சனி, 25 ஜூன், 2011

Google தமிழும் இணைப்பு.கூகுளின் பன்மொழி மொழிபெயர்ப்பு சேவையில்

கூகுளின் பன்மொழி மொழிபெயர்ப்பு சேவையில் தமிழும் இணைப்பு
கூகுள் இணையத்தளத்தின் பன்மொழி மொழிபெயர்ப்புச் சேவையில் இப்போது தமிழ் மொழியும் உள்ளடக்கப்பட்டுள்ளது.

தமிழ், வங்காளம், கன்னடம், தெலுங்கு, குஜராத்தி ஆகிய 5 இந்திய மொழிகளை புதிதாக தனது இணைய மொழிபெயர்ப்பு சேவையில்  கூகுள் நிறுவனம் இணைத்துக்கொண்டுள்ளது.

உலகின் மிகப்பெரிய இணைய தேடல் இயந்திர இணையத்தளமான கூகுள் குழுமம் 2006 ஆம் ஆண்டு இணையம் மூலமான பன்மொழி மொழிபெயர்ப்பு சேவையை ஆரம்பித்தது. இப்போது புதிதாக இணைக்கப்பட்ட 5 மொழிகளுடன் சேர்த்து இந்த மொழிபெயர்ப்புத் தொகுதியிலுள்ள மொழிகளின் எண்ணிக்கை 63 ஆக உயர்ந்துள்ளது.

இதன்மூலம், தமிழ் மொழியிலுள்ள வசனங்களை ஏனைய 62 மொழிகளில் மொழிபெயர்க்கவோ அல்லது அம்மொழிகளில் உள்ளவற்றை தமிழுக்கு மொழிபெயர்க்கவோ முடியும்.

ஏற்கெனவே தமிழும் உள்ளடக்கப்பட்ட இணையம் மூலமான பன்மொழி அகராதிகள் உள்ளன.

எனினும் கூகுள் இணைய மொழிபெயர்ப்பு சேவையானது வசனங்களையும் மொழிபெயர்க்கும் ஆற்றல் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.

கூகுளுக்கே உரிய துரித வேகத்தை இந்த மொழிபெயர்ப்புச் சேவை கொண்டுள்ளது. யுனிகோட் எழுத்து விரிவடிவங்களையே (font) இது கிரகிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏனைய இணைய அகராதிகளைவிட அதிகமான பிறமொழி சொற்களுக்கான தமிழ் அர்த்தங்களையும்  தமிழ்சொற்களுக்கான பிறமொழி சொற்களையும் கூகுள் மொழிபெயர்ப்பு சேவை வழங்குகிறது.

வழங்கப்படும் மொழிபெயர்ப்பில் காட்டப்படும் சொற்கள் பொருத்தமற்றவை எனக் கருதினால் அச்சொற்களை  அழுத்துவதன் மூலம் பொருத்தமான வேறு சில மாற்றுச் சொற்களையும் தெரிவு செய்துகொள்ளும் வசதியும் உண்டு.
ஆனால், நாம் பரீட்சித்தவரை நீண்ட வசனங்களுக்கான  கூகுள் தமிழ் மொழிபெயர்ப்பு மிகத் துல்லியமானதாக  இல்லை.  தமிழ் முதலான தென்னிந்திய மொழிகளின் வசன அமைப்பு முறைக்கும்; ஆங்கிலம் முதலான ஐரோப்பிய மொழிகளின் வசன அமைப்பு முறைக்கும் இடையிலான வித்தியாசமே இதற்குக் காரணம்.  மரபுத்தொடர்கள் முதலானவற்றுக்கான மொழிபெயர்ப்பும் கிடைக்கவில்லை.

பரீட்சிப்பதற்காக, ஆங்கிலத்திலுள்ள ஒரு வசனத்தை தமிழுக்கு மொழிபெயர்ப்பதற்கான கட்டளையை கொடுத்தபொது அம்மொழிபெயர்ப்பு துல்லியமாக இல்லாவிட்டாலும் புரிந்துகொள்ளக்கூடியதாக இருந்ததது.

ஆனால், அதே கூகுள் மொழிபெயர்த்துத் தந்த அதே தமிழ் வசனத்தை மீண்டும் ஆங்கிலத்தில் மொழிப்பெயர்த்து பார்த்தபோது அது வந்த பெறுபேற்றுக்கும் அசல் ஆங்கில வசனத்திற்கும் இடையிலான முரண்பாடு  'பயங்கரமானதாக' இருந்தது.

புதிதாக இணைக்கப்பட்ட மொழிகளின் மொழிபெயர்ப்பானது பரிசோதனை நிலையில் உள்ளதாக கூகுள் நிறுவனம் கூறுகிறது.
'ஏதேனும் மொழியில் தவறான மொழிபெயர்ப்பை  அவதானித்தால் எமக்கு அறியத்தாருங்கள். நாம் எமது தவறுகளிலிருந்து கற்றுக் கொள்கிறோம்' என கூகுள் நிறுவனத்தைச் சேர்ந்த ஆராய்ச்சி விஞ்ஞானியான ஆஷிஸ் வேணுகோபால் கூறியுள்ளார்.

எவ்வாறெனினும் தமிழ்பேசும் மக்களுக்கும் உலகின் ஏனைய பிரதான மொழிபேசுவோருக்கும் இடையிலான தொடர்பாடலில் கூகுள் மொழிபெயர்ப்பு சேவையும் அதை பின்பற்றி வரக்கூடிய இத்தகைய இணைய மொழிபெயர்ப்புச் சேவைகளும் பெரும் புரட்சியை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக