செவ்வாய், 7 ஜூன், 2011

ஈரோடு, விசிறி தயாரிக்க மயில் தோகை!கொல்லப்படும் தேசிய பறவை?

ஈரோடு மாவட்டத்தில் மயில் இறகுகளால் செய்யப்பட்ட விசிறிகளின் விற்பனை ஜோராக நடந்து வருகிறது. மர்ம நபர்கள் விசிறிக்காக மயிலை கொன்று குவிக்கின்றனரா என்ற சந்தேகம் மக்கள் மனதில் எழுந்துள்ளது. இந்தியாவின் தேசியப்பறவை மயில். தோகை விரித்தாடும் போது அதனழகில் மனதை பறிகொடுக்காதவர் யாரும் இல்லை எனலாம். அனைத்து தரப்பினரும் விரும்பும் பறவையினம் என்பதால் மயிலை தேசியப் பறவையாக அரசு அறிவித்தது. மதுரையில் திருப்பரங்குன்றம், நெல்லை, தென்காசி ஆகிய பகுதிகளில் அதிகமாக மயில்கள் உள்ளன. ஈரோட்டில் பூந்துறை, சத்தி, குன்னத்தூர், திருப்பூர், கோபி ஆகிய பகுதிகளில் உள்ள அதிகமாக மயில்கள் உள்ளன. பொதுவாக விவசாய நிலங்களில் பயிரிட்டுள்ள நெல், கம்பு ஆகியவற்றை உட்கொள்ள, விளைநிலங்களை நோக்கி மயில்கள் படையெடுப்பது வழக்கம். இதனால் பயிர்களை நாசம் செய்யும் மயிலுக்கு, விஷம் வைத்து விவசாயிகள் வேட்டையாடினர். இதனால், மயில் இனங்கள் வெகுவாக குறைந்தது. மாநிலம் முழுவதும் மயில் இனங்களை காப்பாற்ற வனத்துறையினர் முடுக்கி விடப்பட்டனர். ஆனால் தொடர் நடவடிக்கை இல்லை. ஈரோட்டில் மயில் இறகால் செய்யப்பட்ட விசிறி விற்பனை ஜரூராக நடந்து வருகிறது. ஒரு விசிறி 50 முதல் 60 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. விசிறிக்காக தேசியப்பறவை கொல்லப்படுகிறதா? என்ற சந்தேகம் மக்கள் மனதில் எழுந்துள்ளது. வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது: விளைநிலங்களை நாசம் செய்யும் மயில்கள் குறித்து வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தால், அவற்றைப் பிடித்து வனப்பகுதிக்குள் விட நடவடிக்கை எடுக்கப்படும். இறைச்சிக்காகவும், இறகுக்காகவும் மயிலை கொல்பவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். மயில் இறகால் ஆன விசிறியை விற்பவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும். மயில் கொல்லப்படுவதாக வனத்துறைக்கு எந்த தகவலும் வரவில்லை. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக