வெள்ளி, 17 ஜூன், 2011

தூத்துக்குடியை வளப்படுத்தும் கொழும்பு கப்பல் சர்வீஸ்

தூத்துக்குடியில் இருந்து, கொழும்புக்கு பயணிகள் கப்பல் சர்வீஸ் துவக்கப்பட்டிருக்கிறது. கடந்த 104 ஆண்டுகளுக்குப் பின் துவங்கப்பட்ட இந்த சர்வீஸ், கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி., கண்ட கனவை மெய்பிக்கும் நல்ல பணி. முதல் பயணிகள் கப்பலாக, "ஸ்காட்டியா பிரின்ஸ்' என்ற கப்பல் பயணித்ததை, மக்கள் ஆர்வமுடன் வரவேற்றுள்ளனர். விமானச் சேவையை விட குறைந்த கட்டணம் கொண்ட இந்த பயணிகள் கப்பல் சேவையை, மத்திய கப்பல் போக்குவரத்து அமைச்சர் வாசன் துவக்கி வைத்திருக்கிறார்.

இன்று இலங்கை - இந்திய உறவு அவ்வளவு சுமுகமாக இல்லை. மீனவர்கள் மீது இலங்கை நடத்தும் தாக்குதல், அங்கு தமிழர்கள் மீது நடந்த போர்க்குற்றங்கள் பெரிதாக உருவெடுத்திருப்பதால், இந்த கப்பல் சேவை தேவையே இல்லை என, சில கட்சிகள் கூறுகின்றன. ஆனால், இன்றைய உலகச் சூழலில் அண்டை நாடுகள் என்பதை, நாம் நிர்ணயிப்பது இல்லை. பூகோள ரீதியாக ஏற்படும் இயற்கை அமைப்பாகும். பாகிஸ்தானுடன் பயணிகள் போக்குவரத்தும், ஓரளவு வர்த்தகப் பரிமாற்றமும் இன்னமும் நடக்கிறது. சீனா - இந்தியா எல்லையில் லாசா பகுதியில், வர்த்தகப் பரிமாற்றம் நடக்கிறது. ஏனெனில், "சார்க்' நாடுகள் வர்த்தகப் பரிமாற்ற அடிப்படையில், இந்தியா தனது சிறப்புத் தன்மையை விட்டுக் கொடுக்க முடியாது. அதையும் விட, தூத்துக்குடி துறைமுகம் அதிக அளவில் வர்த்தகம் கையாளும் துறைமுகமாக மாறிய பின், அங்கு பொருளாதாரப் புழக்கம் அதிகரித்திருக்கிறது. அதற்கு கொழும்பு - தூத்துக்குடி கப்பல் போக்குவரத்து சர்வீஸ் நிச்சயம் அதிக மதிப்பைத் தரும். தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு வர்த்தகம் விரிவடைய, இந்த சர்வீஸ் அதிக உதவி புரியும். இனி நாட்கள் செல்ல செல்ல அதிக அளவில் சுற்றுலா செல்பவர்கள், சிறிய வர்த்தகர்கள் இந்த சர்வீசைப் பயன்படுத்துவர். இலங்கைக்கு தேவைப்படும் ஆயத்த ஆடைகள், உணவுப் பொருட்கள், மருந்துகள் ஆகியவைகளை, அதிக அளவில் இனி இங்கிருந்து அனுப்ப, இந்த கப்பல் சர்வீஸ் பயன்படுத்தப்படும்.

மேற்கு மாவட்டத்தில் உள்ள, சிறிய குறு தொழிலதிபர்கள், இந்த சேவையை அதிகம் பயன்படுத்த வாய்ப்புகள் உண்டு. ஏற்கனவே தூத்துக்குடி முக்கிய வர்த்தகக் கேந்திரமாக மாறி வருகிறது. இதனால், வேலை வாய்ப்பு கணிசமாக அதிகரிக்கும். அங்கு தற்போது நடைபெறும் குற்ற எண்ணிக்கைகள் கூட குறையலாம். இந்த கப்பல் சர்வீஸ் மூலம், இந்தியாவின் கடற்கரையோரப் பகுதிகளுக்கு செல்லும் பயணிகள் கப்பல் விட, மத்திய அரசு அதிகம் சிந்திக்க, இது முன்னோடியாகும். அதே சமயம், விடுதலைப் புலிகள் ஆதரவாளர்கள் அல்லது கடத்தலில் ஈடுபடுவோர் அபாயம் ஏற்படும் என்பது, இந்த சர்வீசை முடக்கும் செயலாகும். விமான சர்வீஸ் வளர்ந்துவிட்டது. அதில் அதிகம் குற்றச் செயல்கள் நடப்பதை, செய்திகள் காட்டுகின்றன. இந்த கப்பல் சர்வீசில், ஏன் உரிய நடைமுறைகள் மூலம், அம்மாதிரி தவறுகளைத் தடுக்க முடியாது? அதைத் தடுக்க, நவீன சட்ட திட்ட நடைமுறைகள் இருக்கும் போது ஏன் வீண் பீதி. உலகம் முழுவதும் வளர்ந்து வரும் பொருளாதாரத்திற்கு வசதியாக, பல்வேறு போக்குவரத்து வசதிகளை முறைப்படுத்தும் போது, இந்தக் கப்பல் சர்வீஸ், எதிர்காலத்தில் தென் மாவட்டத்தின் தொழில் வளர்ச்சிக்கும், வேலை வாய்ப்பிற்கும் அதிக உதவி புரியும்.

தென் மாவட்டங்களில் தொழில் துறை அதிகம் வளராத நிலையில், இந்த கப்பல் சர்வீசையும் இனி நிறுத்திவிட்டால், அது வளர்ச்சியின் அறிகுறியாக அமையாது என்ற கருத்து பரவலாகப் பேசப்படுகிறது. கால வளர்ச்சிக்கு ஏற்ப, நவீன உத்திகளும், வசதிகளையும் மக்களுக்கு தராமல் தடுப்பது, இப்பகுதியில் வேலைவாய்ப்பை குறைக்கும் செயலாகும். இந்த கப்பல் சர்வீசால் தூத்துக்குடிக்கு, அதிக பொருளாதார முக்கியத்துவம் கிடைக்கும் என்பதையும் ஒதுக்கிவிட முடியாது.

- நமது சிறப்பு நிருபர் -
Pamaran A - chennai,இந்தியா
2011-06-17 07:01:54 IST Report Abuse
வேலை வாய்ப்பு இன்றி, தொழில்கள் எதுவும் இன்றி சென்னை-யிலும் பெங்களூரில்லும் வந்து படும் கஷ்டம் தென் மாவட்ட மக்களுக்கு தான் தெரியும். கப்பல் சேவையை எதிர்த்து கருத்து எழுது பவர்கள் பாதி பேர் இலங்கை தமிழர்கள் அல்லது வைகோ கட்சி காரர்கள் 
Rayen - Singapore,சிங்கப்பூர்
2011-06-17 06:37:48 IST Report Abuse
இந்த கப்பல் சேவையால் தூத்துக்குடி மற்றும் அதன் பக்கத்துக்கு மாவட்டங்கள் கண்டிப்பாக பயன் அடையும்.சில மேதாவிகள் பேசுவதுபோல் நாளையே தூதுகுடிகாரன் எல்லாம் பணக்காரன் ஆகி விடுவானா என்பது விதண்டா வாதம்.சேது சமுத்திர திட்டத்தில் மண்ணை அள்ளி போட்ட ஜெயாவை மன்னித்து தூத்துக்குடி மற்றும் அதன் பக்கத்துக்கு மாவட்ட மக்கள் இந்த தேர்தலில் மு க எதிர்ப்பு அலையால் ஓட்டளிதுள்ளர்கள்.வீண் பிடிவாதம் பிடித்தால் அம்மாவுக்கு தென் தமிழகத்தில் பெரும் நஷ்டம் தான் வந்து சேரும் என்பது உறுதி, தூக்கி வைத்த மக்களுக்கு தூக்கி வீசவும் தெரியும்.அது என்ன பயத்தினாலோ அம்மாவுக்கு காம்றேட்களும் விஜயகாந்தும் பல்லக்கு தூக்கி அம்மா செய்யும் அநியாயங்களை தட்டி கேட்காமல் இருக்கிறார்கள்.இப்படி வாயில் கொழுக்கட்டையை வைத்து மௌனமாக இருக்க மக்கள் உங்களுக்கு ஒட்டு போடவில்லை.
rakesh - singapore,சிங்கப்பூர்
2011-06-17 02:57:05 IST Report Abuse
இந்த பயணிகள் கப்பல் போக்குவரத்து தென் மாவட்ட பயணிகளுக்கு சிறந்த திட்டமாகும்.தூத்துக்குடியில் இருந்து சென்னை சென்று விமானம் மூலம் கொழும்பு செல்வதை விட கப்பல் மூலம் 14 மணி நேரத்தில் சென்று விட முடியும்.இந்த போக்குவரத்தால் தூத்துக்குடி துறைமுகம் நன்கு முன்னேறும்.வேலை வாய்ப்பும் பெருகும்.இதை அரசியல் கட்சிகள் புறக்கணிப்பது அவசியம் அல்ல...!!!
 
Srini Katchi - chennai,இந்தியா
2011-06-17 07:05:54 IST Report Abuse
தேவை இல்லை தூத்துக்குடியில் இருந்து வேறு நாடுகளுக்கு விடட்டும், இன்னும் நூறு நாடுகள் இருக்கின்றன, பிலிப்பைன்சசுக்கு விடட்டும், சிங்கபூருக்கு விடட்டும், மலேயாவுக்கு இருக்கும் கப்பல் எண்ணிகையை அதிகரிக்கட்டும் இங்கு வேண்டாம்...
 
kunjumani - Chennai ,இந்தியா
2011-06-17 02:45:24 IST Report Abuse
கருணாநிதியின் அணைத்து நல திட்டங்களையும் அழித்து விட்டு இந்த ஜெயலலிதா இந்த கப்பல் போக்குவரத்தையும் எதிர்க்கிறாரே ? அவர் செய்வதெல்லாம் பாசிடிவான விஷயம் தட்டி கேட்டா அது நெகடிவான எதிர்மறையான விஷயம் இது எந்த ஊர் நியாயம் ?
S.S.JAHUFER SADIK - Jeddah,சவுதி அரேபியா
2011-06-17 00:33:01 IST Report Abuse
முன்பு இந்த கப்பல் சேவை தலைமன்னாருக்கு ராமேஸ்வரத்தில் இருந்து சென்ற நேரம் தென்மாவட்டங்களில் இலங்கையோடு தொடர்புடைய வியாபாரம் செழித்தது. இங்குள்ளவர்கள் வியாபாரிகளாக திகழ்ந்தனர் .அங்கு கலவரம் ஆரம்பித்து அந்த சேவை நிறுத்தப்பட்டதும் அந்த வாணிபம் செய்த அனைவரும் அரேபியா நாடுகளில் தொழிலாளர்களாக வாழ்கையை மாற்றினார்கள்- இப்போது தொடங்கியிருப்பது நமக்கு ஒரு வரபிரசாதமே-சாதிக் -ஜிட்டாஹ்
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக