக்கிறார். 7 பேராக இருந்த திமுக அமைச்சர்களின் எண்ணிக்கை தற்போது 5 ஆக குறைந்து விட்டது.

இந்த நிலையில் ராசாவுக்குப் பதில் வேறு யாரையும் திமுக சார்பில் மத்திய அமைச்சரவையில் இதுவரை சேர்க்கவில்லை. அதே நேரத்தில் தயாநிதி மாறனுக்குப் பதில் வேறு ஒரு திமுக எம்.பிக்கு பதவி தர காங்கிரஸ் தயாராக உள்ளது. அதற்கான பெயரைப் பரிந்துரைக்குமாறு திமுகவுக்கு அது கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிகிறது.

பாலு மீது பிரதமர் அதிருப்தி

திமுக சார்பில் டி.ஆர்.பாலுவை கேபினட் அமைச்சராக விருப்பம் தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால் பாலுவுக்கு அமைச்சர் பதவி தர பிரதமர் விரும்பவில்லை என்று கூறப்படுகிறது. ஏற்கனவே முதலாவது ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அமைச்சரவையில் கேபினட் அமைச்சராக இருந்தவர் பாலு. ஆனால் 2வது ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அமைச்சரவையில் அவரை சேர்க்க பிரதமர் மறுத்து விட்டார். அதற்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும் ஆதரவு தெரிவித்ததால் பாலுவுக்கு பதவி கிடைக்கவில்லை. மு.க.அழகிரி அமைசசரவையில் சேர்க்கப்பட்டதால்தான் பாலுவுக்கு இடமில்லாமல் போனதாகவும் கூறப்பட்டது.

தற்போது மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளதால் பாலுவை அந்த இடத்திற்குக் கொண்டு வர திமுக நினைத்ததாக கூறப்பட்டது. ஆனால் இப்போதும் பாலு மீது பிரதமர் அதிருப்தியில் உள்ளதால் மீண்டும் முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

ஒரு காலத்தில் டெல்லியில் திமுகவின் முகங்களாக திகழ்ந்தவர்கள், நேற்று பதவியை ராஜினாமா செய்த தயாநிதி மாறனின் தந்தை முரசொலி மாறனும், டி.ஆர்.பாலுவும்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

யாரையும் சேர்ப்பதில்லை

பாலுவைச் சேர்க்க காங்கிரஸ் மற்றும் பிரதமரிடம் தயக்கம் காணப்படுவதால் பேசாமல் யாரையும் சேர்க்க வேண்டாம் என்ற முடிவுக்கு திமுக தலைமை வந்து விட்டதாக கூறப்படுகிறது.

எனவே ராசா மற்றும் தயாநிதி மாறனுக்குப் பதில் வேறு யாரையும் திமுக பரிந்துரைக்காது என்று கூறப்படுகிறது.

'கனிமொழியைக் காப்பாற்றுவதே முக்கியம்'

திமுகவின் இப்போதைய முக்கிய கவனம் கனிமொழியை ஸ்பெக்ட்ரம் வழக்கிலிருந்து மீட்டுக் கொண்டு வருவதுதான் என்று திமுக தலைமை நினைப்பதாக கூறப்படுகிறது.

அமைச்சர் பதவியைப் பெறுவது குறித்து இப்போது கவலைப்படத் தேவையில்லை. கனிமொழி, ராசா உள்ளிட்டோரை மீட்டு கொண்டு வருவது குறித்து மட்டுமே இப்போதைக்கு தீவிர கவனம் செலுத்துவோம் என்று திமுக முன்னணித் தலைவர்கள் கருதுகிறார்களாம். கருணாநிதியும் கூட கனிமொழி குறித்துத்தான் பெரும் கவலையில் உள்ளதாக கூறப்படுகிறது.

திமுக பொதுக்குழுவில் முக்கிய முடிவு:

கோவையில் இந்த மாத இறுதியில் தி்முகவின் செயற்குழு மற்றும் பொதுக் குழுக் கூட்டம் நடைபெறவுள்ளது. அப்போது காங்கிரஸுடனான உறவு குறித்து முக்கிய முடிவு எடுக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மத்திய அமைச்சரவையில் திமுக அமைச்சர்கள் விவரம்:

ரசாயாணத்துதறை அமைச்சர் மு.க.அழகிரி, நிதித்துறை இணை அமைச்சர் எஸ்.எஸ்.பழனி மாணிக்கம், தகவல் ஒலிபரப்புத்துறை இணை அமைச்சர் ஜெகத்ரட்சகன், சமூக நீதித்துறை இணை அமைச்சர் நெப்போலியன், சுகாதாரத் துறை இணை அமைச்சர் காந்திசெல்வன்.
English summary
After Dayanidhi Maran resigned as Union Textile Minister yesterday, it's widely expected that DMK leader TR Baalu will join the Cabinet as his replacement. But PM is against making Baalu as minister again. Now DMK has only 5 ministers in union cabinet with Azhagiri as the only cabinet minister.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக