சனி, 25 ஜூன், 2011

காதலியிடம் இருந்து பிரித்ததால் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை

பவானி, வேலூர் & சென்னை: கள்ளக் காதலியிடம் இருந்து பிரித்ததால் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனால் மனம் உடைந்த நர்சு தீக்குளித்து தற்கொலை செய்ய முயன்றார். இதில் தாயும், தந்தையும் தீயில் கருகினர்.

ஈரோடு மாவட்டம் பவானி அருகே ஆப்பக்கூடலை சேர்ந்த செல்வி (25) கோபிசெட்டிபாளையத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் நர்சாக வேலை செய்து வருகிறார்.

இவரது பக்கத்து வீட்டில் குடியிருந்தவர் திருமுருகன் (30). மனைவியைப் பிரிந்து வாழ்ந்து வரும் இவருக்கும் செல்விக்கும் கள்ளக்காதல் ஏற்பட்டது. 3 நாட்களுக்கு முன் இருவரும் வீட்டை விட்டு வெளியேறி போலீஸ் நிலையத்துக்கு சென்று தங்களுக்கு பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்தனர்.

இதையடுத்து இருவரின் பெற்றோரையும் போலீசார் அழைத்து பேச்சு நடத்தினர். திருமுருகன் ஏற்கனவே திருமணம் ஆனவர் என்பதால் செல்வியை போலீசார் அவரிடமிருந்து பிரித்து பெற்றோருடன் அனுப்பி வைத்துவிட்டனர்.

இதனால் வேதனையடைந்த திருமுருகன் நேற்று முன்தினம் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இந்தத் தகவலை அறிந்த செல்வி தனது பெரியப்பாவின் குடிசை வீட்டுக்குச் சென்று உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். உடல் கருகி அலறித் துடித்தார். இதில் அந்த வீடும், தொடர்ந்து அருகருகே இருந்த 5 குடிசை வீடுகளும் தீப்பற்றிக் கொண்டன.

அந்த வீடுகளில் இருந்தவர்கள் அலறியடித்தபடி வெளியே ஓடி வந்தனர். செல்வியின் தந்தை அம்மாசை, தாய் பத்மினி ஆகியோர் வீட்டிற்குள் ஓடிச்சென்று தீயை அணைத்து மகளை மீட்டனர். பலத்த தீக்காயம் அடைந்த செல்வி ஈரோடு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
செல்வியைக் காப்பாற்றியபோது அம்மாசை, பத்மினி ஆகியோருக்கும் தீக்காயம் ஏற்பட்டது. இவர்களும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக