திங்கள், 6 ஜூன், 2011

மத்திய திட்டக்குழு:திமுக ஆட்சியின் செயற்பாடுகள் திறமையாகவே இருந்தது

 5 ஆண்டுகளி்ல் தமிழகத்தின் செயல்பாடு சிறப்பாகவே இருந்தது-மான்டேக் சிங்

சென்னை: இந்தியாவில் மிகச் சிறப்பாக செயல்படும் மாநிலங்களில் தமிழகமும் ஒன்று. கடந்த 5 ஆண்டுகளி்ல் தமிழகத்தின் பொருளாதார செயல்பாடு, பிற மாநிலங்களை விட சிறப்பாகவே இருந்தது என்று மத்திய திட்டக்குழு துணை தலைவர் மான்டேக் சிங் அலுவாலியா கூறினார்.

இந்தியன் ஓவர்சீஸ் வங்கி பவள விழா நிகழ்ச்சியில் பங்கேற்ற சென்னை வந்த அவர் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசுகையில்,

தற்போது பணவீக்கம் படிப்படியாக குறைந்து வருகிறது. விரைவில் பணவீக்கம் கட்டுக்குள் வரும். இதனால் வட்டி விகிதத்தில் மாற்றம் செய்யும் நிலை ஏற்படாது.

இந்திய அளவில் பொருளாதார ரீதியிலும், வளர்ச்சித் திட்டங்களிலும் சிறப்பாக செயல்படும் மாநிலங்களில் தமிழகமும் ஒன்று. கடந்த 5 ஆண்டுகளில் பிற மாநிலங்களை விட தமிழகத்தின் வளர்ச்சி திட்டப் பணிகள் சிறப்பாக இருந்தன.

தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் புதிய அரசுகள் பொறுப்பேற்றுள்ளன. இந்த அரசுகளுடன் பேசுவோம் என்றார்.

பின்னர் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி பவள விழா நிகழ்ச்சியில் பேசிய அவர், ஒருங்கிணைந்த வளர்ச்சியை அடைய மாநிலங்கள் மானியங்கள் அளிப்பதை குறைக்க வேண்டும். இப்போது 12வது ஐந்தாண்டு காலத்தை எதிர்நோக்கி இருக்கிறோம்.

11வது ஐந்தாண்டு காலத்தில் நாடு 9 சதவீத வளர்ச்சியைப் பெற வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் 8.2 சதவீத வளர்ச்சியைத் தான் எட்ட முடிந்துள்ளது. 10வது ஐந்தாண்டு காலத்துடன் ஒப்பிடும்போது 1 சதவீத வளர்ச்சியைத் தான் எட்டியுள்ளோம்.

ஆனாலும் கடந்த ஐந்தாண்டுகளில் மிகப் பெரிய உலகப் பொருளாதார வீழ்ச்சிக்கு இடையே 8.2 சதவீத வளர்ச்சியை நாம் அடைந்திருப்பது பெரிய விஷயம் தான். அடுத்து வரும் 12வது ஐந்தாண்டு காலத்தில் நாடு ஒருங்கிணைந்த வளர்ச்சியை அடைய மானியங்களை குறைப்பது, விவசாய வளர்ச்சி, எரிசக்தி ஆகியவற்றில் நாம் கவனம் செலுத்த வேண்டும்.

மாநிலங்கள் தேவையற்ற மானியங்கள் வழங்குவதை வழக்கமாகக் கொண்டுள்ளன. உணவுக்கு மானியம் வழங்குவதை தவிர்க்க முடியாது. ஆனால், மண்ணெண்ணெய், டீசல், சமையல் எரிவாயு உள்ளிட்டவற்றுக்கு மானியங்கள் வழங்குவதை மாநிலங்கள் குறைத்துக் கொள்ள வேண்டும்.

அவ்வாறு மானியங்கள் குறைக்கப்படாவிட்டால் குறைந்த வளர்ச்சி, குறைந்த வேலைவாய்ப்பு, குறைந்த உற்பத்தியையே மக்களும், நாடும் எதிர்கொள்ள வேண்டி வரும்.

எரிசக்தியைப் பொருத்தவரை 70 முதல் 85 சதவீதம் வரை கச்சா எண்ணெய் இறக்குமதியையே நாடு நம்பியுள்ளது. அடுத்த 5 அல்லது 6 ஆண்டுகளில் உலகம் மிகப் பெரிய எரிபொருள் தட்டுப்பாடை சந்திக்க உள்ளது. எனவே, சூரியசக்தி உள்ளிட்ட மாற்று எரிபொருளில் கவனம் செலுத்த வேண்டும் என்றார். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக