வியாழன், 9 ஜூன், 2011

திமுகவின் மெட்ரோ ரயில் திட்டம் கைவிடப்படமாட்டாது,அமைச்சர்

திட்டமிட்டபடியே மெட்ரோ ரயில் திட்டம் நிறைவேற்றப்படும் : அமைச்சர் விஸ்வநாதன்

சென்னை : ""சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தை, இந்த அரசு கைவிடவில்லை. திட்டமிட்டபடி, அப்படியே நிறைவேற்றப்படும். குறுகிய காலத்தில் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண, கூடுதல் வசதியாக தான், "மோனோ ரயில்' திட்டம் கொண்டு வரப்படுகிறது,'' என, அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் தெரிவித்தார்.

கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது சட்டசபையில் நடந்த விவாதம்: வெற்றிவேல் - அ.தி.மு.க: குடும்பத்தில் பிரச்னை ஏற்பட்டதும், "அரசு கேபிள் கார்ப்பரேஷனை' ஆரம்பித்து, 1,000 கோடி ரூபாய்க்கு மேல் செலவழிக்கப்பட்டது. குடும்பம் சமாதானமானதும், "கண்கள் பனித்தன' எனக் கூறி, கேபிள் கார்ப்பரேஷனுக்கு மூடுவிழா செய்யப்பட்டது. தற்போது, மக்களுக்கு அரசு கேபிள், "டிவி' இணைப்பு, அதை இயக்குபவர்களை பாதிக்காமல் வழங்கப்படுமென்ற அறிவிப்பு, மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

கடந்த ஆட்சியில், கான்கிரீட் வீடு கட்டுவதற்காக வழங்கப்பட்ட தொகை போதாமல், கடன் வாங்கி ஓய்ந்து போய் விட்டனர். "வட்டிக்கு கடன் வாங்கி அதில் ஒரு அட்டிகை வாங்கி, அதை விற்று வட்டி கட்டியது போல' இருந்தது.

தா.கிருஷ்ணன் கொலை வழக்கில் மேல்முறையீடு செய்து, உண்மை குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும். பனையூர் இரட்டை கொலை வழக்கில் பிடிபட்டவர், காவலில் மரணமடைந்த விவகாரத்தில் உண்மையை விசாரிக்க வேண்டும். நீச்சல் வீரர் பாலகிருஷ்ணா தாக்கப்பட்ட விவகாரத்தை விசாரிக்க வேண்டும். மாநகராட்சி ஆமை வேகத்தில் செயல்படுகிறது.

சபாநாயகர் ஜெயக்குமார் : நீங்கள், "ஸ்பீடா' பேசுங்க...

கணேஷ்குமார் - பா.ம.க: செஞ்சியில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க கோட்டை, பராமரிப்பின்றி, பாதுகாப்பற்றதாக உள்ளது. இதை, சுற்றுலா பயணிகள் வந்து செல்லும் விதமாக, அழகிய சுற்றுலா மையமாக மாற்ற வேண்டும். கோட்டையில், சட்டசபையை நடத்த இடம் போதுமானதல்ல என்று முந்தைய அ.தி.மு.க., அரசு தான் முதலில் கூறியது. பின், ராணிமேரி கல்லூரி, அண்ணா பல்கலைக்கழகம், கேளம்பாக்கம் போன்ற இடங்களில் தலைமைச் செயலகம் கட்ட முயற்சி எடுத்தது.

அடுத்து வந்த அரசு, 1,200 கோடி ரூபாய் செலவில் கட்டிய தலைமைச் செயலகம் வசதியாக உள்ளது. அதை பயன்படுத்த வேண்டும். வளர்ந்த நாடுகளில் தோல்வியடைந்த மோனோ ரயில் திட்டத்தை இங்கு செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. எந்த நாட்டிலும், 30 கி.மீ., தூரத்துக்கு மேல் மோனோ ரயில் செயல்படுத்தப்படவில்லை. ஆனால், இங்கு முதல் கட்டமாக, 110 கி.மீ.,க்கு செயல்படுத்தப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்தினால் தான் சிறப்பாக இருக்கும்.

அமைச்சர் நத்தம் விஸ்வநாதன்: ஏதோ மெட்ரோ ரயில் திட்டம் கைவிடப்பட்டது போலவும், மோனோ ரயில் திட்டம் தான் அறிமுகப்படுத்தப்படுவது போலவும் தகவல் தருகிறார். இந்த அரசு, மெட்ரோ ரயில் திட்டத்தை கைவிடவில்லை. திட்டமிட்டபடி அந்த திட்டம் அப்படியே நிறைவேற்றப்படும்.

சென்னையில் நாளுக்கு நாள் பெருகி வரும் போக்குவரத்து நெரிசலை குறைக்க, குறுகிய காலத்தில் செயல்படுத்தக் கூடிய போக்குவரத்து வசதியாக, ஒரு கூடுதல் வசதியாக தான் மோனோ ரயில் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. பல நாடுகளில், மோனோ ரயில் திட்டம் வெற்றிகரமாக செயல்படுகிறது. மோனோ ரயில் திட்டத்தை இரண்டு ஆண்டுகளில் செயல்படுத்த முடியும் என்பதாலும், மெட்ரோ ரயில் செயல்பாட்டுக்கு வர தாமதமாகும் என்பதாலும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

அமைச்சர் கோகுல இந்திரா: புதிய தலைமைச் செயலகத்துக்கு ஏன் மாற்றவில்லை என்பதற்கான விளக்கத்தை முதல்வர் ஜெயலலிதா தெளிவாக அளித்துள்ளார். 2001-06 ஆட்சி காலத்தில், புதிய தலைமைச் செயலகம் அமைக்க, ஜெயலலிதா எடுத்த ஆக்கப்பூர்வ முயற்சிகளை தடுத்தவர்கள் தி.மு.க.,வினர். இவ்வாறு விவாதம் நடந்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக