செவ்வாய், 12 ஜூலை, 2011

திமுகவுக்கான 2 இடங்களுக்கு தனி அமைச்சர்களை அறிவிக்காத பிரதமர்- காத்திருக்க முடிவு?

டெல்லி: திமுக வசம் இருந்த தொலைத் தொடர்பு மற்றும் ஜவுளித்துறை ஆகிய இரு இலாகாக்களையும் தனி அமைச்சர்களிடம் ஒப்படைக்காமல் கூடுதல் ஒதுக்கீடாகவே மத்திய அரசு அறிவித்துள்ளது. இதன் மூலம் திமுகவுக்கான அமைச்சர்களை அக்கட்சி அறிவிக்கும் வரை காத்திருக்க பிரதமரும், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

திமுகவிடம் மொத்தம் 3 கேபினட் அமைச்சர்கள் இருந்தனர். இவர்கள் போக 4 இணை அமைச்சர்கள் உள்ளனர். கேபினட் அமைச்சர்களில் முதலில் ராசா ராஜினாமா செய்தார். அவரது தொலைத் தொடர்புத்துறை கபில் சிபலிடம் கூடுதல் பொறுப்பாக ஒப்படைக்கப்பட்டது.

சமீபத்தில் தயாநிதி மாறன் பதவி விலகினார். இதனால் அவரது இலாகாவான ஜவுளித்துறை காலியானது. இந்த நிலையில் தற்போதைய அமைச்சரவை மாற்றத்தில் ஜவுளித்துறையை கூடுதல் பொறுப்பாக ஆனந்த் சர்மாவிடம் பிரதமர் ஒப்படைத்துள்ளார்.

தற்போதைய அமைச்சரவை மாற்றத்தின்போது திமுக சார்பில் புதிதாக 2 பேரை அறிவிக்குமாறு பிரதமரும், சோனியா காந்தியும் திமுக தலைமைக்குக் கோரிக்கை விடுத்திருந்தனர். இதுதொடர்பாக நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜியும் நேரில் சென்னை வந்து திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்துப் பேசினார்.

ஆனால் திமுக சார்பில் 2 பேரை சேர்ப்பதில்லை என்ற முடிவை திமுக தலைமை எடுத்திருப்பதாக செய்திகள் வெளியாகின. தற்போதைய அமைச்சர்கள் பட்டியலைப் பார்க்கும்போது அது உண்மைதான் என்பது தெரிய வருகிறது.

இருப்பினும் திமுகவுக்கான இரு துறைகளையும் வேறு தனி அமைச்சர்களுக்கு பிரதமர் ஒதுக்கவில்லை. மாறாக ஆனந்த் சர்மா மற்றும் சிபலிடமே கூடுதல் பொறுப்பாக அவர் கொடுத்துள்ளார். இதன் மூலம் திமுகவின் முடிவுக்காக காத்திருக்க பிரதமர் தீர்மானித்திருப்பதாக தெரிகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக