ஞாயிறு, 5 ஜூன், 2011

என்னைக் கொல்ல மத்திய அரசு சதி-ராம்தேவ் பரபரப்பு புகார்

டெல்லி: தன்னைக் கொல்ல மத்திய அரசு சதி செய்வதாகவும், தனது உயிருக்கு ஏதாவது ஆபத்து ஏற்பட்டால் அதற்கு மத்திய அரசே பொறுப்பு என்று யோகா குரு பாபா ராம்தேவ் கூறியுள்ளார்.

நேற்று நள்ளிரவில் அவரது உண்ணாவிரதப் போராட்டத்தை டெல்லி போலீசாரை வைத்து வன்முறை மூலம் முறியடித்தது மத்திய அரசு. இதையடுத்து வலுக்கட்டாயமாக ஹரித்வாரில் உள்ள அவரது ஆசிரமத்துக்குக் கொண்டு செல்லப்பட்ட ராம்தேவ் இன்று நிருபர்களிடம் பேசுகையில்,

கறுப்புப் பணத்துக்கு எதிரான எனது உண்ணாவிரதப் போராட்டம் தொடரும். என் வாழ்வில் முதல் முறையாக வன்முறையை நான் எதிர்கொண்டுள்ளேன். எனது உண்ணாவிரதப் போராட்டத்தில் பங்கேற்ற குழந்தைகள், பெண்களைக் கூட போலீசார் அரக்கத்தனமாக தாக்கினர்.

அவர்கள் மீது தாக்குதல் வேண்டாம் என்று நான் பலமுறை கெஞ்சியும் அதை அவர்கள் காதில் வாங்கவில்லை. அது எனக்கு ஜாலியன் வாலாபாக் கொடூரத்தைத் தான் நினைவூட்டியது.

அகிம்சை முறையிலான போராட்டத்தை அரசு அடக்குமுறை மூலம் அடக்க முயன்றது கேவலமானது. அது ஒரு கருப்பு தினம். ஜனநாயகத்தில் விழுந்த கறை.

கறுப்புப் பணம் தொடர்பான விவகாரத்தில் என்னிடம் அரசு பேச்சு நடத்தியபோது பல உறுதிமொழிகளைத் தந்தது. ஆனால், அதை நான் எழுத்துப்பூர்வமாக கேட்டபோது, அரசு பல்டி அடித்தது. இதிலிருந்து அவர்கள் தந்தது போலியான உறுதிமொழி என்பது உறுதியாகிறது.

இப்போது எனது உயிருக்கே மத்திய அரசு குறி வைத்துள்ளது. எனக்கு ஏதாவது நேர்ந்தால் அதற்கு மத்திய அரசு தான் பொறுப்பு.

என்னை பாஜகவுடன் இணைத்து உண்மையை திசை திருப்ப மத்திய அரசு முயல்கிறது. நான் எந்த அரசியல் அமைப்பையும் சாராதவன் என்றார்.

முன்னதாக தனது உண்ணாவிரதத்தை போலீசார் தடுத்து தன்னை தூக்கிச் சென்ற நிலையில் ஒரு தொலைக்காட்சியை அவர் தொடர்பு கொண்டு பேசினார். அவர் அளித்த பேட்டியில்,
ஊழல், கறுப்புப் பணத்துக்கு எதிராக நாங்கள் ராம் லீலா மைதானத்தில் நடத்திய உண்ணாவிரதம் மிகவும் அமைதியான முறையில் நடந்தது. ஆனால் போலீசார் இப்படி அதிரடியாக புகுந்து எங்கள் உண்ணாவிரதத்தை முறியடித்தது சட்ட விரோதமானது. நானோ, எனது சீடர்களோ எந்த பாவமும் செய்யவில்லை. ஆனால், போலீசார் ஏன் இவ்வளவு கொடூரமாக நடந்து கொண்டார்கள் என்று தெரியவில்லை.

இது குறித்து என்னிடம் ஒரு போலீஸ் அதிகாரி கூட பேசவில்லை. உண்ணாவிரதம் இருந்தவர்கள் மீது போலீசார் மிகவும் அத்துமீறி நடந்து கொண்டனர். பெண்களை வலுக்கட்டாயமாக தூக்கி சென்றது எந்த வகையில் நியாயம்?.
ஊழலுக்கு எதிராக மக்கள் போராட்டம் நடத்தக் கூடாதா?. நான் பிரதமரை கேட்கிறேன், என்னை நீங்கள் கைது செய்ய விரும்பினால், உரிய வாரண்டுடன் அல்லவா போலீசாரை அனுப்பியிருக்க வேண்டும். அந்த உத்தரவைக் காட்டி பகல் நேரத்தில் கைது செய்திருக்கலாமே. ஏன் இரவில் திருடர்கள் போல வந்து எங்களை வெளியேற்ற வேண்டும்?.

போலீசாரின் மனித நேயமற்ற இந்த கொடூர செயலுக்கு கண்டனம் தெரிவித்து நாடெங்கும் உள்ள மக்கள் மிகவும் அமைதியான தங்கள் எதிர்ப்பைத் தெரிவிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இந்த எதிர்ப்புப் போராட்டத்தின் போது தயவு செய்து யாரும், எந்த வன்முறையிலும் ஈடுபடக் கூடாது. அப்பாவி மக்கள் எந்த விதத்திலும் யாராலும் பாதிக்கப்படக் கூடாது என்றார்.

அமலாக்கப் பிரிவு விசாரணை:

இந் நிலையில் பாபா ராம்தேவின் ஆசிரமத்துக்கு வந்த வெளிநாட்டு நன்கொடைகள் குறித்து அமலாக்கப் பிரிவின் விசாரணைக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வருகின்றன.

English summary
Baba Ramdev, whose indefinite fast was ended abruptly by Delhi Police in a mid-night swoop, condemned the "excesses" on his followers. Speaking to a TV channel from an undisclosed location, he termed the police operation at Ramlila Maidan, venue of his agitation, as unfortunate. "I request the Prime Minister that if they want to arrest me, then they should arrest me with a proper warrant during the day time. Why they came like thieves and did this, it is unfortunate," he said and also asked people to protest the police action.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக