வியாழன், 2 ஜூன், 2011

காதலித்து திருமணம் செய்வதாக சீமான் ஏமாற்றினாரா? நடிகை விஜயலட்சுமி புகாருக்கு சீமான் மறுப்பு

vijayalasmy
``என் புகழை கெடுக்க திட்டமிட்ட சதி''-  சீமான்
காதலித்து திருமணம் செய்வதாக ஏமாற்றிவிட்டதாக நடிகை விஜயலட்சுமி கொடுத்த புகாருக்கு நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் மறுப்பு தெரிவித்துள்ளார்.
``அரசியலில் எனக்குள்ள புகழை கெடுப்பதற்காக திட்டமிட்டு சதி செய்து இந்த பொய் புகார் கொடுக்கப்பட்டுள்ளது'' என்று அவர் தெரிவித்துள்ளார்.
`பிரண்ட்ஸ்' படத்தில் நடிகர் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்தவர் விஜயலட்சுமி. இவர் ``பாஸ் என்ற பாஸ்கரன்'' படத்திலும் நடித்துள்ளார். அதோடு, தெலுங்கு படங்களிலும் நடித்திருக்கிறார்.
இவர் சென்னை சாலி கிராமத்தில் குடும்பத்தோடு வசித்து வருகிறார். நேற்று மாலையில், விஜயலட்சுமி போலீஸ் கமிஷனர் திரிபாதியை சந்தித்து, பரபரப்பான புகார் மனு ஒன்றை கொடுத்தார். அந்த புகார் மனுவில், நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் மீது பரபரப்பான குற்றச்சாட்டை கூறியுள்ளார்.
காதலித்து ஏமாற்றினார்
இந்த புகார் மனு பற்றி முதலில் போலீஸ் தரப்பில், உறுதி செய்ய மறுத்துவிட்டனர். நேற்று இரவு புகார் கொடுத்தது உண்மைதான் என்று தென்சென்னை இணை கமிஷனர் சண்முக ராஜேஸ்வரன் கூறினார்.
சீமான் 3 ஆண்டுகளாக தன்னை காதலித்ததாகவும், திருமணம் செய்வதாக சொல்லி, நெருங்கி பழகியதாகவும், தற்போது தன்னை திருமணம் செய்ய மறுப்பதாகவும், இது தொடர்பாக சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், இதுபற்றி வளசரவாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜீவானந்தத்தை விசாரணை நடத்தும்படி உத்தரவிட்டுள்ளதாகவும் இணை கமிஷனர் சண்முக ராஜேஸ்வரன் மேலும் கூறினார்.
சீமான் தரப்பில் மறுப்பு
இந்த புகார் தொடர்பாக, சீமானிடம் கருத்து கேட்க செல்போனில் நிருபர்கள் தொடர்பு கொண்டபோது, அவர் செல்போனை எடுத்து பேசவில்லை. ஆனால், அவர் சார்பாக, அவரது வக்கீல் சந்திரசேகரன் நிருபர்களிடம் பேசினார்.
வக்கீல் சந்திரசேகரன் கூறியதாவது:-நடிகை விஜயலட்சுமி புகார் கொடுத்தது பற்றி எங்களுக்கு எந்த தகவலும் இல்லை. விஜயலட்சுமி, அவரது அக்காள் விவாகரத்து வழக்கு தொடர்பாக உதவி கேட்டு, சீமானை ஒருமுறை சந்தித்து பேசினார். அது தொடர்பாக உதவி செய்யும்படி, சீமான் என்னிடம் கூறினார்.

அந்த ஒருமுறை மட்டுமே விஜயலட்சுமி சீமானை சந்தித்து பேசினார். அதன் பிறகு, அவர் சீமானை பார்க்கவே இல்லை. சீமான் இலங்கை போரில் பாதிக்கப்பட்ட இலங்கை தமிழ் பெண் ஒருவரை விரைவில் திருமணம் செய்ய உள்ளார். அவரது பெற்றோரும் இதற்கு சம்மதம் தெரிவித்து விட்டனர். இதை கெடுக்கவும், அரசியலில் சீமானுக்கு உள்ள புகழை அழிக்கவும், திட்டமிட்டு சதி செய்து, இதுபோன்ற தவறான தகவல்கள் பரப்பப்பட்டுள்ளது. புகார் கொடுத்தது உண்மையாக இருக்கும் பட்சத்தில் அதை சீமான் சட்டப்பூர்வமாக சந்திப்பார்.

இவ்வாறு வக்கீல் சந்திரசேகரன் தெரிவித்தார்
.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக