திங்கள், 27 ஜூன், 2011

தங்கர் பச்சானின் பொழுதுகளை களவாடியது யார்?



என் நிலைமை யாருக்கும் வரக்கூடாது: கதறும் தங்கர் பச்சான்!

களவாடிய பொழுதுகள் படத்தை முடித்து ஆண்டுகள் பல ஆகியும் ரிலீஸ் செய்யாமல் இருப்பதை நினைத்து, நினைத்து தினமும் வருந்திக்கொண்டு இருக்கிறார் டைரக்டர் தங்கர் பச்சான். அழகி, சொல்ல மறந்த கதை, தென்றல், பள்ளிக்கூடம் என்று இதுவரை மண் சார்ந்த, மக்கள் சார்ந்த படமாக எடுத்த டைரக்டர் தங்கர் பச்சான், மீண்டும் ஒரு உணர்வுபூர்வமாக ஒரு கதையை எழுதி, இயக்கி இருக்கும் படம் தான் "களவாடிய பொழுதுகள்". பிரபுதேவா, பூமிகா ஆகியோர் நடிப்பில் உருவாகியிருக்கும் இந்தபடம் முடிந்து ஆண்டுகள் பலஆகியும், ரிலீஸ் செய்ய முடியாமல், பெட்டியில் தூங்கி கொண்டு இருக்கிறது.

ஐங்கரன் பிலிம்ஸ் இப்படத்தை தயாரித்துள்ளது. ஐங்கரன் பிலிம்ஸ் தயாரித்த சமீபத்திய படங்கள் எல்லாம் தொடர் தோல்வியை சந்தித்தன. "அங்காடித்தெரு" படம் ஓரளவுக்கு நிலைமையை சரி செய்து கொடுத்தாலும், ஐங்கரனால், இப்படத்தை ரிலீஸ் செய்ய முடியவில்லை. படத்தின் தயாரிப்பாளர் கருணாமூர்த்தி வெளிநாட்டிற்கு சென்றுவிட்டார். மற்றொருவர் அருண்பாண்டியனும் அரசியல் அப்படி, இப்படி என்று சொந்த வேலைகளில் கவனம் செலுத்த ஆரம்பித்துவிட்டார். ஆனால் படத்தை இயக்கிய தங்கர் பச்சனோ என்ன செய்வது என்று புரியாமல் தவித்து வருகிறார். மேலும் தன்னுடைய அடுத்த படவேலைகளிலும் கவனம் செலுத்த முடியாமல் இருக்கிறார்.

இதுகுறித்து தங்கர் கூறியதாவது, ஒரு படத்தை முடித்துவிட்டு, பல வருடங்களாக அந்த படத்தை ரிலீஸ் செய்ய முடியாமல் படைப்பாளி காத்திருப்பது மிக கொடுமையான விஷயம். என்னுடைய முந்தயை படங்களை எல்லாம் 90நாட்களில் கூட முடித்து ரிலீஸ் செய்திருக்கிறேன். ஆனால் களவாடிய பொழுதுகளை முடித்து ஆண்டுகள் பல ஆகியும், இவ்வளவு காலம் காத்திருப்பது வருந்தத்தக்கது. என்னால் எந்த வேலையிலும் கவனம் செலுத்த முடியவில்லை. எப்பொழுதும் மனதில் "களவாடிய பொழுதுகள்" படத்தை பற்றிய சிந்தனை தான் ஓடிக்கொண்டு இருக்கிறது. என் நிலைமை யாருக்கு வரக்கூடாது. தமிழ் சினிமா எந்த அளவிற்கு வளர்ச்சி அடைந்துள்ளதோ, அதே அளவுக்கு பிரச்சனைகளும் அதிகரித்து இருக்கிறது. இதுவரை பிரபுதேவாவை ஒரு நடன இயக்குநராக, டைரக்டராக தான் எல்லாருக்கும் தெரியும். ஆனால் இந்தபடத்தின் மூலம் அவரை ஒரு அருமையான நடிகராக பார்க்க முடியும். "களவாடிய பொழுதுகள்" மனித உறவுகளை, உணர்வுகளை பேசும் என்றும், அந்த நாளுக்காக நான் காத்திருப்பதாகவும் வருத்தத்துடன் கூறினார்.
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக