ஞாயிறு, 5 ஜூன், 2011

யோகாவுக்கு என்று அனுமதி வாங்கிவிட்டு RSS அரசியல் செய்ய ஆரம்பித்தார்.

பல்டி அடித்தார் ராம்தேவ்'-கபில்சிபல்: 'சிபல் ஒரு பொய்யர்'-ராம்தேவ்

டெல்லி: உண்ணாவிரதத்தை முடித்துக் கொள்வதாக உறுதியளித்துவிட்டு 'பல்டி' அடித்தார் ராம்தேவ் என்று மத்திய தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் கபில் சிபல் கூறியுள்ளார்.

ராம்தேவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வந்த அமைச்சர்கள் குழுவில் இடம் பெற்றிருந்தவரான கபில் சிபல் செய்தியாளர்களிடம் கூறுகையில், கறுப்புப் பணத்தை தேசிய சொத்து என அறிவிக்க மத்திய அரசு ஒப்புக் கொண்டுள்ளது. சட்டப்படி ஒரு குழு அமைத்து கறுப்புப் பணத்தை முழுமையாகக் கண்டறிய நடவடிக்கை எடுக்கவும் ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது.

ஆனால் இது தொடர்பாக சட்டம் இயற்றுவதில் அரசு உறுதியாக இல்லை என்பது குறித்து ராம்தேவ் அதிருப்தி தெரிவித்தார். இதையடுத்து, சட்டரீதியாக குழு அமைப்பதன் அடுத்த நடவடிக்கை சட்டம் இயற்றுவதுதான் என்று அவருக்கு விளக்கம் அளித்தேன். விரைவில் குழு அமைக்கப்படும். 6 மாதத்தில் அக்குழு அறிக்கையை அளிக்கும் என்றும் கூறினேன்.

இப்படி மத்திய அரசு உறுதிமொழி அளித்தபோதும் தனது உறுதிமொழிகளை எழுத்துப்பூர்வமாக தர வேண்டும் என்று ராம்தேவ் வலியுறுத்தினார். அதையும் ஏற்க தயாராகவே இருந்தோம்.

பேச்சுவார்த்தைகளின் இறுதியில் சனிக்கிழமை மாலை 4 மணிக்கே
தனது உண்ணாவிரதத்தை ராம்தேவ் முடித்துக் கொள்வார் என்று அவரது உதவியாளர் அரசிடம் கடிதம் கொடுத்தார். (அந்தக் கடிதத்தைக் காட்டினார் சிபல்). அந்தக் கடிதத்தில் ராம்தேவின் உதவியாளர் கையெழுத்திட்டுள்ளார்.

ஆனால் சொன்னபடி பாபா தனது உண்ணாவிரதத்தை முடித்துக் கொள்ளவில்லை. இதையடுத்து அவரிடம் தொலைபேசியிலும் பேசினோம். அதன் பின்னரும் சொன்னதைச் செய்யவில்லை ராம்தேவ். 5 மணிவரை பேசிப் பார்த்தும் பலனில்லை. இதனால்தான் உண்ணாவிரதப் போராட்டத்தை முடிக்க காவல்துறை மூலம் நடவடிக்கை எடுக்க நேரிட்டது.

இதனால்தான் ராம்தேவ் மத்திய அரசுக்கு தந்த உறுதிமொழிக் கடிதத்தை நான் பகிரங்கமாக வெளியிட நேரிட்டது.

யோகாசனத்தை போதிக்கும், பரப்பும் ஒரு சாமியார் அதில் மட்டுமே ஈடுபட வேண்டும். அதை விட்டு விட்டு அரசியல் ஆசனம் செய்வது எப்படி என்பதை எங்களுக்குப் போதிக்கக் கூடாது.

மேலும், டெல்லி போலீசாரிடம் ராம்லீலா மைதானத்தில் 5,000 பேருக்கு யோகாசான முகாமை நடத்தப் போவதாக அவர் கூறியதால்தான் அதற்கு அனுமதி அளிக்கப்பட்டது. யோகாசன முகாமுக்கு மட்டுமே அனுமதி தரப்பட்டது. ஆனால், யோகாவுக்கு என்று அனுமதி வாங்கிவிட்டு தனது உண்ணாவிரதம் நடத்தி அரசியல் செய்ய ஆரம்பித்தார்.

இதிலிருந்து ஆர்எஸ்எஸ்சின் இன்னொரு முகம் தான் ராம்தேவ் என்பது உறுதியாகிவிட்டது. இதனால்தான் உண்ணாவிரதப் போராட்டத்தை முடிக்க காவல்துறை மூலம் நடவடிக்கை எடுக்க நேரிட்டது, அதில் தவறே இல்லை என்றார்.

கபில் சிபல் ஒரு பொய்யர்-ராம்தேவ்:

முன்னதாக கபில் சிபல் குறித்து ராம்தேவ் கூறுகையில், நான் ஒரு கடிதத்தில் கையெழுத்திட்டுத் தந்துள்ளதாகக் கூறி வரும் கபில் சிபல் ஒரு பொய்யர். இனிமேல் அவருடன் நான் எந்தப் பேச்சுவார்த்தையும் வைத்துக் கொள்ள மாட்டேன் என்றார்.
 
English summary
Union Minister Kapil Sibal who holds talks with Baba Ramdev has said that, Centre is ready to declare black money as national asset. Centre conveyed this decision to Ramdev.But Ramdev insisted this promise in written, but Govt refused this and detained Ramdev and evicted him out of Delhi.
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக