சனி, 4 ஜூன், 2011

ஹரே கிருஷ்ணா'!.அடிதடியில் Iscon கோவில் நிர்வாகிகள் அடிதடி!

பெங்களூர் ஹரே கிருஷ்ணா கோவில் நிர்வாகிகள், நடுரோட்டில் அடிதடியில் ஈடுபட்டு பக்தர்களின் மனதை புண்ணாக்கினர்.

ஹரே கிருஷ்ணா அமைப்பின் (International Society for Krishna Consciousness-Iskcon-இஸ்கான்) மும்பை, பெங்களூர் நிர்வாகிகளிடையே யார் பெரியவர் என்ற மோதல் நீண்டகாலமாகவே நடந்து வருகிறது.

மும்பை ஹரே கிருஷ்ணா கோவிலின் தலைமை நிர்வாகியாக இருப்பவர் வரதகிருஷ்ண தாஸா, பெங்களூர் ஹரே கிருஷ்ணா கோவிலின் தலைமை நிர்வாகியாக இருப்பவர் மதுபண்டிட் தாஸா.

பெங்களூர் மகாலட்சுமி லே-அவுட்டில் மலை மீது அமைந்துள்ள கிருஷ்ணர் ஆலயத்தை நிர்வகிப்பது யார் என்பதில் இந்த சண்டை நடக்கிறது. இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கும் நிலுவையில் உள்ளது.

இந் நிலையில் நீதிமன்ற அனுமதியோடு பெங்களூர் கோவிலை ஆய்வு செய்ய மும்பை இஸ்கான் அமைப்பினர் நேற்று வந்தனர். ஆனால், அவர்களை கோவிலுக்குள் அனுமதிக்க மறுத்து பெங்களூர் நிர்வாகிகள் கடும் மோதலில் ஈடுபட்டனர்.

15 கார்களில் வந்த வரதகிருஷ்ண தாஸா தலைமையிலான நிர்வாகிகளை, கார்களில் இருந்து இறங்க விடாமல் தடுத்து மதுபண்டிட் தாஸா தலைமையிலான நிர்வாகிகள் தடுத்தனர். இதையடுத்து இரு தரப்புக்கும் இடையே அடிதடி நடந்தது. இதில் வேட்டிகளும் கூட கிழிந்தது தான் மிகவும் வருத்தமான விஷயம்.

ஆயிரக்கணக்கான பக்தர்கள், பொது மக்களின் கண்ணெதிரே இந்த சண்டை நடுரோட்டில் நடந்தது. இதனால் மக்களும் பக்தர்களும் அதிர்ச்சியடைந்தனர். அமைதியாக பஜனை பாடி இறைவனின் நினைவில் மூழ்க வந்த பல பக்தர்கள், இந்த சண்டையைப் பார்த்து அதிர்ந்து கண்ணீரும் விட்டனர்.

குடும்பத்துடன் வந்த பலர், அதிர்ச்சியடைந்து வேகமாக வெளியேற முயன்றனர். ஆனால், மும்பை குழுவைத் தடுப்பதற்காக கோவிலின் முக்கிய கதவுகள் மூடப்பட்டிருந்ததால் வெளியேறவும் முடியாமல் தவித்தனர்.

கோவில் அமைந்துள்ள ராஜாஜி நகர் பகுதியின் வெஸ்ட் ஆப் கார்ட் ரோட்டில் ஏற்கனவே மெட்ரோ ரயில் பணிக்காக பாதி சாலை மூடப்பட்டுவிட்ட நிலையில் மீதியுள்ள சாலையில் தான் பெரும் நெரிசலுடன் போக்குவரத்து நடந்து வருகிறது. இந்த நடுரோட்டு சண்டையால், அந்தப் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுவிட்ட, மக்கள் நெரிசலில் சிக்கித் தவித்தனர்.

எல்லா சண்டையும் முடிந்து மும்பை குழு தோல்வியுடன் திரும்பிச் சென்றபின் சினிமாவில் வரும் போலீஸ் மாதிரி, அந்த ஏரியா போலீசார் வந்து சேர்ந்தனர்.

English summary
The battle of Iskcons took an ugly turn as devotees of the Bangalore unit prevented the Mumbai bureau representatives from entering its premises. It affected the vehicular traffic on the West of Chord Road in front of the International Society for Krishna Consciousness (Iskcon) bureau.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக