வியாழன், 9 ஜூன், 2011

தனித்தீவில் கடை வைத்தேன் ஆளரவமற்ற அனாதித் தீவில்..சவுக்குக் கம்புகளை நட்டு, மேலே ஒரு கூரையைப்

தன்னம்பிக்கை நட்சத்திரம். ஆளரவமற்ற அனாதித் தீவில்...நான்கு சவுக்குக்
கம்புகளை நட்டு, மேலே ஒரு கூரையைப் போட்டு குளிர்பானங்கள், முத்து,
பவளம், பாசிமணிகள், சங்குகள், ஜிமிக்கி கம்மல், கலர் கயிறுகள் என
சின்னதாக ஒரு கடை பரப்பியிருக்கிறார் பாக்யராஜ்.


+2 முடித்த இந்த இளைஞர் பெற்றோருடன் தனுஷ்கோடியில் வசிக்கிறார்.
இவரது அண்ணன் ராமேஸ்வரத்தில் கடை நடத்தி வருகிறார். ‘'மேல
படிக்கலையா பாக்யராஜ்?'' என்று கேட்டோம். ‘'+2 முடிச்சிட்டு காலேஜ்
போலாம்னு ஆசைப்பட்டேன். ஆனா வசதி இல்லண்ணே. வர்ற வருமானம்
வயித்துச் சாப்பாட்டுக்கும், மாத்துத் துணிக்குமே சரியா இருக்கு. இதுல
எங்கிட்டு நான் மேல படிக்கிறது? அதான் ஏதாச்சும் ஒரு தொழில் செய்யலாம்னு இங்க கடை போட்டேன்'' என்றார்.
 
‘'என்ன நம்பிக்கையில தனித்தீவுக்குள்ள தன்னந்தனியா கடை வெச்சீங்க?''-
கேட்டதுமே வெள்ளையாகச் சிரித்தபடி பேசினார் பாக்யராஜ்...''டவுன்ல
(ராமேஸ்வரத்தில்) கடை வைக்கணும்னா அட்வான்ஸ் தரணும், நெறைய
சரக்கு வாங்கணும். இதுக்கு ரெண்டு மூணு லட்சம் தேவைப்படும். அதான்
ஆற அமர யோசிச்சுப் பாத்தேன். ‘சரி, அரிச்சமுனையிலயே ஒரு கடையைப்
போட்ரலாம்னு முடிவு பண்ணேன். கையில இருந்த காசோட, கடன உடன
வாங்கி ஐயாயிரம் ரூவா முதலீட்டில கடைய ஆரம்பிச்சேன். இப்போ
யாவாரம் ஜோரா நடக்குதுண்ணே'' என்றார் உற்சாகமாக.

அப்போது கடைக்கு வந்த ஒரு சுற்றுலாப் பயணி குடிக்க தண்ணீர் கேட்க,
அவரிடமிருந்த காலி பாட்டிலை வாங்கி தண்ணீர் நிரப்பித் தந்தார். ‘'எவ்ளோ
தம்பி'' என்று கேட்க...''ஃப்ரீ சார். குடிச்சுப் பாருங்க. தேனா இனிக்கும்.
ரெண்டு பக்கமும் கடலு. உப்புத்தண்ணி. ஆனா நடுவால இருக்கற மண் திட்டுல வர்ற ஊத்துத்தண்ணி இனிப்பா இருக்கு. மனுஷ பொழப்பும் அப்படித்தாங்க இருக்கு'' என்று ஏதோ ‘பாமர ஞானி' போல பேசுகிறார் பாக்யராஜ்.

அப்படியே நம்மைப் பார்த்து ‘'கோச்சுக்காதீங்கண்ணே. பேச்சைப் பாதியில
விட்டுட்டேன். தெனமும் நெறைய டூரிஸ்ட்டுக வர்றாங்க.

ஒத்தையா நிக்கற என்னைப் பாத்து ஆச்சரியப்பட்டு, அன்பா பேசறாங்க. இங்க
இருக்கற அத்தனை பொருள்களையும் பேரம் பேசாம வாங்கிட்டுப் போறாங்க.
கொண்டு வர்ற சரக்கை பெரும்பாலும் வித்துர்றேன். தெனமும் இருநூறு ரூவாய்க்குக் கொறையாம லாபம் கெடைக்குது.

எப்பவாச்சும் வந்து போற டூரிஸ்ட்டுகலை நம்பி கடை வெக்கிறியேனு கிண்டலா சிரிச்சாங்க.ஆனா போதுமான லாபத்தோட நான் சம்பாதிக்கறேன். என் நம்பிக்கை ஜெயிச்சிருச்சு அண்ணே'' என்கிற பாக்யராஜ் முகத்தில் வெற்றிப் பூரிப்பு.


தீவிலிருந்து கடைசி டூரிஸ்ட்டும் கிளம்பியதை உறுதி செய்து கொண்ட பிறகே
தனது கடையை மூடுகிறார் பாக்யராஜ். கீற்றுக் கூரையை கீழே கிடத்தி.
கொண்டுவந்த அட்டைப்பெட்டிகளுக்குள் சரக்குகளை அடுக்கி எடுத்துக் கொண்டு கடைசி ஜீப்பில் வீடு திரும்புவது இவரது வழக்கம். மழை சீஸனில் மட்டும் இந்தக் கடை இருக்குமிடத்தில் கடல் பரவிக் கிடக்கும். ஆகவே அன்று கடை லீவு.

‘'சரி, டூரிஸ்ட் யாருமே வராதபோது தனியாக இருக்க பயமாக இல்லையா?''-
உடன் வந்த நண்பர் கேட்டார். வாய்விட்டுச் சிரித்தபடி பாக்யராஜ் சொன்னார்...
‘'அண்ணே, நான் பொறந்து வளர்ந்ததெல்லாம் கடல் மென்னு துப்பின இதே
தனுஷ்கோடிதான். எஙளுக்கெல்லாம் புயல்தான் தாலாட்டு...வெள்ளம்தான்
தாய்ப்பாலு''.

நன்றி: புதிய தலைமுறை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக