செவ்வாய், 19 ஜூலை, 2011

ஜெயேந்திரர், விஜயேந்திரரிடம் கேட்கப்பட்ட 554 கேள்விகள்

புதுச்சேரி : காஞ்சி சங்கரராமன் கொலை வழக்கில் ஜெயேந்திரர், விஜயேந்திரர் ஆகியோர் புதுவை கோர்ட்டில் ஆஜராகினர். காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் மேலாளர் சங்கரராமன், கடந்த 2004ம் ஆண்டு செப்டம்பர்  3ம் தேதி கொலை செய்யப்பட்டார். விஷ்ணுகாஞ்சி போலீசார் விசாரித்து, காஞ்சி சங்கராச்சாரியார்கள் ஜெயேந்திரர், விஜயேந்திரர் மற்றும் சங்கரமட நிர்வாகி சுந்தரேச அய்யர், ரகு உள்ளிட்ட 24 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த வழக்கு புதுவை முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடக்கிறது. அரசு சாட்சிகளாக 370 பேர் சேர்க்கப்பட்டனர். இதில் 171 சாட்சிகள் தகுதியற்றதாக கருதி நீக்கப்பட்டது. 189 சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டது. இதுவரை 81 பேர் பிறழ் சாட்சியம் அளித்துள்ளனர். சாட்சிகளிடம் குறுக்கு விசாரணை முடிந்த நிலையில், குற்றம் சாட்டப்பட்டுள்ள ஜெயேந்திரர், விஜயேந்திரர் உள்பட 24 பேரும் 18ம் தேதி ஆஜராக தலைமை நீதிபதி ராமசாமி உத்தரவிட்டார்.

அதன்படி, ஜெயேந்தரரும், விஜயேந்திரரும் நேற்று மதியம் ஆஜராகினர். குற்றம்சாட்டப்பட்டவர்களில் முதல் 4 பேராக ஜெயேந்திரர், விஜயேந்திரர், ரகு, சுந்தரேச அய்யர் ஆகியோர் விசாரிக்கப்பட்டனர். சாட்சி வாரியாக 196 பக்கம் கொண்ட மொத்தம் 554 கேள்விகள் தயார் செய்து வைக்கப்பட்டிருந்தது. பெரும்பாலான கேள்விகளுக்கு தெரியாது எனவும், பொய் எனவும் பதில் அளித்தனர். 3 மணிக்கு தொடங்கிய விசாரணை, 4.30 மணிக்கு முடிவடைந்தது.

வழக்கு விசாரணை இன்றும் தொடர்கிறது. இதில், ஜெயேந்திரர், விஜயேந்திரரிடம் விசாரணை முடிக்கப்பட்டு விட்டதால் ஆஜராக மாட்டார்கள் என தெரிகிறது. ரகு, சுந்தரேச அய்யர் உள்பட 22 பேர்களும் ஆஜராவார்கள். விசாரிக்கப்படாத 20 பேர்களிடம், வரிசையாக விசாரணை நடக்கும். இன்றும், நாளையும் விசாரணை நடக்க உள்ளது. பலத்த பாதுகாப்பு: ஜெயேந்திரர், விஜயேந்திரர் நேற்று ஆஜரானதையொட்டி புதுவை கோர்ட் வளாகத்தில் காலை முதலே ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர். வடக்கு எஸ்பி சிவதாசன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக