செவ்வாய், 28 ஜூன், 2011

வீர வசனங்களால் பாதிக்கப்படுவது அப்பாவிப் பொதுமக்களே!

கூட்டமைப்புத் தலைவர்களின் வீர வசனங்களால் பாதிக்கப்படுவது அப்பாவிப் பொதுமக்களே!
க. சிவராசா
தமிழ்க் கூட்டமைப்பு பாராளு மன்ற உறுப்பினர்கள் சிலர் அரசாங்கத்திற்கு எதிராகவும் மற்றும் சிலர் அரசாங்கத்தை மறைமுகமாகச் சாடியும் வெளியிட்டு வரும் கருத்துக்கள் தொடர்பாகத் தமிழ் மக்கள் மத்தியில் பல்வேறுவிதமான சந்தேகங்கள் எழுந்துள்ளன. இன்று தமிழ் ஊடகங்களை மட்டுமே நம்பி அதன் மூலமாக அரசியல் நடத்தி வரும் கூட்டமைப்பு அரசியல் தீர்வில் இதுவரை தமது உண்மையான நிலைப்பாட்டைத் தெரிவிக்கவில்லை.
நேற்று ஒரு அறிக்கை, இன்று அதற்கு முரணான கருத்து நாளை மற்றொரு சம்மந்தமே இல்லாத அறிக்கை என்பதாகவே இவர்களது காலம் கடந்து வருகிறது. தாளம்போடும் தமிழ் ஊடகங்கள் இவர்கள் சொல்வதுதான் தமிழ் மக்களது வேதவாக்கு என்பதாக அவர்களது சகல அறிக்கைகள் மற்றும் கருத்துக்களுக்கு அதி முக்கியத்துவம் அளித்து வருகிறது கவலைக் குரிய விடயமே. புலிகள் அழிக்கப்பட்ட பின்னர் தமிழ் மக்களின் இன்றைய உண்மையான மன உணர்வு என்ன என்பது கூட்டமைப்பால் புரிந்து கொள்ளமுடியாதுள்ளது. அதனால்தான் அவர்களால் ஒரு தீர்க்கமான முடிவிற்கு இன்னமும் வரமுடியாதுள்ளது. மாறுபட்ட கருத்துக்களை தமிழ் ஊடகங்களிலும், முகவரியற்ற இணையத்தளங்களிலும் தெரிவித்து உள்நாட்டிலுள்ள மக்களை ஒருவிதமாகவும், புலம்பெயர் சமூகத்தை இன்னொருவிதமாகவும் கூட்டமைப்பு குழப்பி வருகிறது. மக்கள் தம்மைப் புறக்கணித்து விடுவார்களோ எனும் பயம் கூட்டமைப்பு மத்தியில்இப்போது மிக வலுப்பெற்றுள்ளது.
அதே நிலையில்தான் உள்நாட்டிலுள்ள தமிழ் ஊடகங்களின் நிலையும் உள்ளது. தமிழ்க் கூட்டமைப்பிற்கு ஆதரவாக செய்திகளைப் பிரசுரிப்பதன் மூலமாகத் தமிழ் மக்களின் உணர்வுகளுக்குத் தாம் மதிப்பளிப்பது போல மதிப்பளித்து தமது ஊடகங்களைப் பிரபல்யமாக்கி விற்பனையையும் அதிகரித்து வருகின்றன. இந்த சாதகமான நிலைமையை கூட்டமைப்பும் சரியாகவே பயன்படுத்தி வருகின்றது.
அளவெட்டி போன்ற உண்மையான சம்பவங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பது தேவைதான். ஆனால் அதனையே சாட்டாக வைத்துக் கொண்டு கண்டபடி அறிக்கைகளை விடுவது அழகல்ல. அது இரு தரப்பிற்கும் குரோத ங்களை வளர்ப்பதாகவே அமையும். அமைச்சர்களுக்கு வழங்கப்படும் பாதுகாப்புப் பிரிவினர் தமிழ்க் கூட்டமைப்பு எம். பிக்களைக் காப்பாற்றி அழைத்துச் சென்று கொழும்பில் குளிரூட்டி அறைகளில் தங்க வைத்துவிடுவர். ஆனால் சம்பவ இடத்திலோ அப்பாவிப் பொது மக்கள் படும்பாடு தெரியும்தானே? இதைத்தான் முன்னர் புலிகளும் செய்தனர். அடித்துவிட்டு ஓடிவிடுவர். பின்னர் அடிவாங்குவது அப்பாவிப் பொது மக்கள்தான். இது வடக்கு, கிழக்கு மக்களுக்கு நன்கு தெரியும்.
அதேசமயம் வெளிநாடுகளிலிருந்து இயங்கும் முகவரியில்லாத இணையத் தளங்கள் பலவற்றில் கூட்டமைப்பு முக்கியஸ்தர்கள், இலங்கைப் பத்திரிகைகளில் தாம் வெளியிடும் கருத்துக்களுக்கு முற்றிலும் முரணான வகையில் பிரசாரம் செய்து வருகின்றனர். இது புலிகளின் நினைவுடன் இன்னமும் தமது வாழ்வை வாழ்ந்து வரும் புலம்பெயர் சமூகத்தைத் திருப்திப்படுத்தவே என்பது எல்லோருக்கும் தெரியும்.
அவ்வாறு செயற்பட்டால்தான் உள்ளூர் மக்களுக்கு நிதி என புலம்பெயர் சமூகத்திடம் வசூல் செய்யலாம் என்பதை கூட்டமைப்பிலுள்ள ஒருசிலர் நன்கறிந்து வைத்துள்ளனர். போட்டி போட்டு விளம்பரத்தைத் தேடும் இணையத் தளங்களுக்கும் இந்தக் காலகட்டம் ஒரு உச்சமான காலகட்டம்தான். தம்மைப் பற்றிய நல்ல செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுத்தால் இவர்கள் தாம் ஐரோப்பிய நாடுகளுக்குச் செல்லும் போது இணையத் தளங்களுக்கு விசேட கவனிப்பையும் செய்து வருகிறார்கள்.
அரசாங்கத்தை கடுமையான தொனியில் விமர்சித்துவரும் கூட்டமைப்பு எவ்வாறு அரசுடன் உண்மையான பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ள முடியும் என்பதில் பலருக்கு சந்தேகம் உள்ளது. தமிழ் மக்களது பிரச்சினைகளில் அக்கறையுடன் செயற்படும் அனைத்துக் கட்சிகளினதும் கருத்துக்களை உள்வாங்கியே தீர்வு காணப்பட வேண்டும் என்பதில் அரசாங்கம் உறுதியாக உள்ளதாகத் தெரிவித்துள்ளது.
தமிழ் மக்களிடையே செல்வாக்கும், ஆதரவும் எமக்கே உள்ளது எனக் கூட்டமைப்பு பீற்றிக் கொண்டாலும் அம்மக்களின் உண்மையான நிலைப்பாடு என்ன என்பது இன்று புரியாத ஒன்றாகவே உள்ளது. விடுதலைப் புலிகள் இருந்த போது முதலிரு தடவைகள் தெரிவாகி அவர்கள் அழிந்த பின்னரும் அந்தப் பொய்யான வீரவசனங்களைத் தொடர்ந்தும் பேசி தமிழ் மக்களை ஏமாற்றி வெற்றி பெற்ற பலர் இன்னமும் கூட்டமைப்பில் அங்கம் வகித்து வருகின்றனர். அதனால் இவர்கள் தமிழ் மக்களின் இன்றைய உண்மையான நிலைப்பாட்டை முதலில் அறிந்து கொள்ள வேண்டும்.
தமிழ் மக்கள் இன்று பழம்பெரும் தமிழ்க் கட்சிகள் மீது மிகவும் வெறுப்புற்றுக் காணப்படுகின்றனர். அதனால் புதிதாக மாற்றுக் கட்சியையும், துடிப்புள்ள தலைவர்களையும் காணத் துடிக்கிறார்கள். புலி இருக்கும் போது பாடிய அதே பல்லவியைப் பாடிக் கொண்டு அரசாங்கத்தின் சலுகைகளை மக்களுக்குக் கிடைக்கவிடாதுள்ளதுடன், அரசின் அபிவிருத்தித் திட்டங்களுக்கும் முட்டுக்கட்டை கொடுத்துக் கொண்டு, தாம் மட்டும் சகல பாராளுமன்ற வரப்பிரசாதங்களையும் குறைவில்லாது அனுபவித்து வரும் தமிழ்க் கட்சிகளின் தலைவர்களை தமிழ் மக்கள் வெறுத்து ஒதுக்கத் தொடங்கியுள்ளன.
யாழ்ப்பாணத்திலே இடம்பெறும் சம்பவங்களுக்கு அரசாங்கமே பொறுப்பேற்க வேண்டும் என கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் பல இணையத்தளங்களில் தெரிவித்து வருகின்றார். அங்கு நடப்பது என்ன என்பதை இவர் அறியாதிருக்க வாய்ப்பில்லை. ஒரு ஆயுதக் குழுவிலிருந்து போராட்டத்தில் ஈடுபட்ட இவரால் எவ்வாறு? எதற்காக? இப்படியான சம்பவங்கள் இடம்பெறுகின்றன என்பதை இலகுவாக அறிந்து கொள்ள முடியும்.

அரசாங்கத்தின் மீது பழிபோடுவதற்காக எவரும் இதனைச் செய்யலாம். அதற்காக இவர் செய்கிறார் அல்லது இவரது ஆட்கள் செய்கிறார்கள் என்று அர்த்தமில்லை. அரசாங்கத்திற்கு அபகீர்த்தியை ஏற்படுத்த ஆயுதக் குழுக்கள் எவற்றையெல்லாம் செய்வர் என்பது போராட்டத்தில் ஈடுபட்டிருந்த இவருக்கும், அனைவருக்கும் தெரிந்த விடயமே.

இவற்றைக் கட்டுப்படுத்த அரசாங்கம் தீவிரமாகச் செயற்பட்டால் தமிழர் பிரதேசத்தில் இராணுவமும், பொலிஸாரும் அடாவடித் தனமாகச் செயற்படுகின்றனர் என்று கூட்டமைப்பின் இதே தலைவர்கள் குற்றம் சாட்டுவார்கள். அதனால்தான் அரசாங்கம் இவ்விடயத்தை மிகுந்த அவதானத்துடன் கையாண்டு வருகின்றது.

எனவே அரசாங்கத்தின் மீது பழிபோடுவதை நிறுத்தி ஆக்கபூர்வமாகச் சிந்திக்க வேண்டும். கூட்டமைப்பிலுள்ள ஆயுதக் குழுவில் அங்கம் வகிக்காத சிரேஷ்ட அங்கத்தவர்கள் ஓரளவு பொறுப்புடன் செயற்பட்டு வருகின்றனர் எனக் கூறலாம். ஆனால் ஆயுதக் குழுவில் அங்கம் வகித்து அரசியலுக்கு வந்த பலரது போக்கு புலிகளின் அழிவுக்குப் பின்னர் சற்றே மாறுபட்டுக் காணப்படுவதை அவதானிக்க முடிகின்றது.

முன்னாள் புலி உறுப்பினர்களை முன்னிலைப்படுத்தி புலம்பெயர் சமூகத்திடம் வசூல் செய்வதில் வடக்கிலுள்ள சிலர் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். இவ்வாறானவர்களில் சிலர் கையும் களவுமாகப் பிடிபட்டும் உள்ளனர். இதனால் கூட்டமைப்பிற்கே அவப் பெயர் ஏற்படுறது. எனவே கூட்டமைப்பு இப்போது தமது அணிக்குள்ளே உள்ள புல்லுருவிகளை களைய வேண்டும்.
எவ்விடயத்திலும் காத்திரமான ஒரு அறிக்கையை தலைமை மட்டுமே விட வேண்டும். பக்குவமடையாத, அனுபவமில்லாத உறுப்பினர்கள் மக்களது தேவைகளை மட்டும் பூர்த்தி செய்பவர்களாக இருக்க வேண்டும். மக்களுக்குப் பல தேவைகள் உள்ளன. அரசியல் அதிகாரத்தை அனுபவம் உள்ளவர்களே கையாள வேண்டும். உங்களை நம்பியே மக்கள் வாக்குகளை வழங்கியுள்ளனர். அதற்கு கைமாறு செய்ய வேண்டியது உங்கள் பொறுப்பு அல்லவா?
அரசாங்கத்திற்கு தமது நல்லெண்ணத்தைக் காட்டுகின்றோம் எனப் புறப்பட்டு இன்று அரசாங்கத்தின் மீது வசைபாடும் வேலையிலேயே கூட்டமைப்பு ஈடுபட்டு வருகின்றது. குறிப்பாக தமிழ் மக்கள் தொடர்பாக கலந்துரையாடப் பல விடயங்கள் உள்ளன. அவை தொடர்பாக எதுவுமே பேசப்படுவதில்லை. முயற்சி எடுப்பதுவும் இல்லை. இறுதி யுத்தத்தின் போது பாதிக்கப்பட்ட மக்கள் இன்னமும் முழுமையாக இயல்பு வாழ்வுக்குத் திரும்பவில்லை. பலரைத் தேடி இன்றும் அவர்களது உறவுகள் அங்கும் இங்கும் அலைகின்றன. இவற்றைத் துரிதப்படுத்தி தமது மக்களுக்கு உதவுமாறு அரசாங்கத்திடம் கூட்டமைப்பு எப்போதாவது கேட்டார்களா? அரசாங்கமே கருணையுடன் அவை தொடர்பாக தீவிர கவனம் செலுத்தி செயற்பட்டு வருகின்றது.

கூட்டமைப்பு ஒரு கொள்கையில்லாது செயற்பட்டு வருவதாகப் பலரும் வெளிப்படையாகவே விசனம் தெரிவிக்கத் தொடங்கியுள்ளனர். தற்போது வடக்கில் தேர்தல் தொடர்பாக கதைக்கப்படுவதால் கூட்டமைப்புப் பிரதிநிதிக ளின் செயற்பாடுகள் அப்பகுதியில் சற்று தடல்புடலாகக் காணப்படுகிறது. ஆனால் மீள்குடியேற்றம், குடியேறியுள்ள மக்களுக்குள்ள குறைபாடுகள், சரணடைந்த இளைஞர்களின் நிலை, சிறையில் வாடும் அப்பாவித் தமிழ் இளைஞர்கள், யுவதிகளின் நிலை தொடர்பாக எவ்விதமான அக்கறையும் இவர்களுக்கு இல்லை போலவே தெரிகிறது.

 

அப்படியே யாராவது ஞாகப்படுத்தினால் ஒரு அறிக்கையை அல்லது கடிதத்தை எழுதி இவர்களது தமிழ் ஊடகங்களுக்கு வழமை போல அனுப்பி வைத்துவிடுவர். அவர்களுக்கும் செய்தி வேண்டுமே. தலைப்புச் செய்தியாகக் கூடப் பிரசுரித்து விடுவர். அந்தக் கடிதம் ஜனாதிபதிக்கோ அல்லது சம்பந்தப்பட்ட அமைச்சருக்கோ கிடைக்குதோ இல்லையோ பத்திரிகைகளுக்கு சரியான நேரத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு அது கிடைத்ததா என உறுதியும் செய்யப்பட்டு முக்கியத்துவம் அளித்துப் பிரசுரிக்குமாறும் கேட்டுவிட்டுத்தான் மற்ற வேலை. ஆனால் எல்லோரும் அல்ல ஒரு சிலர் என்றாலும் கூட்டமைப்பிற்கே அவப்பெயர். இதுவா தமிழ் மக்களுக்கான இவர்களது அரசியல்? இதற்காகவா தமிழ் மக்கள் இவ்வளவு வேதனைகளுக்கு மத்தியிலும் இவர்களைத் தெரிவு செய்தனர்? இன்று தமிழ் மக்களுக்காக இவர்கள் சிந்தித்துச் செயலாற்ற வேண்டிய உதவிகளை அரசாங்கம் தனது பிரதிநிதிகளூடாகச் செய்து வருகின்றது. இப்படி எழுதுவதால் அரசாங்கத்திற்கு வக்காளத்து வாங்குவதாக எண்ணிவிடக் கூடாது. இதுவே உண்மை. இதுவே யதார்த்தம்.
எனவே இத்தகைய விடயங்களில் அதிக கவனத்தைச் செலுத்துமாறு கூட்டமைப்பு உறுப்பினர்களைச் சம்பந்தன் ஐயா வற்புறுத்திக் கேட்க வேண்டும். அறிக்கைகள் விடுவதையும், கருத்துக்கள் கூறு வதையும் விடுத்து செயலில் காட்ட கூட்டமைப்பு முயல வேண்டும். தலைவரும் செயலாளரும் நல்லெண்ணத்தைக் காட்டி னால் மட்டும் போதாது. எல்லோருமே ஓரணியில் நிற்க வேண்டும். பிரிந்து சென்றமையால் ஏற்பட்ட இழப்புகளை இன்னமும், இனியும் உணராதிருந்தால் எவருமே தமிழ் மக்களின் பிரதிநிதிகளாக இருப்பதற்குத் தகுதியற்றவர்களே!!
- Thinakaran -

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக