செவ்வாய், 5 ஜூலை, 2011

மன்மோகன் பெரும்பான்மையை இழக்கிறார்? 10 MP க்கள் ராஜினாமா

மத்திய அரசுக்கு சிக்கல் : 10 எம்.பி.,க்கள் ராஜினாமா காரணமாக பலம் குறையும்தனி தெலுங்கானா மாநிலம் அமைக்க வலியுறுத்தி, காங்கிரசை சேர்ந்த 10
எம்.பி.,க்கள் தங்களது பதவியை ராஜினமா செய்துள்ளனர். தெலுங்கானா விவகாரம் மீண்டும் தலைதூக்கியுள்ளதால், மத்திய அரசுக்கு பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. லோக்சபாவில் காங்கிரஸ் எம்.பி.,க்கள் பலம் குறையும். தனிப் பெரும்பான்மைக்கு வேறு கட்சிகள் ஆதரவை அதிகம் நாட வேண்டி வரும்.

ஆந்திராவை பிரித்து தெலுங்கானா தனி மாநிலம் உருவாக்கிட வேண்டுமென்று கோரிக்கை இருந்து வருகிறது. இந்த கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி, காங்கிரசை சேர்ந்த எம்.பி.,க்கள் 10 பேர் தங்களது பதவியை ராஜினாமா செய்ய போவதாக அறிவித்திருந்ததை அடுத்து டில்லியில் பரபரப்பு உருவானது.நார்த் அவென்யூவில் உள்ள பொன்னம் பிரபாகர் என்ற எம்.பி.,யின் வீட்டில் காலையில் மூத்த எம்.பி.,யான கேசவ் ராவ் தலைமையில் எம்.பி.,க்கள் கூடினர். பின்னர் சிறிய ஆலோசனைக்கு பிறகு அங்கிருந்து பார்லிமென்டிற்கு அனைவரும் கிளம்பினர். ஏற்கனவே சபாநாயகரிடம் தங்களது முடிவை தெரிவித்திருந்த எம்.பி.,க்கள், 11 மணிக்கு சபாநாயகரை சந்திக்க முன் அனுமதி பெற்றிருந்தனர்.

ஆனால், போக்குவரத்து நெரிசல் காரணமாக குறித்த நேரத்தில் எம்.பி.,க்கள் அடைய முடியவில்லை. 15 நிமிடங்கள் காலதாமதமானதால், அதுவரை காத்திருந்த சபாநாயகர், தன் அலுவலகத்தை விட்டு இல்லத்திற்கு கிளம்பிச் சென்று விட்டார். இதனால் பரபரப்பு கிளம்பியது. ஏற்கனவே சொல்லி வைத்து தான் இதுபோல செய்துள்ளனர் என்றும், இது "செட்-அப் நாடகம்' என்றும் கருத்து தெரிவித்தனர். இதனால், எம்.பி.,க்கள் கடும் கோபம் அடைந்தனர்.

இதையடுத்து, சபாநாயகர் இல்லத்தை தொடர்பு கொண்டு உடனடியாக வந்து ராஜினாமா கடிதங்களை பெற்றுக் கொள்ளும்படி கோரிக்கை வைத்தனர். தன்னால் மாலை 5 மணிக்கு தான் வர இயலும் என சபாநாயகர் தரப்பில் கூறவே, எங்களால் அவ்வளவு நேரம் காத்திருக்க முடியாது என, எம்.பி.,க்கள் கூறினர். இதையடுத்து 2 மணிக்கே மீண்டும் பார்லிமென்டிற்கு சபாநாயகர் வந்து சேர்ந்தார்.பின்னர் லோக்சபா எம்.பி.,க்கள் டாக்டர் எம்.ஜெகன்னாத், டாக்டர் விவேகானந்தன், பொன்னம் பிரபாகர், சுக்கிந்தர் ரெட்டி, ராஜகோபால் ரெட்டி, ஸ்ரீசுல் ராஜய்யா, பல்ராம் நாயக் ஆகிய ஏழு பேரும் தனித்தனியே சபாநாயகரிடம் ராஜினாமா கடிதங்களை அளித்தனர்.

இவர்கள் ஒவ்வொருவரையும் தனித்தனியே அழைத்து பேசிய சபாநாயகர், "யாருடைய வற்புறுத்தலின் பேரில் இல்லாமல் ராஜினாமா செய்கிறீர்களா?' என்று கேட்டறிந்தார்.தவிர அமெரிக்காவில் இருந்து மதுயாக்ஷி கவுட் எம்.பி., அனுப்பியிருந்த பேக்ஸ் கடிதத்தையும், உடல்நலக் குறைவு காரணமாக தன் தாயாருடன் ஐதராபாத்தில் இருப்பதாக சுரேஷ் ஷெட்கர் எம்.பி., அனுப்பியிருந்த பேக்ஸ் கடிதத்தையும் சபாநாயகர் பெற்றுக் கொண்டார்.

தெலுங்கானா பகுதியைச் சேர்ந்தவரும், மூத்த காங்கிரஸ் தலைவருமான கேசவ்ராவும் நேற்று தனது ராஜ்யசபா பதவியை ராஜினாமா செய்தார்.ராஜ்யசபா தலைவர் ஹமீத் அன்சாரியை தொடர்பு கொண்ட போது, தம்மால் வர இயலாத சூழ்நிலையில் இருப்பதாக கூறி, தனது செயலரை அன்சாரி அனுப்பி வைப்பதாக கூறினார்.இதையடுத்து அன்சாரியின் செயலரிடம் தனது ராஜினாமா கடிதத்தை கேசவ் ராவ் அளித்தார். ராஜினாமா கடிதம் அளிக்கப்பட்டதற்கான அத்தாட்சி ரசீதும் அவர் பெற்றுக் கொண்டார். ராஜ்யசபாவில் ஆந்திர காங்கிரசை சேர்ந்த இன்னும் 4 எம்.பி.,க்கள் இருந்தாலும் அவர்கள் ராஜினாமா செய்யவில்லை.

சபாநாயகரை சந்தித்து விட்டு வெளியில் வந்ததும், அங்கிருந்த நிருபர்களிடம் கேசவ் ராவ் கூறியதாவது:தெலுங்கானா கோரிக்கை என்பது பல ஆண்டுகளாக இருந்து வரும் ஒன்று. 2004ம் ஆண்டு தேர்தலில், காங்கிரஸ் தனது தேர்தல் அறிக்கையில் இதுகுறித்து வாக்குறுதி அளித்திருந்தது. ஆட்சிக்கு வந்தவுடன் குறைந்தபட்ச பொதுசெயல் திட்டத்திலும் கூட தெலுங்கானா வழங்குவோம் என குறிப்பிடப்பட்டிருந்தது.அதேபோல 2009ம் ஆண்டு தேர்தல் அறிக்கையிலும், தெலுங்கானா குறித்து வாக்குறுதி அளிக்கப்பட்டது. அனைத்துக் கட்சி கூட்டத்திலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 2009ம் ஆண்டு, உள்துறை அமைச்சர் சிதம்பரம் வெளிப்படையாகவே தெலுங்கானா அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவித்தார். ஸ்ரீகிருஷ்ணா கமிஷன் அமைக்கப்பட்டு கருத்துக்கள் கேட்கப்பட்டன. இத்தனை நடந்தும் இன்னும் எதுவும் நடைபெறவில்லை. இதுவரை 600 பேர் வரை உயிரிழந்து விட்டனர்.ஏற்கனவே அரசிற்கு எங்களது தரப்பிலிருந்து விதிக்கப்பட்டிருந்த கெடு முடிவடைந்துவிட்டதால், ராஜினாமா செய்திருக்கிறோம். இது கடினமான முடிவு தான். ஆனால், இதை தவிர வேறு இல்லை எங்களுக்கு.இவ்வாறு கேசவ் ராவ் கூறினார்.

காங்., பலம் குறையும்: பார்லிமென்டில் மொத்தமுள்ள 544 இடங்களில், 2 இடங்கள் காலியாக உள்ளதால், மொத்த இடங்கள் 542. இதில் தனி பெரும்பான்மைக்கு, 271 எம்.பி.,க்கள் ஆதரவு தேவை. இந்த 9 எம்.பி.,க்கள் ராஜினாமா ஏற்றுக் கொள்ளப்பட்டால், லோக்சபாவில் தற்போது காங்கிரசுக்கு இருக்கும் பலமான 207 என்பது 198 ஆக குறையும்.இது தவிர தெலுங்கானா பகுதியைச் சேர்ந்தவரும், மத்திய பெட்ரோலிய அமைச்சராகவும் இருக்கும் ஜெய்பால் ரெட்டி இன்னும் தனது பதவியை ராஜினாமா செய்யவில்லை. இது பற்றி உரிய நேரத்தில் தாம் முடிவெடுப்பதாக கூறியுள்ளார்.தெலுங்கானா பகுதியை சேர்ந்த சத்யநாராயணா என்ற எம்.பி.,யும் ராஜினாமா செய்தால், மேலும் இரண்டு எம்.பி.,க்கள் காங்கிரசுக்கு பறிபோக வாய்ப்புள்ளது. இதனால், அரசிற்கு பெரும்பான்மை சிக்கல் எழ அதிக வாய்ப்புள்ளது.

முடிவு எடுக்கவில்லை: சொல்கிறார் சிதம்பரம் : "தெலுங்கானா விவகாரம் குழப்பமான, உணர்வு பூர்வமான விஷயம் என்பதால், மத்திய அரசு இன்னும் இறுதி முடிவு எதையும் எடுக்கவில்லை,'' என, மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் குறிப்பிடுகையில், "தெலுங்கானா பகுதி மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, 2009, டிசம்பர் 9ல், தனி தெலுங்கானா மாநிலத்தை உருவாக்குவதற்குரிய நடவடிக்கைகளை துவக்க அறிவிப்பு வெளியிட்டோம். இது என்னுடைய தனிப்பட்ட அறிவிப்பல்ல. மத்திய அரசின் அறிவிப்பு.மிகவும் உணர்ச்சிமிக்க, குழப்பமான விஷயம் என்பதால் இந்த விஷயத்தில் அரசு இறுதி முடிவு எடுக்கவில்லை. மீண்டும் அனைத்து கட்சி பிரமுகர்களின் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்படும். இந்த விஷயத்தில் தெலுங்கானா பகுதி மக்கள் பிரதிநிதிகள் பொறுமை காக்க வேண்டும். ஊடகங்கள் கூட இந்த விஷயத்தில் அமைதி காப்பது நல்லது' என்றார்.
Sekar Sekaran - jurong west,சிங்கப்பூர்
2011-07-05 02:35:37 IST Report Abuse
சிதம்பரம் போன்றோரை நம்பியா இந்த தேசம் உள்ளது..? எந்த ஓர் திறமையுமே இல்லாத ஒருத்தர் "உள்துறை" அமைச்சர்..!! கொடுமை..! இவருக்கு சொத்து சேர்ப்பதில் உள்ள அக்கறை நாட்டு நலனில் இருக்கின்றதா? நிதி துறையில் இருந்தவரை அவரது பொறுப்புக்கள்..பின்னர் உள்துறைக்கு வந்தபின்னர் அவருக்குள்ள பொறுப்புக்கள்..இதில் எதிலாவது "சாதனையாய்" இதனை செய்தார் என்று யாரேனும் சொல்ல முடியுமா? தேர்தலில் கூட நேர்மையாய் வெற்றி பெற்று வர முடிந்ததா? எதற்காக இவரை போன்றோரை வைத்துகொண்டு காங்கிரஸ் தனது "இமேஜை" கெடுத்துக்கொள்ளவேண்டும்? தனி தெலுங்கானா என்று கொடுத்தால் இனி ஒவ்வோர் மாநிலத்திலும் "கிளம்பிவிடுவார்கள்"..! நாடு கூறு போடப்படும்.! இது நாட்டுக்கு நல்லதல்ல..! ஒரு வேளை லோக்பால் அமைப்பின் செயல்பாடுகளை மறக்கடிக்க..திசை திருப்ப "காங்கிரசின்" தந்திரமோ? இருக்கலாம்..! திமுகவிற்கு ஓர் ஆற்காட்டார் போன்று..காங்கிரசுக்கு "ப.சிதம்பரம்" குழி தோண்டி புதைக்க..!! காங்கிரஸ் விழித்துகொள்ளுமா? ப.சி. யை மாற்றினால் மட்டுமே எல்லா விஷயத்திற்கும் ஓர் நிரந்தர தீர்வு கிடைக்கும்.!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக