வெள்ளி, 8 ஜூலை, 2011

11 வயது பெண்ணை மணந்த 50 வயது நரிக்குறவர்.தடுக்க வேண்டிய போலீசாரே சீக்ரம் முடியுங்க என்ற கொடுமை

2 பிராந்தி பாட்டில்; ஒரு பீர் பாட்டில் சீர் கொடுத்து
11 வயது பெண்ணை மணந்த 50 வயது நரிக்குறவர்

திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு அருகேயுள்ள மேலானூர் கிராமத்தில் வசித்துவரும் ஜெயபால்சிங் (50) என்ற நரிக்குறவர் பெரணமல்லூர் காவல் நிலையம் அருகே மூலிகை மருந்து தயார் செய்து விற்பனை செய்து வருகிறார்.
இவருக்குத் திருமணமாகவில்லையாம். 3 கணவர்களை இழந்த ஒரு பெண்ணுடன் தாலி கட்டாமல் குடும்பம் நடத்தி வந்தாராம். இவர்களுக்கு 3 பெண், 4 ஆண் குழந்தைகள் உள்ளனர்.
இதனால் நரிக்குறவர் சமுதாயத்திலிருந்து இவர்களது மகன் மற்றும் மகள்களுக்கு யாரும் பெண் கொடுப்பதும் இல்லை. பெண் எடுப்பதும் இல்லை எனக் கூறப்படுகிறது.

இந்நிலையில், நரிக்குறவர்கள் சங்க சமுதாய தலைவர் ஒருவரை ஜெயபால்சிங் சந்தித்து தனது வேதனையைக் கூறியுள்ளார்.

இதற்கு பரிகாரமாக நரிக்குறவர் சமுதாயத்தைச் சேர்ந்த பருவம் அடையாத பெண்ணை திருமணம் செய்துகொண்டால் உன்னுடைய பிரச்னைகள் எல்லாம் தீர்ந்து போகும் என்று அந்த சமுதாய தலைவர் கூறியுள்ளார்.
இதனால் ஜெயபால்சிங் உடனடியாக காஞ்சிபுரம் சென்று அங்கு வசித்துவரும் லட்சுமணன்-பேபி என்ற நரிக்குறவ தம்பதியரின் 11 வயது மகள் ராதிகாவை திருமணம் செய்துகொள்ள நிச்சயம் செய்துள்ளார்.

இதற்காக பெண் வீட்டாருக்கு ரூ.30 ஆயிரம், இரு பிராந்தி பாட்டில்கள், ஒரு பீர் பாட்டில் சீர் கொடுத்து நிச்சயதார்த்தத்தை முடித்ததாகத் தெரிகிறது. மேலும், வியாழக்கிழமை காலை பெரணமல்லூர் காவல் நிலையம் அருகே ஜெயபால்சிங், ராதிகாவின் கால் விரலில் மோதிரம் அணிவித்து திருமணம் செய்துகொண்டாராம்.

தனக்கு திருமணம் நடந்ததுகூட தெரியாத ராதிகா, அங்குள்ள சிறுவர்களுடன் விளையாடிக் கொண்டிருந்துள்ளார்.

ஊருக்கு மத்தியில், காவல் நிலையம் அருகேயே இச்சம்பவம் நடைபெற்றது அப்பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

திருமணத்தை தடுத்து நிறுத்த வேண்டிய போலீசார், திருமணத்தை முடித்துக்கொண்டு சீக்கிரம் இடத்தை காலி செய்யுங்கள்' என்று கூறியதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக