செவ்வாய், 28 ஜூன், 2011

எங்காசு; நான் குடிக்கறேன்; கண்டவனுக்குகெல்லாம் நான் ஏன் பயப்படணும்

உழைப்பாளர்கள் கூடும், "கூலி முக்கிற்கு' தள்ளாடியபடி வந்தவரை, அவரது சக நண்பர், ""காலங் காத்தால தண்ணியப் போட்டுட்டு வரலாமா? வேலைக்கு கூப்புட வர்றவங்க, இங்க எல்லாருமே தண்ணி போட்டுட்டு நிக்கறதா தப்பா நெனைப்பாங்கல்ல ' என்று சொல்ல, அவரை அடிக்கப் பாய்ந்தார் மேற்படி "குடி'மகன்.

""எங்காசு; நான் குடிக்கறேன்; கண்டவனுக்குகெல்லாம் நான் ஏன் பயப்படணும்,'' என, நண்பரை எகிறிய "குடி'மகன், ""உன்னை வந்து வெச்சுக்கறேன்,'' என்று நகர்ந்தார். வாங்கி வைத்த "சரக்கை' எடுத்து அதிகாலையிலேயே "அட்சாரம்' போட்டிருப்பாரோ என்று விசாரிக்க, "டாஸ்மாக், பார்களில் காலை 6 மணிக்கே "சரக்கு' விற்பனை துவங்கும் அதிர்ச்சிச் செய்தி கிடைத்தது.

கடந்த அ.தி.மு.க., ஆட்சியில், மதுபானக் கடைகளை அரசே நடத்துவதென முடிவெடுக்கப்பட்டதால், பல்லாயிரம் பேருக்கு வேலையும் அரசுக்கு நல்ல வருவாயும் கிடைத்தது. பொதுவாக, புதிய ஆட்சி அமையும்போது முந்தைய ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட திட்டங்களை மாற்றுவது வாடிக்கை. ஆனால், "குடி' மகன்களை சந்தோஷத்தில் மூழ்கடிக்கும் விஷயத்தில் அ.தி.மு.க., அரசின் திட்டத்தை அப்படியே தி.மு.க., அர”ம் செயல்படுத்தியது.

காலை எட்டு மணிக்கு திறந்த மதுக்கடைகளை, பத்து மணிக்கு திறக்க வைத்தது மட்டுமே, கருணாநிதி காட்டிய அதிகபட்ச சமூக அக்கறை. ஆனாலும், வாடிக்கையாளர்களை ஏமாற்றக்கூடாது என்பதற்காக எட்டு மணிக்கே சரக்குகளை மறைமுகமாக சப்ளை செய்து, லாபம் பார்த்தனர் "பார்' உரிமையாளர்கள். ஆட்சி மாற்றத்துக்குப் பின், அவர்களின் தைரியம் அதிகரித்து, ஆறு மணிக்கே "சரக்கு' விற்பனையை துவக்கி விடுகின்றனர்.குவாட்டருக்கு 20 ரூபாய் அதிகம் வாங்கும் "பார்' சிப்பந்திகள், மதிப்பு கூடுதல் சேவையாக, இரண்டு டம்ளர்கள், தண்ணீர், சுண்டல், வெள்ளரியை "ஓசி'யாகக் கொடுக்கின்றனர்.

இதே டம்ளர் மற்றும் தண்ணீர் பாக்கெட் இரண்டும் தலா 4 ரூபாய்க்கும், சுண்டல் 10 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. இதோடு ஒப்பிட்டால், "சரக்குக்கு' அதிகமாகக் கொடுக்கும் 20 ரூபாய் ஒரு பொருட்டல்ல என்பதால் அதிக விலை கொடுக்க "குடி'மகன்கள் தயங்குவதில்லை. மேலோட்டமாகப் பார்த்தால், இது ஒரு சாதாரண நிகழ்வாகத் தெரியலாம். ஆனால், அதிகாலையில் கிடைக்கும் போதையானது உழைப்புக்கு "உலை' வைப்பதுடன், பல குடும்பங்களுக்கு பாடையும் கட்டுகிறது. இதை எதிர்த்து எந்த ஒரு அரசியல் கட்சியும் பேசத் தயாராக இல்லை.

குடிகாரர்கள் ஒழிந்து போனால் கொடி பிடிக்க ஆட்கள் இருக்க மாட்டார்கள் என்பது கூட இதற்குக் காரணமாக இருக்கலாம். எப்போது கடை திறந்தாலும், குடிகாரன் குடிப்பான்; இதில் வருத்தப்பட ஒன்றுமில்லையென அரசும், காவல் துறையும் ஒதுங்க முடியாது. போதை ஆசாமிகளுக்கு வேண்டுமானால், குடும்பம் குறித்த அக்கறையில்லாமல் இருக்கலாம்; பொறுப்புள்ள அரசு அப்படியிருக்கக்கூடாது. கடந்த முறை ஏராளமான எதிர்ப்புகளையும் மீறி லாட்டரி விற்பனையை தடை செய்து, பல லட்சம் குடும்பங்களை பாதுகாத்த அ.தி. மு.க., அரசு, இந்த முறை போதையின் பாதையிலிருந்து தங்கள் குடும்பங்களை மீட்க வேண்டும் என்பதே ஏராளமான இல்லத்தரசிகளின் எதிர்பார்ப்பு.

உடலும் போச்சு; உழைப்பும் போச்சு : கூலி தொழிலாளர் அமைப்புப் பிரதிநிதிகள் கூறுகையில், "குடிக்கு அடிமையானவர்களில் 90 சதவீதம் பேர் உடல் உழைப்பு பணியாளர்களே. குடியால், திறன் மிகு பணியாளர்கள் பலரும் வேலைக்குச் செல்வதில்லை. தற்போது நிலவும் பணியாளர் பற்றாக்குறைக்கு "குடி'தான் முக்கிய காரணம். சிலருக்கு காலையிலேயே "கட்டிங்' அடித்தால்தான் எந்த வேலையும் செய்ய முடியும்; இல்லாவிட்டால் கை நடுங்கும்."இதனால் பலரும், இவர்களுக்கு வேலை தரத் தயங்குகின்றனர். குடித்துவிட்டு வேலை செய்யும் போது, ஏதாவது அசம்பாவிதம் நடந்து விடுமோ என்கிற அவர்களின் அச்சம் நியாயமானதே. காலை நேரத்தில் மது விற்பதைத் தடுத்தாலே இந்தச் சூழலில் இருந்து ஏராளமானவர்களை மீட்க முடியும்' என்றனர்.

என்ன சொல்கிறார்கள் "பார்' உரிமையாளர்கள்?"பெரும்பாலும், அரசியல் செல்வாக்கு மிக்கவர்களுக்குத்தான், "பார்' உரிமம் கிடைக்கும். நாங்கள் "சப்- கான்ராக்ட்' எடுத்து "பார்' நடத்துகிறோம். வியாபாரம் நடந்தாலும், நடக்காவிட்டாலும் தினமும் 10 ஆயிரம் ரூபாய் வாடகை கொடுத்தே ஆகவேண்டும். அதனால்தான் 30 பைசா பிளாஸ்டிக் டம்ளரை நான்கு ரூபாய்க்கும், ஒரு ரூபாய் பெறுமானமுள்ள சுண்டலை 10 ரூபாய்க்கும் விற்கிறோம்."கூலி உழைப்பாளிகள் குடும்பம் சீரழிவதாக சொல்கிறார்கள்; நாங்கள் உழைக்கவில்லையா? காலை 8 மணிக்குத் துவங்கும் எங்கள் வேலை, இரவு 11 மணி வரை நீள்கிறது; உரிமம் பெறுவதற்கான அரசியல் செல்வாக்கை மட்டும் வைத்துக் கொண்டு, எந்தவிதத்திலும் உழைக்காமலே பலர் கோடீஸ்வரர்களாகி விட்டனர். இதில் எங்களை குற்றம் சொல்வது என்ன நியாயம்?' என்கின்றனர், "பார்' உரிமையாளர்கள்.
Kunjumani - Chennai.,இந்தியா
2011-06-28 00:48:21 IST Report Abuse
இது கருணாநிதி தப்போ... ஜெயலிதா தப்போ இல்லை.... விடிந்ததும் குடிக்கின்ற பேமானியின் தப்பு...! நான் பள்ளி இறுதி தேர்வில் 93 சதவிகித மதிப்பெண்கள் வாங்கி, திருச்சி ரீஜினல் பொறியியல் கல்லூரியில் நுழைந்தவன்... கல்லூரி காலத்தில் குடித்து குடித்து என் படிப்பை தொலைத்தவன்... இன்று குடிப்பதில்லை... என்ன பிரயோசனம்... எனது பொறியியல் படிப்பு பாதியில் நின்றதுதான் மிச்சம்...பொறியியல் கல்லூரியில் நான் நுழையும் பொழுது இருந்த கனவு IIT யில் மேற்படிப்பு 'ராக்கெட் ப்ரோபுல்சன் அண்ட் ஏரோ டைநமிக்ஸ்' படிக்கவேண்டும் என்பது இன்றும் என் நிறைவேறாத கனவாகவே உள்ளது. நாம் செய்யும் தவறுகளுக்கு அரசாங்கத்தை குறை கூறுவது முறை அல்ல.. அதிமுக அல்ல திமுக அரசு மக்கள் வாயில் ஊற்றி குடிக்க வைக்கவில்லை... என்னுடன் படித்த மாணவர்கள் இன்று பலர் அமெரிக்கா மற்றும் நம் நாட்டில் உயர் நிலையில் இருக்கின்றனர்..படிக்கவேண்டிய வயதில் குடித்தது என் தவறே நான் உருப்படாமல் போனதற்கு நானே காரணம்.
mano - trichy,இந்தியா
2011-06-28 02:28:30 IST Report Abuse
வருத்த படாதீர்கள் குஞ்சுமணி.. 'ராக்கெட் ப்ரோபுல்சன் அண்ட் ஏரோ டைநமிக்ஸ்' ஒன்றுதான் இந்த உலகத்தில் மிக உயரிய படிப்பல்ல. அமெரிக்கா மட்டுமே வாழ்க்கை அல்ல. நம்மை போன்ற பொறியாளர்களுக்கு இன்று ஊதியம் வழங்கி கொண்டிருக்கும் பல நிறுவனங்களின் முதலாளிகள் வெறும் பத்தாவதையே தாண்டாதவர்கள். வாழ்க்கையில் வெற்றி பெற தேவை மூன்று விடயம். நம்மால் முடியும் என்ற தன்னம்பிக்கை, மாறுபட்ட சிந்தனை, வெற்றி பெரும் வரையிலான விடா முயற்சி. தவறு செய்தவன், தன்னுடைய தவறை உணர்ந்து விட்டாலே அவன் வாழ்க்கையின் ஏணிப்படியில் முதல் படி ஏறிவிட்டான். உங்களுடைய தனி திறமைகள் என்ன என்பதை உங்களுடைய உண்மையான நண்பர்கள் மூலமாக அறிந்து கொள்ளுங்கள். சரியான தொழிலை தேர்ந்தெடுத்து உழைத்து பாருங்கள். ஒரு நாள், உங்களுடன் படித்த, இன்றைக்கு அமெரிக்காவில் இருக்கிற சிலர், உங்களின் சொந்த நிறுவனத்தில் வேலை கேட்டு நிற்கும் காலம் வரும். அவசரப்படாமல் காரியங்களில் இறங்குங்கள்..நாம் ஆளப்பிறந்தவர்கள்.. நிச்சயம் வீழும் முன் ஆள்வோம்.. வாழ்த்துக்களுடன் உங்களுடைய நண்பர்களில் ஒருவன்.....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக