வியாழன், 14 ஜூலை, 2011

1 ராம.நாராயணன் 2 சிவசக்தி பாண்டியன் 'பருத்திவீரன்’, 'ரேனிகுண்டா’, 'மகிழ்ச்சி’, 'வாரணம் ஆயிரம்’, 'வல்லக்கோட்டை’, 'தம்பிக்கோட்டை

அடங்காத கோடம்பாக்க அமர்க்களம்!

சக்சேனா, அய்யப்பன் கைது​களுக்குப் பிறகு, அடுத்தது யார் என்கிற பரபரப்பு கிளம்பிவிட்டது. போலீஸ் தரப்பும் கோடம்பாக்கப் புள்ளிகளும் ஒரு சேரக் கை நீட்டுவது, தயாரிப்பாளர்கள் ராம.நாராயணன், சிவசக்தி பாண்டியனை நோக்கித்தான்!

''ராம.நாராயணன், சிவசக்தி பாண்டியன் இருவரும் கடந்த ஆட்சியில் திரைத் துறையை தங்களது கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர். அவர்களின் பஞ்சாயத்துகளால் பாதிக்கப்பட்ட யார் வேண்டுமானாலும் புகார் கொடுங்கள். கைது செய்யச் சொல்லி, மேலிடமே சொல்லிவிட்டது!'' எனத் தயாரிப்பாளர்களுக்கு போன் போட்டு அழைக்கிறது போலீஸ். தயாரிப்பாளர்கள் ஐங்கரன் கருணா, அபிராமி ராமநாதன், தனஞ்செயன், 'ஸ்டுடியோ க்ரீன்’ ஞானவேல், மன்னன், 'மகிழ்ச்சி’ மணிவண்ணன், தயாரிப்பாளர் சகா என அதிருப்திப் புள்ளிகள் பலரையும் வளைத்து புகார்கள் வாங்கும் விறுவிறுப்பில் இருக்கிறது போலீஸ். இயக்குநர்கள் சங்கப் பொதுச் செயலாளராகத் தேர்ந்து எடுக்கப்பட்ட அமீரும் இந்தப் பட்டியலில் அடக்கம்.



இது குறித்து தயாரிப்பாளர்கள் சிலரிடம் பேசினோம். ''கடந்த ஆட்சியில் ராம.நாராயணன் வைத்ததுதான் சட்டம். சிவசக்தி செய்வதுதான் செயல். சன் டி.வி-க்கு சக்சேனா எப்படியோ, அதேபோல்தான், கலைஞர் டி.வி-க்கு ராம.நாராயணன். சிறு பிரச்னையாக இருந்தாலும், உடனே கவுன்சிலுக்கு வரவழைத்து பஞ்சாயத்துப் பேசுவதாகச் சொல்லி, ஏதாவது ஒரு ஏரியாவுக்கு விநி​யோக உரிமையை வாங்கிக்கொள்வார்கள். கலைஞர் டி.வி-யில் சாட்டிலைட் உரிமைக்காக ஒரு தொகை பேசிவிட்டு, அதில் பாதியை அவர்களே அமுக்கிக்கொண்டு தயாரிப்பாளர்களைத் தவிக்கவிடுவார்கள்.

ராம.நாராயணன் நினைப்பதைச் செய்துகொடுப்பதுதான் சிவசக்தி பாண்டியனின் வேலை. 'பருத்திவீரன்’, 'ரேனிகுண்டா’, 'மகிழ்ச்சி’, 'வாரணம் ஆயிரம்’, 'வல்லக்கோட்டை’, 'தம்பிக்கோட்டை’ என 50-க்கும் மேற்பட்ட படங்களின் விநியோக உரிமைகளில், இவர்கள் வில்லங்கத்தை உருவாக்கினார்கள். யார் எதிர்த்துக் கேட்டாலும், 'கோபாலபுரத்திலேயே சொல்லிட்டாங்க...’ என்று வாயை அடைத்துவிடுவார்கள். தயாரிப்பாளர்களை மட்டும் அல்ல... சில சேனல்களையே மிரட்டிப் பணம் பறிக்கும் வேலையும் நடந்தது. 'சூரியன் சட்டக் கல்லூரி’ என்ற படத்தை எடுத்த சிவசக்தி பாண்டியன், அதைச் சொல்லியே பல இடங்களில் பணம் கறந்தார். 'அர்ஜுனன் காதலி’ என்ற படத்தை ஃபர்ஸ்ட் காப்பி அடிப்படையில் எடுத்துத் தருவதாகச் சொல்லி, ஐங்கரன் நிறுவனத்திடம் 3 கோடி வாங்கினார். படத்தின் பட்ஜெட் அதிகமாகிவிட்டதாகச் சொல்லி பாண்டியன் கை விரிக்க, அபிமானத் தயாரிப்பாளர் ஒருவரும் இரண்டு எழுத்து சேனல் தரப்பினரும் தலா 50 லட்சத்தை பாண்டியனுக்குக் கொடுத்தார்கள். இன்று வரை கொடுத்த பணத்தையோ, படத்தையோ வாங்க முடியாமல் தவிக்கிறார்கள் சம்பந்தப்பட்டவர்கள்.

பிரமாண்டத்தில் சாதிக்கக்கூடிய ஒரு தயாரிப்பாளரை கவுன்சிலில் நிறுத்தி மன்னிப்பு கேட்கவைத்தார்கள். 'பருத்திவீரன்’ படத்தில் அமீருக்கும் ஞானவேலுக்கும் பிரச்னை உருவானது. ஆனால், இப்போது இந்த இருவருமே ராம.நாராயணன் மீது புகார் கொடுக்கும் முடிவில் இருக்கிறார்கள். அமீரிடம் இருந்து பஞ்சாயத்து நடத்தி 'பருத்திவீரன்’ படத்தை ஞானவேலுக்கு பிடுங்கிக் கொடுத்த ராம.நாராயணன் அதற்கு நன்றிக்கடனாக சில ஏரியாக்களின் விநியோக உரிமையை வாங்கிக்கொண்டார். அதற்கான பணத்தை ஞானவேலுக்கு சரிவரக் கொடுக்கவில்லை. அதே நேரம் ஞானவேல், அமீருக்கு கொடுக்கவேண்டும் என கவுன்சில் தீர்மானித்த 80 லட்சத்தை அமீருக்கும் வாங்கித் தரவில்லை. பல படங்களுக்கு இதேபோல் பஞ்சாயத்து பேசி இரு தரப்பிலும் ஆதாயத்தைப் பறிக்கும் வேலைகள் தொடர்ந்து நடந்தன.

கேபிள் டி.வி-க்கு படத்தின் புரமோஷன் காட்சிகளை வழங்குவதற்கான தொகையை, வருடத்துக்கு ஒரு முறை தயாரிப்பாளர்களுக்கு வழங்குவது வழக்கம். ஆனால், முதல் வருடத்தைத் தவிர, கடந்த நான்கு ஆண்டுகளாக அந்தப் பணத்தை ராம.நாராயணன் வழங்கவில்லை. முதல் புகாரை யார் கொடுப்பது என்கிற தயக்கம்தான் இப்போது நீடிக்கிறது. முதல் புகார் போய்விட்டால், வரிசையாக நூற்றுக்கும் மேற்பட்ட புகார்கள்கூட ராம.நாராயணன், பாண்டியன் இருவர் மீதும் பாயும்!'' என்கிறார்கள் அதிரடியாக.

இது குறித்து ராம.நாராயணனிடம் கேட்டால், ''இதுவரைக்கும் என் மீது யாரும் புகார் கொடுக்கவில்லை. புகார் கொடுக்கிற அளவுக்கு நான் நடந்துகொள்பவனும் இல்லை. என் கவனத்துக்கு வந்த பிரச்னைகளை தயாரிப்பாளர் சங்கத் தலைவராக இருந்து தீர்த்துவைத்தேனே தவிர, ஆதாயத்துக்காக எதையும் செய்தது கிடையாது!'' என்றார்.

சிவசக்தி பாண்டியனோ, ''தயாரிப்பாளர் கவுன்சிலுக்கு வந்த பஞ்சாயத்துக்களைத்தான் தீர்த்துவைத்தோமே தவிர, நாங்களாக பஞ்சாயத்தை உருவாக்கவில்லை. யாரிடமும் எதைச் சொல்லியும் பணம் பெறவேண்டிய அவசியம் எனக்கு இல்லை. மற்றபடி வழக்குவந்தால் சந்திக்கத் தயார்!'' என்கிறார் தெளிவாக.

இதற்கிடையில், போலீஸ் அமீரை அணுக, ''அவர்களின் மீது வழக்குப்போட்டுவிட்டு பிறகு வந்து பாருங்கள்... அவர்களைப் பற்றிய அத்தனை விஷயங்களையும் சொல்கிறேன்!'' என்றாராம்.

அடுத்தபடியாய் உதயநிதியின் வலது கரமாகத் திரைத் துறையைக் கலக்கிய வாசனைப் புள்ளி,, மூன்று எழுத்து சேனலின் பிரதிநிதி எனக் கைதுப் பட்டியலின் நீளம் நீண்டுகொண்டே போகிறது!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக