திங்கள், 4 ஜூலை, 2011

Basil:அறிவுக்களஞ்சியமாக இலங்கையை யாழ்ப்பாணம் உருவாக்குமெனவும் இந்த முயற்சிக்கா

வட பகுதி அரசியல்வாதிகளின் பொறாமைத்தனத்தால் மக்களுக்கு கிடைக்கவிருந்த வசதிகள் பாதிப்பு
- யாழ்நகரில் அமைச்சர் பசில் ராஜபக்ஷ
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் பொறியியல்பீடம் விரைவில் அமைக்கப்படுமென பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ உறுதியளித்துள்ளார்.
அதேவேளை, வடபகுதி மக்களுக்கு எதிராக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் இழைக்கப்பட்ட தவறுகள் குறித்தும் அமைச்சர் ஞாபகமூட்டியுள்ளாரென பொருளாதார அபிவிருத்தி அமைச்சு நேற்று ஞாயிற்றுக்கிழமை (03.07.2011) விடுத்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.
தகவல் தொழில்நுட்ப பூங்காவை யாழ்ப்பாணத்தில் அமைப்பதற்கான திட்டத்தை அரசாங்கம் கொண்டிருந்ததாகவும் யூ.எஸ்.எயிட்டின் உதவியுடன் இதனை மேற்கொள்ளத் திட்டமிட்டிருந்தபோது வடபகுதி மக்களுக்கு வழங்கப்படவிருந்த வசதிகளை தடை செய்வதற்கு அமெரிக்க செனட்டுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மனுவைக் கொடுத்திருந்ததாகவும் அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்திலுள்ள பாடசாலைகளுக்கு 1070 கணினிகளையும் பியானோக்களையும் விநியோகிக்கும் நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அமைச்சர் பசில் ராஜபக்ஷ இதனைத் தெரிவித்துள்ளார். இந்நிகழ்வு யாழ்.வேம்படி மகளிர் கல்லூரியில் நேற்று முன்தினம் சனிக்கிழமை மாலை இடம்பெற்றது. யாழ்ப்பாண மாவட்டத்திலுள்ள ஒவ்வொரு இரண்டாம் படிநிலை பாடசாலைகளுக்கும் தலா ஐந்து கணினிகளும் ஒரு பியானோவும் வழங்கப்பட்டன.
வடக்கில் அபிவிருத்தி வேலைகளைத் துரிதமாக மேற்கொள்வதற்கு அரசாங்கம் முன்னுரிமை கொடுத்திருப்பதாகவும் கல்வித்துறையை அபிவிருத்தி செய்வதற்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
உலகம் துரிதமாக மாற்றமடைந்து வருகிறது. வீட்டுப்பணிப்பெண்களை நாங்கள் அனுப்ப முடியாது. அதேசமயம், தொழிற்தேர்ச்சியற்ற ஊழியர்களையும் வெளிநாடுகளுக்கு அனுப்ப முடியாது. இதற்குப் பதிலாக ஆடைத்தொழிற்துறைகளையும் கணினித்தொழில்நுட்பத் தயாரிப்புகளையும் நாம் ஏற்றுமதி செய்ய வேண்டுமென்று அமைச்சர் வலியுறுத்திக் கூறியுள்ளார்.
யாழ்ப்பாணமானது உயர்கல்வியில் பல வருடங்களாக முன்னணியில் திகழ்ந்தது. பெருந்தொகையான பொறியியலாளர்களை உற்பத்தி செய்தது. அவர்கள் நாட்டின் அபிவிருத்திக்கும் கல்விக்கும் பெரும் பங்களிப்பை ஆற்றியுள்ளன. தூர இடங்களிலிருந்தும் யாழ்ப்பாணக் கல்லூரிகளில் கற்பதற்காக ஆட்கள் வருவதுண்டு. அறிவுக்களஞ்சியமாக இலங்கையை யாழ்ப்பாணம் உருவாக்குமெனவும் இந்த முயற்சிக்கான தனது பங்கினை யாழ்ப்பாணம் ஏற்கனவே பெற்றுக்கொண்டுள்ளதாகவும் அமைச்சர் கூறியுள்ளார். யாழ்ப்பாண தொழில்நுட்பக் கல்லூரியானது நவீனமயப்படுத்தப்பட்டுள்ளது. கட்டுப்பத்தையில் இல்லாத நவீன வசதிகள் இங்கு ஏற்படுத்தப்பட்டுள்ளதென அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
யாழ்ப்பாணத்தில் யூ.எஸ்.எயிட்டின் உதவியுடன் தொழில்நுட்ப பூங்காவைத் திறப்பதற்கான முயற்சிகளை அரசாங்கம் மேற்கொண்டிருந்தது. ஆனால், வடபகுதி அரசியல்வாதிகளின் பொறாமைத்தனமான செயற்பாட்டால் யாழ்ப்பாண மக்களுக்கு இந்த வசதி பறிக்கப்பட்டுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு புலிகளின் முகவராகச் செயற்பட்டது. அவர்களை தமிழ் மக்களின் பிரதிநிதிகளாக ஏற்றுக்கொள்வதானது விடுதலைப்புலிகளினால் வேறுபட்ட விதத்தில் இழைக்கப்பட்டிருந்த அதே தவறை மீண்டும் மேற்கொள்ளும் விடயமாகும். வடபகுதி மக்களுக்கு நன்மையான விடயங்களை ஏற்படுத்தாத இந்தச் சக்திகளினால் மக்கள் ஏமாற்றப்படக்கூடாதெனவும் அமைச்சர் பசில் ராஜபக்ஷ கோரிக்கை விடுத்திருக்கிறார்.
இந்நிகழ்வில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, வடபகுதி ஆளுநர் மேஜர் ஜெனரல் சி.ஏ.சந்திரசிறி,சிறுவர் அபிவிருத்தி பெண்கள் வலுவூட்டல் துறை பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் ஆகியோரும் கலந்துகொண்டு உரையாற்றினர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக