வெள்ளி, 22 ஜூலை, 2011

பஞ்சாயத்துகளில் பெண்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு : அமைச்சரவை ஒப்புதல்

பஞ்சாயத்து அமைப்புகளில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு என்ற நிலையை மாற்றி, 50 சதவீத இடஒதுக்கீடு அளிக்க வகை செய்யும் சட்ட திருத்த மசோதாவுக்கு, மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது. பெண்கள் என்று வருகின்ற இடத்தில் எல்லாம், கிராமப்புற பெண்கள் என வரும் வகையில், அரசியல் சட்டத்தை 110வது முறையாக திருத்தம் செய்வதற்கும் அனுமதி வழங்கப்பட்டது. பஞ்சாயத்து அமைப்புகளில் பெண்களுக்கு தற்போது மூன்றில் ஒரு பங்கு, அதாவது 33 சதவீத இடஒதுக்கீடு இருந்து வருகிறது. இதை மாற்றி, பஞ்சாயத்து மற்றும் உள்ளாட்சி அமைப்புகளில் ஆண்களுக்கு நிகராக பெண்களுக்கும் பாதிக்கு பாதி இடஒதுக்கீடு அளிக்க வேண்டுமென கோரிக்கை எழுந்தது. இந்த கோரிக்கையை ஏற்று, பெண்களுக்கும் 50 சதவீத இடஒதுக்கீட்டை அளிக்க வகை செய்யும் மசோதா, பார்லிமென்டில் அறிமுகப்படுத்தப்பட்டது. கடந்த 2009 நவம்பர் 26ம் தேதியன்று, லோக்சபாவில் இந்த மசோதா அறிமுகப்படுத்தப்பட்டு, அதன்பின் பார்லிமென்ட் நிலைக்குழுவிற்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதன் சாதக, பாதகங்களை அலசி ஆராய்ந்த பார்லிமென்ட் நிலைக்குழு, மசோதாவை அப்படியே ஏற்றுக் கொள்வதாகவும் தெரிவித்தது. ஆனாலும், ஒரே ஒரு திருத்தத்தை பார்லிமென்ட் நிலைக்குழு பரிந்துரை செய்தது. அதாவது, மசோதாவில் எந்த இடத்தில் எல்லாம் பெண்கள் என்று மட்டும் வருகிறதோ, அந்த இடங்களில் எல்லாம் கிராமப்புற பெண்கள் என்று மாற்ற வேண்டுமென யோசனை தெரிவித்தது. இந்த மாற்றத்தை மத்திய அமைச்சரவை ஏற்றுக் கொள்வதாக நேற்று அறிவித்தது. இந்த தகவலை மத்திய அமைச்சரவை கூட்டத்திற்கு பின், நிருபர்களை சந்தித்த அமைச்சர் அம்பிகா சோனி தெரிவித்தார்.
அதன்படி, 2009ம் ஆண்டு மசோதாவிற்காக அரசியல் சட்டத்தின் 110வது திருத்தத்தை செய்வதற்கு, மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது. இந்த மசோதா, பார்லிமென்டின் மழைக்கால கூட்டத்தொடரில் நிறைவேற்றப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த இடஒதுக்கீடு என்பது பஞ்சாயத்து அமைப்புகளின் அனைத்து நிலைகளுக்கும் பொருந்தும். தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின வகுப்பினருக்கான இடஒதுக்கீடுகளிலும் பொருந்தும். நாகாலாந்து,மேகாலயா மறறும் மிசோரம் மாநிலங்களுக்கு பொருந்தாது.
தற்போது நாடு முழுவதும் உள்ள பஞ்சாயத்து அமைப்புகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளாக மொத்தம் 28.17 லட்சம் பேர் இருக்கின்றனர். இவர்களில், 36.87 சதவீதம் பேர் பெண்களாக உள்ளனர். தற்போது புதிதாக அறிமுகப்படுத்தப்படும் சட்டம் அமலுக்கு வந்தால், கூடுதலாக 14 லட்சம் பெண்கள், பஞ்சாயத்து அமைப்புகளில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

பினாமி நில பரிமாற்றங்களை தடுக்க புதிய சட்டம் : பினாமி நில பரிமாற்றங்களை கட்டுப்படுத்துவதற்கு புதிய சட்டம் கொண்டு வருவதற்கும் மத்திய அமைச்சரவை அனுமதி வழங்கியது. பினாமி ஆள் என்றால் என்ன? பினாமி சொத்துக்களை அடையாளம் காண்பது எப்படி? என்பது உள்ளிட்ட பல விஷயங்களையும் ஆராய்ந்து, அதன்பிறகு இதற்கான சட்டம் இறுதி பெறும். இந்த சட்டம், சிவில் கோர்ட் எல்லைக்கு உட்பட்டதாக இருக்கும்.
இருப்பினும், பரம்பரை சொத்துக்களை அவரவர் தலைமுறைகளில் மாற்றிக் கொள்வதற்கு இந்த சட்டம் எந்த தடையும் செய்யாது. தற்போதுள்ள பினாமி பரிமாற்றங்கள் தடைச் சட்டம் -1988க்கு பதிலாக, இனி புதிய பினாமி பரிமாற்றங்கள் தடைச் சட்டம் -2011 கொண்டு வரப்படும். இந்தப் புதிய சட்டம் அமலுக்கு வந்தால், அதிலுள்ள விதிமுறைகளை மீறுவோர்க்கு ஆறு மாதம் முதல் இரண்டாண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்க முடியும். அத்துடன் அபராதமும் விதிக்கலாம். நிருபர்கள் சந்திப்பின் போது, கர்நாடக முதல்வர் எடியூரப்பா குறித்து நிருபர்கள் கேட்ட கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் அம்பிகா சோனி, "ஆட்சி அதிகாரத்திற்கு வருபவர்கள் மிகவும் வெளிப்படையாக இருந்தாக வேண்டுமென்று மக்கள் விரும்புகின்றனர். கர்நாடக மாநில லோக் ஆயுக்தா கோர்ட், அம்மாநில முதல்வர் எடியூரப்பா மீது ஊழல் குற்றம் சாட்டியுள்ளது. இதை ஏற்றுக் கொண்டு எடியூரப்பா தன் முதல்வர் பதவியை ராஜினமா செய்ய வேண்டும். அவர் இவ்விஷயத்தில் மனச்சாட்சியுடன் நடந்து கொள்வார் என்று மத்திய அரசு எதிர்பார்க்கிறது' என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக