வெள்ளி, 15 ஜூலை, 2011

அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் 87 பேர் பல்டியடித்தனர்.ஜெயலலிதா வருமானத்துக்கு மீறி ஸி66 கோடி சொத்து

பெங்களூர் கோர்ட்டில் 27ம் தேதி ஆஜராக ஜெயலலிதாவுக்கு சம்மன்



சென்னை : ஆட்சியில் இருந்தபோது வருமானத்துக்கு மீறி ஸி66 கோடி சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கில் வரும் 27ம் தேதி ஜெயலலிதா கண்டிப்பாக ஆஜராக வேண்டும் என்று பெங்களூர் தனி நீதிமன்றம் நேற்று சம்மன் அனுப்ப உத்தரவிட்டது. ஜெயலலிதா 1991ம் ஆண்டு முதல் 1996ம் ஆண்டு வரை முதல்வராக இருந்தார். அப்போது, வளர்ப்பு மகனுக்கு ஆடம்பர திருமணம், அப்போதைய அமைச்சர்கள் சொத்து குவிப்பு உள்ளிட்ட பல்வேறு புகார்கள் கூறப்பட்டது. அதைத் தொடர்ந்து ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும், குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடத்த லஞ்ச ஒழிப்புத்துறையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

ஜெயலலிதா முதல்வராக இருந்த 5 ஆண்டு காலத்தில் ஸி66 கோடிக்கு சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குத் தொடர்ந்தனர். ஜெயலலிதா முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டார். அதன்பின் 2வது குற்றவாளியாக சசிகலா, 3வது குற்றவாளியாக இளவரசி, 4வது குற்றவாளியாக சுதாகரன் ஆகியோரும் சேர்க்கப்பட்டனர். இந்த வழக்குகள் குறித்து விசாரணை நடத்த, சென்னையில் சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்பட்டது. அதன்பின், 2001ம் ஆண்டு ஜெயலலிதா மீண்டும் முதல்வரானார். அதைத் தொடர்ந்து அரசு சாட்சிகளாக சேர்க்கப்பட்ட 250 பேர், தொடர்ந்து பல்டி அடித்து வந்தனர்.

இதனால் வழக்கை வேறு மாநிலத்துக்கு மாற்ற வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் திமுக பொதுச் செயலாளர் அன்பழகன், 2003ம் ஆண்டு பிப்ரவரி மாதம் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கில், டிசம்பர் மாதம் தீர்ப்பு வழங்கிய, உச்சநீதிமன்றம் பெங்களூரில் தனி நீதிமன்றம் அமைக்க வேண்டும் என உத்தரவிட்டனர். அதைத் தொடர்ந்து, 2004 பிப்ரவரி 14ம் தேதி பெங்களூரில் தனி நீதிமன்றம் அமைக்கப்பட்டது. சிறப்பு நீதிமன்றத்தின் முதல் நீதிபதியாக பச்சாபூரே இருந்தார்.

இதற்கிடையில் நீதிபதி பச்சாபூரே பதவி உயர்வு பெற்று சென்றார். பின் மனோலி என்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடந்தது. கடைசியாக இப்போது நீதிபதி மல்லிகார்ஜூனா தலைமையில் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் பல்வேறு சாட்சிகள் பல்டி அடித்ததாலும், பலர் இறந்து விட்டதாலும் முக்கியமான 45 சாட்சிகளிடம் மட்டும் மீண்டும் விசாரணை நடத்தப்பட்டது. அவர்களது வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டன. இப்போது வழக்கின் விசாரணை முழுவதும் முடிந்து விட்டது. இதன்மூலம் 14 ஆண்டு பயணத்துக்கு பின்னர் சொத்து குவிப்பு வழக்கு இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது.

அதைத் தொடர்ந்து குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஜெயலலிதா, சசிகலா ஆகியோர் மட்டும் இதுவரை நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. அதனால் இந்திய குற்றவியல் நடைமுறைச் சட்டம் 313வது விதிப்படி அவர்கள் இருவரும் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என்று அரசு வக்கீல் ஆச்சார்யா மனு தாக்கல் செய்தார். குற்றம்சாட்டப்பட்டவர்கள் 36 முறை மனு செய்துள்ளனர். அவர்கள் ஆஜராகாமல் இருப்பது நீதிமன்றத்தை அவமதிக்கும் செயலாகும் என்று ஆச்சார்யா அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

நேற்று இவ்வழக்கு விசாரணை துவங்கியதும் சசிகலா தரப்பு வழக்கறிஞர் வெங்கடேஸ்வரலு நீதிபதி மல்லிகார்ஜூனய்யாவிடம் மனு அளித்தார். அதில், இவ்வழக்கில் தொடர்புடைய ஆடிட்டர் பாலாஜியிடம் மறுவிசாரணை நடத்த வேண்டியுள்ளது. இதுதொடர்பாக உயர்நீதிமன்றத்தில் நாங்கள் அளித்த மனு மீதான விசாரணையில் தீர்ப்பு நிலுவையில் உள்ளது. அத்தீர்ப்பு இவ்வழக்கு விசாரணைக்கு முக்கியமானதாக கருதுகிறோம். எனவே, விசாரணையை ஒருவாரம் ஒத்திவைக்க வேண்டுமென்று கோரினார்.

ஜெயலலிதா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் குமார் உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள தீர்ப்பு எங்களுக்கு சாதகமாக வந்தால் சாட்சிகள் மறுவிசாரணை செய்யப்பட வேண்டும். எனவே, இவ்வழக்கு விசாரணையை ஒருவாரம் ஒத்திவைக்க வேண்டும் என்றார். இதற்கு அரசு வக்கீல் ஆச்சார்யா கடும் எதிர்ப்பு தெரிவித்தார். வழக்கை தாமதப்படுத்த வேண்டுமென்றே எதிர்தரப்பினர் இவ்வாறு கூறுகின்றனர் என்றார். வழக்கில் சாட்சிகளிடம் விசாரணை முடிந்துள்ளது. குற்றம்சாட்டப்பட்டவர்கள் நீதிமன்றத்தில் ஆஜராகி 313&1(பி) பிரிவில் அவர்களிடமிருந்து விளக்கங்கள் பெறவேண்டியுள்ள நிலையில்தான் தற்போது வழக்கு உள்ளது என்றார்.

இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி மல்லிகார்ஜூனய்யா சசிகலா தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை தள்ளுபடி செய்தார். வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்களான ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய நான்கு பேரும் 27ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராகவேண்டுமென்று உத்தரவிட்டார்.

கடந்த மாதம் நடந்தது என்ன? வழக்கை முடக்க நடந்த முயற்சி முறியடிப்பு

பெங்களூர் : பெங்களூர் தனி நீதிமன்றத்தில் கடந்த மாதம் ஜெயலலிதாவின் சொத்து குவிப்பு வழக்கை முடக்க எடுத்த முயற்சிகள் முறியடிக்கப்பட்டு நீதிதேவதையின் பார்வை வழக்கில் திரும்பியுள்ளதாக வழக்கறிஞர் வட்டாரங்கள் தெரிவித்தன. ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கு விசாரணை அதிகாரியாக சம்பந்தம் நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த மாதம் 15ம் தேதி நீதிபதி மல்லிகார்ஜூனய்யாவிடம் அவர் சீலிடப்பட்ட உறையை அளித்தார். அதில் குற்றம்சாட்டப்பட்டவர்களிடம் 173(8) பிரிவின்கீழ் மறுவிசாரணை நடத்த வேண்டும். அதற்கு அனுமதிக்க வேண்டுமென்று கோரியிருந்தார்.அரசு வக்கீல் கவனத்துக்கு கொண்டுவராமல் இதுபோன்று நேரடியாக நீதிபதியிடம் கோரிக்கை கடிதம் அளித்தது ஏன் எனக்கேட்ட நீதிபதி அதுகுறித்து விளக்கமளிக்க சம்பந்தத்திடம் உத்தரவிட்டார்.

ஜூன் 18ம் தேதி அதுகுறித்து விளக்கமளித்த விசாரணை அதிகாரி நேரடியாக நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தது தவறு எனக்கூறி நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினார். நீதிபதி விசாரணை அதிகாரியை கண்டித்து அவர் கோரிக்கை மனுவை தள்ளுபடி செய்தார்.  ஜெயலலிதா மீதான ஓட்டல் வழக்கு ஒன்றில் மறுவிசாரணை ஏற்கப்பட்டு அவ்வழக்கே தள்ளுபடி செய்யப்பட்டதை சுட்டிக்காட்டும் வழக்கறிஞர்கள் அதுபோன்ற முயற்சியே பெங்களூர் தனிநீதிமன்றத்திலும் நடந்தது. ஆனால், வழக்கை முடக்க எடுத்த முயற்சிகள் முறியடிக்கப்பட்டன. ஜெயலலிதா ஆஜராக நீதிமன்றம் உத்தரவிட்டதன்மூலம் நீதி தேவதையின் பார்வை வழக்கின் பக்கம் திரும்பியுள்ளது என்கின்றனர்.


சொத்துக்குவிப்பு வழக்கு இன்று வரை

= வழக்கு ஆவணங்கள் கேட்டு ஜெயலலிதா தரப்பில் 2010 மார்ச் 23ம் தேதி விண்ணப்பம் அளிக்கப்பட்டது.

= அரசு வழக்கறிஞர் பி.வி.ஆச்சார்யா, வழக்கு தொடர்பான ஆவணம், குற்றம் சாட்டப்பட்டவர்கள் மற்றும் முக்கிய சாட்சிகளுக்கு 1997லேயே வழங்கப்பட்டுள்ளது. எனவே, மீண்டும் வழங்க வேண்டிய அவசியமில்லை. வழக்கை தாமதப்படுத்த குற்றம்சாட்டப்பட்டவர்கள் சார்பில், பல குறுக்கு வழிகள் பின்பற்றப்படுகிறது. இதை ஏற்றுக்கொள்ளாமல், உச்ச நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவுப்படி, விசாரணையை விரைவில் முடிக்க வழி காண வேண்டும் என்று வலியுறுத்தினார்.

= சொத்து குவிப்பு வழக்கு ஆவணங்கள் தமிழ் மொழியில் இருந்து ஆங்கிலத்திற்கு மொழி மாற்றம் செய்துள்ளதில் குளறுபடி உள்ளதால், மறு மொழி மாற்றம் செய்ய வேண்டும் என்று ஜெயலலிதா தரப்பில் தாக்கல் செய்த மனுவை பெங்களூர் தனி நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

= ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கு ஆவணங்கள் தமிழ் மொழியில் இருந்து ஆங்கிலத்திற்கு மொழி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதில் பல தவறுகள் இருப்பதால், மறு மொழி மாற்றம் செய்ய வேண்டும். மொழி மாற்றம் செய்த பின் அரசு வழக்கறிஞர், எதிர்தரப்பு வழக்கறிஞர்கள் மற்றும் சாட்சிகள் முன்னிலையில் பரிசீலனை செய்து அவர்கள் ஏற்றுகொண்ட பின்னால் சாட்சிகள் மறு விசாரணை நடத்த வேண்டும் என்று வழக்கறிஞர் நவநீதகிருஷ்ணன் வலியுறுத்தினார்.

= ஆவணங்கள் மொழி மாற்றம் செய்துள்ளதில் சில இடங்களில் லேசான தவறு நடந்துள்ளது உண்மை தான். அதற்காக மொத்த ஆவணங்களையும் மறு மொழி மாற்றம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்க முடியாது. தவறு நடந்துள்ளதை சரிப்படுத்த வசதி செய்யப்படும். தவறுகளை சரி செய்ய திறமையான மொழி பெயர்ப்பாளர் நியமனம் செய்யப்படும். அவர்களுடன் இரு தரப்பு வழக்கறிஞர்கள் மற்றும் சாட்சிகளை உடன் வைத்து ஒப்புதல் பெறப்படும் என்று கூறி ஜெயலலிதா தரப்பில் தாக்கல் செய்த மனுவை நீதிபதி தள்ளுபடி செய்தார்.

ரூ.66.65 கோடி சொத்து விவரம்

1. கோடநாடு நிலம்
2. ஐதராபாத் தோட்டம்,
கட்டிடம்
3. சிறுதாவூர் நிலம், பங்களா
4. நெல்லை மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் சேராகுளம், மீரா குளம் அருகே சொத்து
5. தி.நகர்
6. அண்ணாநகர்
7. அபிராமபுரம்
8. மயிலாப்பூர்
ஆகிய இடங்களில் அசையா சொத்துக்கள். தவிர நகைகள், கார்கள் மற்றும் பல கோடி மதிப்புள்ள பொருட்கள்.

1500 சாட்சிகள்

சொத்து குவிப்பு வழக்கில் மொத்தம் 1500க்கும் மேற்பட்டவர்கள் சாட்சிகளாக சேர்க்கப்பட்டனர். அதில் 259 பேர் மட்டும் விசாரிக்கப்பட்டனர். 2வது முறையாக அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் 87 பேர் பல்டியடித்தனர். அதனால் வழக்கு பெங்களூருக்கு மாற்றப்பட்டது. பின் மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்தவுடன் 87 பேர் பட்டியல் என்பது 45 ஆக குறைக்கப்பட்டது. அதில் 25 பேர் அரசு ஊழியர்கள். மற்றவர்கள் சொத்துக்களை விற்பனை செய்தவர்கள்.

விசாரணை காலம் நீண்டது

 பெங்களூர் தனி நீதிமன்றத்தில் 2010ம் ஆண்டு மே 3, 7, 25ம் தேதிகளிலும் ஜூன் 2, 14, 26ம் தேதிகளிலும் வழக்கு விசாரணைக்கு வந்தது. குற்றம்சாட்டப்பட்டவர்கள் தரப்பில் உடல்நலம் உள்ளிட்ட காரணங்களை காட்டி விசாரணையை ஒத்திவைக்க கோரிக்கை விடுக்கப்பட்டது. அதனால் வழக்கின் விசாரணை காலம் நீண்டது.


14 ஆண்டுகளாக நடக்கும் வழக்கு

1991முதல் 1996ம் ஆண்டுவரை நடந்த ஆட்சியின்போது சொத்து சேர்த்த வழக்கு இது. 1997ம் ஆண்டு சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்பட்டு வழக்கு நடந்து வந்தது. 2001ல் அதிமுக ஆட்சிக்கு வந்ததும், வழக்கு விசாரணையில் தொய்வு ஏற்பட்டது. பின் 2006ம் ஆண்டு திமுக ஆட்சிக்கு வந்தவுடன் விசாரணை தொடங்கியது. அதன்பின் பல முறை அவர்கள் பல்வேறு காரணங்களைக் காட்டி மனு தாக்கல் செய்த வண்ணம் இருந்தனர்.

அதில் 7 ஆயிம் பக்கங்கள் கொண்ட ஆவணங்களை தமிழில் மாற்றித் தரவேண்டும் என்றனர். அதற்கும் நீதிமன்றம் அனுமதி கொடுத்தது. பின் வக்கீல் மாறியதால், தள்ளி வைக்க வேண்டும், உடல் நிலை சரியில்லை என்று பல்வேறு காரணங்களைக் காட்டி தள்ளி வைக்கப்பட்டே வந்தது. இப்போது இறுதியாக ஜெயலலிதா ஆஜராக வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

உத்தரவு போட்டபின் விவாதம் இல்லை ஜெயலலிதா வக்கீல் கோரிக்கை நிராகரிப்பு

ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்களிடமிருந்து விளக்கம் பெறவேண்டிய சட்டப்பிரிவு குறித்து விவாதம் நடத்த ஜெயலலிதா தரப்பு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்தார். அது நிராகரிக்கப்பட்டது. சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா 27ம் தேதி ஆஜராக தனிநீதிமன்றம் உத்தரவிட்டது. இதனை எதிர்பார்க்காத எதிர்தரப்பு வழக்கறிஞர்கள் அதிர்ச்சியடைந்தனர். ஜெயலலிதாவை மட்டுமாவது ஆஜராவதிலிருந்து தவிர்க்க வைக்க அவர்கள் தீவிரமாக முயன்றனர்.

ஜெயலலிதா தரப்பு வழக்கறிஞர் குமார், Ôஒரு வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்களிடமிருந்து விளக்கம் பெறுவது குறித்த 313&1(பி) பிரிவு குறித்து உச்சநீதிமன்றம் ஒரு வழக்கில் சில திருத்தங்களை கூறியுள்ளது. அது எங்களுக்கும் பொருந்தும். அதுகுறித்து விவாதிக்க அனுமதி அளிக்க வேண்டும்Õ என்றார். Ôகுற்றம்சாட்டப்பட்டவர்கள் ஆஜராக உத்தரவு பிறப்பித்த நிலையில் இதுபோன்று விவாதிக்க அனுமதிக்க முடியாது. மேலும், விவாதத்துக்காக நீங்கள் முறையாக விண்ணப்பிக்கவில்லை. எனவே, இதனை ஏற்கமுடியாதுÕ என்று நீதிபதி தெரிவித்தார்.

45 பேரிடம் மறு விசாரணை

ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கில் 259பேர் சாட்சிகளாக சேர்க்கப்பட்டிருந்தனர். அவர்களில் 45 பேரிடம் மறு விசாரணை நடத்த வேண்டுமென்று அரசு வழக்கறிஞர் ஆச்சார்யா உயர்நீதிமன்றத்தில் மனு செய்தார்.  அவர்களிடம் மார்ச் 18ம் தேதி துவங்கி 27ம் தேதி வரை மறு விசாரணை நடைபெற்றது. 45 பேரில் 2 பேர் இறந்துவிட்டனர். ஒருவரிடம் விசாரணை தேவையில்லை என்று அரசு தரப்பே நீதிமன்றத்தில் தெரிவித்தது. எனவே, 42 பேரிடம் மட்டுமே மறுவிசாரணை நடந்தது. தினமும் ஐந்துபேரிடம் மறுவிசாரணை நடைபெற்றது. பெங்களூரில் விசாரிக்கப்பட்ட முக்கிய சாட்சிகள் விவரம்:

எஸ்.ராதகிருஷ்ணா, எம்.சுப்பையா, எம்.வேலாயுதம், மாரியப்பன், ஏ.ஜெயபால், கோவிந்தன், கிருஷ்ணமூர்த்தி, ஜெரால்ட் வில்சன், ஆர்.ராஜேந்திரா, பார்த்தசாரதி, வீரபாகு, வி.பாஸ்கரன், முகமது யாசூப், ஜெயராமன், என்.கிருஷ்ணமூர்த்தி, திருத்துவராஜ், எஸ்.எஸ்.ஜவஹர், கே.டெல்லிராஜன், கே.கதிரேசன், அமானுல்லா மரைக்காயர், சி.சிவா, வி.அய்யாதுரை, ஜேம்ஸ்பெட்ரிக், எம்.எம்.ஜெ.நேசமணி, சோமசுந்தரம், பிரசாத், நாகேஷ்வரராவ், சிவாஜிராவ், ஜி.கோபிநாத், மணி (எ)மாறன், மதன்லால், மோகன், சுப்பராஜ், ஜி.என்.கோபால்ரத்தினம், எம்.ஸ்ரீஹரி, ஆர்.ரமேஷ், ஏ.வின்சன்ட், சலபதிராவ், கிரிசந்திரன், அஜீத் அகமது, எம்.வி.பாலாஜி, அனந்தபத்மநாபன்.

விடுவிக்க கோரிய மனுக்கள் தள்ளுபடி

சொத்து குவிப்பு வழக்கிலிருந்து தன்னை விடுவிக்கக்கோரி ஜெயலலிதா தாக்கல் செய்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டு விசாரணை தொடர்ந்து வந்தது குறிப்பிடத்தக்கது.
சொத்து குவிப்பு வழக்கிலிருந்து தன்னை விடுவிக்க வேண்டுமென்று ஜெயலலிதா தாக்கல் செய்த மனுவை கர்நாடக ஐகோர்ட்டில் நீதிபதி கேசவநாராயண் 2010 மார்ச் 18ல் தள்ளுபடி செய்தார். பெங்களூர் தனி நீதிமன்றத்தில் இதேகோரிக்கையை வைத்த ஜெயலலிதாவின் மனு 2010 ஏப்ரல் 22ல் தள்ளுபடியானது.

மொழிபெயர்ப்பு குளறுபடிகள்

ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கில் சாட்சி ஆவணங்கள் மொழிபெயர்ப்பில் குளறுபடி உள்ளதாக கூறப்பட்டு விசாரணை நீட்டிக்கப்பட்டது.
2010 ஜூலை 21ல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் தரப்பில் தனி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், ஆவணங்கள் மொழிபெயர்ப்பில் உள்ள தவறுகள் சுட்டிக்காட்டப்பட்டு அவற்றை சரிசெய்ய கோரிக்கை விடப்பட்டது. இம்மனுவை தனி நீதிமன்றம் நிராகரித்தது. இதுதொடர்பாக உயர்நீதிமன்றத்தில் மனு செய்து மொழிபெயர்க்க அனுமதி பெறப்பட்டது.

வழக்கு ஆவணங்களை தமிழில் பெயர்க்க வழக்கறிஞர் ராஜ்கோபால் நியமிக்கப்பட்டார். செப்.23ம் தேதி முதல் அவர் பணிகளை துவக்கி 2011 ஜனவரியில் நீதிமன்றத்தில் ஒப்படைத்தார். அதில் 17 சாட்சிகளின் மொழிபெயர்ப்பில் தவறு உள்ளதாக சுட்டிக்காட்டிய ஜெயலலிதா தரப்பு வழக்கறிஞர் நவநீதகிருஷ்ணன் மீதமுள்ள சாட்சியங்களை  பரிசீலிப்பதற்காக அவகாசம் கோரினார். அதற்கு அரசு தரப்பு எதிர்ப்பு தெரிவித்தது. வழக்கு விசாரணையின்போது சிறுசிறு தவறுகளை சரிசெய்ய வேண்டும் என அரசு தரப்பில் கூறப்பட்ட யோசனையை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது. மார்ச் 9 முதல் விசாரணை தொடர்ந்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக