சனி, 11 ஜூன், 2011

சோ ராமசாமி கூட ஈழ மக்களின் நல்வாழ்வுக்காக கண்ணீர் விடத் துவங்கி விட்டார்.

லங்கை மீதான பொருளாதாரத் தடை விதிக்க கோரும் தீர்மானத்தில் கடித அரசியலில் உள்ள பலம் கூட இல்லை. ஆனால் அதுதான் நம்பிக்கை ஊட்டுவதாக வைகோ முதல் சாதாரண தமிழ் உணர்வாளர்கள் வரை கருதுகின்றனர். பான் கி மூன் ஒரு மூவர் குழுவை அமைத்துள்ளார். அது அதிகாரப்பூர்வ ஐ.நா குழு அல்ல என்பதை ஜெயாவே சட்டமன்றத்தில் தனது உரையில் சுட்டிக் காட்டி உள்ளார். இந்தக்குழு ஆதாரங்களை வெளியிட்டுள்ளது, சில பரிந்துரைகளையும் தந்துள்ளது. இதனைப் பெற்றுக் கொண்ட ஐ.நா செயலர் இதனை பாதுகாப்பு சபை மற்றும் பொதுச்சபைகளில் வைத்துப் பேசுகிறார் என்றால் அதில் இது பெரும்பான்மை உறுப்பினர்களால் ஏற்கப்பட வேண்டும். இலங்கைப் பிரச்சினையில் தங்களது  பொருளாதார, ராணுவ நலன்களை இவர்கள் விட்டுத்தர வேண்டும். இதற்குப் பிறகு அவர்கள் ஒரு விசாரணைக் கமிசன் அமைத்து, அதில் குற்றம் நிரூபிக்கப்படுவது நடக்க வேண்டும். விசாரணைக்கு இலங்கை சம்மதிக்க வேண்டும். இதெல்லாம் சாத்தியமா ? இதற்கு மத்திய அரசு ஐ.நா சபையை வலியுறுத்தி தீர்மானம் நாடாளுமன்றத்தில் போட்டால் கூட அதனை பான் கி மூன் கண்டுகொள்ள வேண்டும் என்று எந்த நிர்ப்பந்தமும் கிடையாது. அப்புறம் இந்த தீர்மானத்தால் என்ன பயன் ?
தீர்மானங்களுக்குப் பதிலாக தமிழக மீனவர்களுக்கும், ஈழத்தமிழர்களுக்கும் இழைக்கப்பட்டுக் கொண்டிருக்கும் அநீதிகளுக்கு எதிராக இனிமேல் தமிழகத்தின் வரிவருவாய் மத்திய அரசுக்கு வராது என அறிவிக்க வேண்டும். மத்திய அரசின் அங்கமான உச்சநீதி மன்றத்தின் தீர்ப்புகளுக்கு நாங்கள் கட்டுப்பட மாட்டோம் என அறிவிக்க வேண்டும். இதனை ஜெயலலிதாவோ கருணாநிதியோ செய்ய மாட்டார்கள். அப்படி செய்தால் அரசு என்பதன் உண்மையான பொருளை ஆளும்வர்க்கம் அவர்களுக்கு நன்றாகப் புரியவைத்து விடும்.
கருணாநிதி எழுதிய கடிதத்தின் மதிப்பிற்கும், தமிழக சட்டசபை நிறைவேற்றியிருக்கும் தீர்மானத்திற்கும் மயிரளவு கூட வித்தியாசம் இல்லை. இந்தத் தீர்மானத்திற்கு எந்தவிதமான சட்ட ரீதியாகவோ, நடைமுறை சார்ந்தோ எந்த மதிப்புமில்லை. அதனால்தான் துணிந்து செய்திருக்கிறார் ஜெயலலிதா. ஏற்கனவே தமிழ் மொழி ஆட்சிமொழியாக வேண்டும் என்ற கருணாநிதி அரசின் தீர்மானத்திற்கு என்ன மதிப்பிருக்கிறதோ அதுதான் இதற்கும்.
இன்று தமிழகத்தின் விடிவெள்ளி போல காட்சியளிக்கும் பாசிச ஜெயாவின் முதலாவது ஆட்சிக்காலத்தில்தான் விடுதலைப்புலிகள் இயக்கத்தை தடைசெய்யக் கோரும் தீர்மானத்தை நிறைவேற்றினார். ஈழத் தமிழ் மக்களுக்கு ஆதரவாகவோ அல்லது தமிழ்தேசிய அமைப்புகள் உள்ளிட்ட பல்வேறு ஜனநாயக அமைப்புகளையும் தமது முந்தைய ஆட்சிகளில் ஒடுக்க அயராது பாடுபட்டவர் ஜெயா. இதில் நெடுமாறனும் வைகோவும் கூட தப்பவில்லை.
கடந்த 2001 – 06 ஆட்சியில் மத மாற்றத் தடைச் சட்டம், ஆடு கோழி பலியிட தடை என இந்துபாசிச அமைப்புக்களின் கோரிக்கையை சட்டமாக ஆக்கிய ஜெயா, ஜெயேந்திரனை கைது செய்த ஒரே காரணத்துக்காக பார்ப்பன எதிர்ப்பு போராளி என நாம் வீரமணி போல கொண்டாட முடியுமா ? இன்று அவர் மட்டுமா சோ ராமசாமி கூட ஈழ மக்களின் நல்வாழ்வுக்காக கண்ணீர் விடத் துவங்கி விட்டார்.

நன்றி வினவு இணையம் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக