புதன், 22 ஜூன், 2011

புதிய சோப்புக்கட்டி.வாழும் கலை’ என்ற கவர்ச்சிகரமான Double Sri ravishankar

சாமியார்களின் தனித்துவம் சோப்புக்கட்டிகள் பலவிதம்!

பாபா ராம்தேவ்
மஹரிஷி மகேஷ் யோகியின் சீடராக இருந்த ரவிசங்கர் பிரிந்து வந்து, “வாழும் கலை’ என்ற கவர்ச்சிகரமான “கான்செப்ட்’ஐ உருவாக்கி ஸ்ரீஸ்ரீ ரவி சங்கராக தனது பேரரசைப் பரவச்செய்தார். தியானம், யோகம், அறிவுத் திறன் வகுப்புக்கள் முதலானவற்றைக் கலந்து ஒரு புதிய கட்டமைப்பில் பன்னாட்டு நிறுவனங்கள் விளம்பரப்படுத்தும் புதிய சோப்புக்கட்டி போல அறிமுகப்படுத்தி வெற்றி பெற்றார். இவரது குருவான மரித்துப் போன மகேஷ் யோகி மேலை நாடுகளில் மணிக்கு சில ஆயிரங்கள் டாலர் கட்டணத்தில் ஆழ்நிலை தியானத்தைக் கற்றுக்கொடுத்து பிரபலமானார். இதே சரக்கை ஹாலிவுட் நட்சத்திரங்கள் மற்றும் பன்னாட்டு நிறுவன நிர்வாகிகளுக்கு ஏற்ப விற்று, அவர்கள் மூலம் புகழ் பெற்றார் தீபக் தாக்கூர்.
ஒத்த பெயர் கொண்ட ஷிர்டி சாயி பாபாவின் மகிமையைப் பயன்படுத்திக்கொண்டு பஜனைகள் மூலமும், பல நூறு கோடி நன்கொடையின் சிறு பகுதியை தர்ம காரியங்கள் செய்தும், முக்கியமாக மாஜிக் வழியாக லிங்கங்கள், மோதிரங்கள், நகைகளை வினியோகித்தும் பெயர் பெற்றார் சாயி பாபா. இவரது சிறிய நகல்தான் தற்போது கடலூர் சிறையில் கம்பி எண்ணிக்கொண்டிருக்கும் பிரேமானந்தா.
சாயி பாபாவின் சத்ய நகர் ஆசிரமத்தில் சில ஆண்டுகள் தங்கி பின்பு கேரளாவில் தனி ஆசிரம் ஆரம்பித்தவர் அமிர்தானந்த மாயி. மற்ற குருமார்களைப் போல வாய் சாமர்த்தியம் இல்லாத மாயியை அம்மன் போல அலங்காரம் செய்து, பக்தர்களைக் கட்டிப் பிடிக்கும் டெக்னிக்கைப் பயன்படுத்திப் பிரபலமடைய வைத்தார்கள். கடந்த 30 ஆண்டுகளில் மாயி அரவணைப்பால் “ஆன்மீக ரீசார்ஜ்’ செய்யப்பட்ட பக்தர்களின் எண்ணிக்கை இரண்டு கோடியாம்.
வட இந்தியாவில் யோகாசனத்தையும், ஆயுர்வேத மருந்துகளையும் வைத்து எய்ட்ஸைக் கூட குணப்படுத்த முடியும் என்று பிரபலமானவர் பாபா ராம்தேவ். இதை அறிவியலும், மருத்துவர்களும் உண்மையல்ல என்று நிராகரித்து விட்டாலும் மக்களை புற்றீசல் போல இழுப்பதில் ராம்தேவ் தோல்வியடையவில்லை. ஆஸ்ரம் பாபு, சுதன்ஜி மகாராஜ், மற்றும் முராரி பாபு முதலானோர் டெல்லியின் பண்ணை வீடுகளில் பணக்காரர்களுக்கு மட்டும் தலைக்கு ரூபாய் 5,000 முதல் 10,000 ரூபாய் வரை கட்டணம் வாங்கிக்கொண்டு ஆன்மீக வகுப்பு நடத்துகிறார்கள். முடிந்தபின், இதே பண்ணை வீடுகளில் மேட்டுக்குடி குலக்கொழுந்துகள் கேளிக்கைக் கூத்துக்களை நடத்துவது வழக்கம்.

நடனம், பஜனை, கிருஷ்ண வழிபாடு மற்றும் ஆச்சாரமான பார்ப்பன பண்பாட்டை முன்னிறுத்திய ஹரே ராமா ஹரே கிருஷ்ணா இயக்கம் 80,90களில் உச்சத்தை அடைந்தது. இவர்களுக்கும் உலகெங்கும் கிளைகள் உண்டு. இயற்கை வாழ்வு, யோகம், தியானம் முதலானவற்றை முன்னிறுத்தி ஈஷா யோக மையத்தை நடத்தி புகழ் பெற்றவர் ஜக்கி வாசுதேவ். “வாழ்க வளமுடன்’ என்ற முத்திரையுடன் பிரபலமானவர் வேதாத்ரி மகரிஷி.
மேல் மருவத்தூரின் பங்காரு சாதரணமக்களை ஈர்க்கும் வண்ணம் சிவப்பாடை, பெண்கள் பூசை, ஆதிபராசக்தி வார வழிபாட்டு மன்றம், வருடம் முழுக்க சடங்குகள் என்று வளர்ந்திருக்கிறார். மேல் மருவத்தூர் சென்றால் நோய் தீரும், திருமணம் நடக்கும், வியாபாரம் செழிக்கும் என்று பல கதைகளை பக்தர்களே இலவசமாய் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

வசதியான தனிநபர்களின் மன அமைதி, மகிழ்ச்சி, கலைத் தவங்கள் என்று பிரபலமானது பாண்டிச்சேரி அரவிந்த் ஆசிரமம். சங்கர மடம் பற்றி அதிகம் விளக்கத் தேவையில்லை. கல்லூரிகள், மருத்துவமனைகள் போக அரசியல்வாதிகள், அதிகார வர்க்கம், முதலாளிகள் முதலான மேல்மட்டத்தின் பிரச்சினைகளைத் தேர்ந்த தரகன் போல தீர்த்து வைத்து தனி சாம்ராச்சியத்தையே உருவாக்கியவர் ஜெயந்திரர்.
நற்செய்திக் கூட்டங்களில் “முடவர்கள் நடக்கிறார்கள், குருடர்கள் பார்க்கிறார்கள்’ என்று சாட்சியங்களை சொல்ல வைத்து, பெரும் மக்கள் கூட்டத்தை நம்பவைத்து பெயரெடுத்தவர் டி.ஜி.எஸ் தினகரன். தொலை பேசி எண்ணில் பிரச்சினைகளைச் சொல்லி கட்டணத்தை அனுப்பி வைத்தால் பிரார்த்தனை செய்து தீர்ப்பதற்கென்றே ஒரு பெரும் அலுவலகத்தை நடத்தி வருகிறார். பரிசுத்த ஆவியை எழுப்பி, அதை வைத்து ஒரு பல்கலைக் கழகத்தையும் சேர்த்து எழுப்பியிருக்கிறார்.

இந்தியாவில் பள்ளிக்கூடங்களை விட கோவில்களும் சாமியார்களும் அதிகம். எனவே, பட்டியலை இம்மட்டோடு நிறுத்திக் கொள்வோம். சாமியார்களில் பழைய பாணி சாமியார்களை விட நவீன பாணி சாமியார்களுக்கு மவுசு அதிகம். இருப்பினும் இரண்டு பாணிகளும் சொல்வது ஒரே மாதிரியான விசயங்களைத்தான்.

“”குரங்கு போல தவ்விச் செல்லும் மனதை கட்டுப்படுத்துங்கள், அதற்கு தியானம் செய்யுங்கள், மனதை வழிக்குக் கொண்டு வர உடலைக் கட்டுப்படுத்துங்கள், அதற்கு யோகாசனம் செய்யுங்கள், பேராசைப் படாதீர்கள், கிடைத்ததைக் கொண்டு வாழுங்கள், சைவ உணவு உண்டு, இயற்கையோடு ஒன்றி வாழுங்கள், வருவாயில் சிறு பகுதியையாவது தர்மம் செய்யுங்கள், பொறாமை, அகங்காரம், கோபம் முதலியவற்றை விட்டொழியுங்கள், செய்யும் தொழிலை ஈடுபாட்டுடன் செய்யுங்கள், உலகுடன் அன்பு எளிமை அழகுடன் உறவு கொள்ளுங்கள்”, முதலான பொத்தாம் பொதுவான விசயங்களைத்தான் அனைத்து குருமார்களும் ஓதுகின்றனர். இது போக சாமியார்களின் மகிமைகளை பக்தர்களே கண் காது மூக்கு வைத்து ஊதிப்பெருக்கிப் பிரச்சாரம் செய்வதும் இயல்பாக நடக்கிறது.

மக்கள் ஆன்மீகத்தை நோக்கி ஓடுவதையும், சாமியார்கள் வாழ்க வளமுடன், வாழுவதே கலையென்று ஆடுவதையும் சாத்தியமாக்கியிருக்கிறது. இருப்பினும் மன நலன் மற்றும் சமூக நலன் இரண்டையும் சீரடையச் செய்வதற்குரிய பொருத்தமான மருந்துகள் சாமியார்கள் மற்றும் அவர்களது யோக முறைகளில் நிச்சயம் இல்லை. ஏன்?
வாழ்க்கைப் பிரச்சினைகளால் மனிதனும், மனதும் பாதிக்கப்படுகின்றனர் என்றால் மூளை பாதிக்கப்படுகிறது என்பதே சரி. கோபம், அச்சம், சலிப்பு, சோர்வு, விரக்தி, சோகம், பதட்டம், படபடப்பு, மன அழுத்தம், போன்றவை எல்லோருக்கும் எப்போதாவது ஏற்படக்கூடிய உணர்ச்சிகள். குறிப்பிட்ட காரணங்களால் இவை அடிக்கடி ஏற்பட்டு நாளடைவில் தொடர்ந்து நீடித்தால் மனம் மெல்லமெல்லச் சிதைவது நடக்கிறது. மனச் சிதைவின் விளைவால் மூளையில் உள்ள உயிர்ம வேதியல் சக்திகளின் சமநிலை குலைகிறது. இதன் தொடர் விளைவால் பல உடல் பிரச்சினைகளும், வாழ்க்கை மீதான விரக்தியும் ஏற்படுகிறது. இதற்குத் தீர்வென்ன?
மூளை இழந்து விட்ட சக்திகளை திரும்பப் பெறுவதன் மூலமே புண்ணாண மூளையையும், மனதையும் நேர் செய்ய முடியும். அதை மனித உடலையும், நோய்க்கூறுகளையும் அறிவியல் பூர்வமாக கற்றுக்கொண்ட ஒரு உளவியல் மருத்துவரால்தான் கண்டுபிடித்துக் குணமாக்க முடியும். மாறாக, தியானம் செய்வதன் மூலமாக, மூளை இழந்த பௌதீக ரீதியான சக்திகளைப் பெறமுடியாது.
ஏனெனில், இது வெறும் கருத்துப் பிரச்சினையல்ல. உடல் நோய்வாய்ப்படுவது என்பது பொருளின் பிரச்சினை. பொருளுக்கு கருத்து மருந்தல்ல. எளிமையமாகச் சொல்வதாக இருந்தால் தலைவலி, காய்ச்சல், வயிற்று வலி, எலும்பு முறிவு, மற்றும் எளிதில் குணப்படுத்த இயலாத எய்ட்ஸ் முதலான நோய்களுக்கு மருத்துவரின் ஆலோசனைப்படி மருந்துகளை உட்கொள்ளுகிறோம். இதை தியானம் செய்வதால் தீர்க்கமுடியாது. மனம் அல்லது மூளையின் பிரச்சினைகளும் அப்படித்தான்.
இருப்பினும், மனம் நோய்வாய்ப்படுவதற்கும், உடல் நோய்வாய்ப்படுவதற்கும் வேறுபாடு உண்டு. உணவின்மை, சத்துக்குறைவான உணவு, சுகாதரச் சீர்கேடுகள், நுண்கிருமிகள் முதலியவற்றால் உடல் நோய்வாய்ப்படுகிறது. ஆனால் மூளையோ, வாழ்க்கைப் பிரச்சினைகளால் குறிப்பிட்ட கருத்து நிலைக்கு தொடர்ந்து ஆட்படுவதால் சக்தியை இழந்து நோய்வாய்ப்படுகிறது.
இத்தகைய பலவீனமான மூளையால் உடலின் சமநிலை குலைந்து ஏனைய உடல் பாகங்களும் பாதிப்படைந்து, செயல்பாடு சீர்கேடு அடைகின்றது. பாதிப்படையும் மனதிற்குப் பின்னே இத்தனை உண்மைகள் இருக்கும் போது, சாமியார்கள் அடிமுட்டாள்தனமாக “குணப்படுத்துவேன்’ என்று திமிராகப் பேசுவது அயோக்கியத்தனம். நியாயமாக இவர்களை போலி மருத்துவர்கள் என்று கைது செய்து உள்ளே தள்ளுவதே சரி.

தியானம் என்பது மனம், அதாவது மூளையின் ஒரு பகுதிக்கு அல்லது செயல்பாட்டிற்குச் செய்யப்படும் பயிற்சியாகும். தியானத்தின் மூலம் மட்டுமல்ல, ஒரு நல்ல இசையைக் கேட்பதிலோ, ஒரு குழந்தையைக் கொஞ்சுவதிலோ, இயற்கைக் காட்சியுடன் ஒன்றுவதிலோ கூட மனம் பயிற்சியையும் ஓய்வையும் பெறமுடியும். இவை ஒவ்வொருவரின் விருப்பம், இரசனை, பண்பு, வாழ்க்கையைப் பொறுத்தது. ஆயினும் அழுத்திச் செல்லும் வாழ்க்கையின் இடைவெளிகளில் பலருக்கு இவை சாத்தியப்படுவதில்லை. அதனால் பிரச்சினை வரும்போது ஓய்வு பெறாத மனம் விரைவில் துவண்டு விடுகிறது.
மனதிற்கு அப்படிச் சிறப்பாகப் பயிற்சியையும், ஓய்வையும் தந்திருப்பவர்களுக்குக் கூட வாழ்க்கைப் பிரச்சினைகளால் மனது பாதிக்கப்படுவது நடக்கும். இதிலிருந்து மீள்வதற்கு மருத்துவமே பெருமளவுக்கு உதவும் என்பதையும் தியானம் உதவாது என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக