வெள்ளி, 17 ஜூன், 2011

தமிழக சட்டசபைத் தீர்மானங்களும் இலங்கை - இந்திய உறவும்

(டெய்லி மிரர் ஆங்கில பத்திரிகையில் ஜூன் 13 ஆம் திகதி வெளியான கட்டுரையின் தமிழாக்கம் இது)
rajapaksha-4Jeyalalitha-1இந்திய - இலங்கை உறவு தொடர்பில் தமிழ்நாடு சட்டசபைக்கு வந்த இரண்டு தீர்மானங்கள் செய்தியில் அடிப்படுகின்றன. அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக முதலமைச்சரான ஜெயலலிதா, இரண்டு தீர்மானங்களை கொண்டு வந்தார். யுத்தக் குற்றம், இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு மீள்குடியேற்றம் தொடர்பான தீர்மானம், சர்வதேச சமுதாயத்தின் தற்போதைய மனோநிலையை பிரதிபலிப்பதாக உள்ளது. சர்வதேச அபிப்பிராயத்தின் மீது இலங்கைத் தமிழ் புலம்பெயர்ந்தோரின் அழுத்தத்தையும் காணமுடிகிறது. கச்சதீவு தொடர்பான தீர்மானம் கச்சதீவை மீளப்பெற வேண்டுமென இந்திய அரசாங்கத்தை கோரியது.
இரண்டு தீர்மானங்களும் இலங்கை, இந்திய உறவுடன் சம்பந்தப்பட்டவை. இந்த தீர்மானங்கள் தொடர்புடைய பிரச்சினைகளில் இரண்டு அரசாங்கங்களின் மீதும் அழுத்தங்களை கொடுக்கக் கூடியவை. அரசியல், அரசியல்வாதிகள், சர்வதேச சமுதாயம், புலம்பெயர்ந்தோர் என்பதற்கு அப்பால் இனப்பிரச்சினை, மீனவர்களின் உயிர், அவர்களின் வாழ்வாதாரம் என்பன தமிழ்நாட்டில் உடனடி தீர்வை வேண்டி நிற்பவையாகவும் நீண்ட கால கவனம் தேவையானவையாவும் உள்ளன.
இலங்கையிலும் இரு நாடுகளுக்கும் பொதுவான கடற்பிரதேசத்திலும் சமாதானம் தேவையென தமிழ்நாடு கருதுகின்றது. ஒட்டு மொத்தமாக பார்த்தால் இந்த அக்கறையே இரண்டு தீர்மானங்களினதும் அடிநாதமாக உள்ளது. இதற்கான பெருமையை ஜெயலலிதா கோரமுடியுமாயின், அவர் அதற்கு பின் நிற்கப்போவதில்லை.
இரண்டு வெளிநாட்டு அமைச்சர்களும் (ஜி.எல்.பீரிஸ் மற்றும் எஸ்.எம்.கிருஷ்ணா) புது டில்லியில் சந்தித்த போது வெளியிட்ட கூட்டறிக்கை மீதான வெளிப்படையான அரசியல் மற்றும் ஊடக விமர்சனங்கள் குறிப்பிட்ட ஒரு மனோநிலையை பிரதிபலிக்கின்றன. இலங்கையில் இந்த நிலை காணப்படுமாயின் இதே மனோநிலையை தமிழ் நாட்டிலும் காணலாம். தமிழ்நாடு சட்டமன்றின் தீர்மானங்கள் இலங்கையின் எந்தவொரு மனோநிலைக்கும் எதிர்நடவடிக்கையாக அமையவில்லை.
இனப்பிரச்சினை மீதான தமிழ்நாடு சட்டசபையின் தீர்மானத்தின் அடிநாதமாக இலங்கையிலுள்ள இலங்கை தமிழர்களின் பாதுகாப்பும் முப்பது வருடாகால இன மோதலின்போது வாக்களிக்கப்பட்ட அரசியல் தீர்வும் உள்ளது. உலகின் வேறு எந்தப் பகுதியிலும் காணப்படுவது போலவே தமிழ்நாடு சட்டசபை தீர்மானமும் யுத்தக் குற்றங்களையும் அரசியல் தீர்வையும் பிணைக்கின்றது. கொழும்பும் சென்னையும், சென்னையும் புதுடில்லியும் இந்தப் பிரச்சினைகளை வித்தியாசமாக காணக்கூடும். ஆனால் கவலைகள் யதார்த்தமானவை, பொதுவானவை.
1983 இனக்கலவரத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் ஆயிரக்கணக்கில் தமிழ்நாட்டுக்கு அகதிகளாக வந்து சேர்ந்த பின்னரே இலங்கையின் இனப்பிரச்சினையில் இந்தியாவின் அக்கறை முளைகொண்டது. அதற்கு முன் இந்தியா அக்கறைப்படவில்லை இனப்பிரச்சினையில் இந்தியாவின் ஈடுபாடு இந்தியாவின் ஆதிக்கப்போக்கு, இந்தியாவின் சுயநலம் என்பவை சார்ந்தவை எனக் கருதுவது பிழையானது. அது தமிழ்நாட்டில் காணப்படும் கவலைகள், தமிழ்நாடு பற்றிய கவலைகள் ஆகியவற்றுடன் பிணைந்துள்ளது. கொழும்பு இதை புரிந்து கொள்ள வேண்டும்.
யுத்தம் முடிவுக்கு வந்துள்ள நிலையில் இலங்கையில் சில பகுதியினர், குறிப்பாக அதிகார மட்டத்தில் உள்ளவர்கள், மீனவர் பிரச்சினை தொடர்பில் இறைமை, ஆட்புல தொடர்ச்சி என்பவற்றை தூக்கிப் பிடித்துக் கொண்டுள்ளனர். சிலர் இந்த வகையில் இலங்கை கடற்படையின் தலையீட்டை நியாயப்படுத்தவும் செய்கின்றனர்.
அவர்கள் இந்த நடவடிக்கைகள் வருங்காலத்தில் ஏற்படக்கூடிய கடற்புலிகளின் பயமுறுத்தலை கட்டுப்படுத்துவதை நோக்கமாக கொண்டவை எனவும் கூறுகின்றனர். இந்த நியாயத்தை சரியெனக் கொண்டால் ஏனைய நியாயங்களையும் ஏற்க வேண்டும். இதில் தமிழ் நாட்டில் காணப்படும் கவலைகளும் அடக்கப்பட வேண்டும்.
கச்சத்தீவு பிரச்சினை தற்போது புதுடில்லியின் உயர்நீதி மன்றத்தின் முன் உள்ளது. தீர்ப்பு எப்படி இருப்பினும் இலங்கையினால் இதற்கு எதிராக ஒன்றும் கூறமுடியாது. இருபக்க உறவுகள், சர்வதேச உறவுகள் பற்றிய விவாதங்கள் வேறு இடங்களில் சாத்தியமாகலாம். இலங்கையின் உயர் நீதிமன்றம் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான இருபக்க ஒப்பந்ம் பற்றி குறிப்பிடாமலே வடக்கு, கிழக்கு பிரிவை கையாண்டுள்ளது. இலங்கையின் உயர் நீதிமன்றம் ஒரு முன்மாதிரியை காட்டியுள்ளது.
இலங்கை அரசாங்கம் எல்.ரீ.ரீ.ஈ. பிரச்சினையை தீர்;த்திருக்கலாம். ஆனால் அது அடிப்படையாக உள்ள பிரச்சினைகளை தீர்க்கவில்லை. இது புலம்பெயர்ந்தோர் பற்றியதல்ல. இது இலங்கையிலுள்ள, யுத்தத்துக்கு முகங்கொடுத்த, அதன் விளைவுகளால் பாதிக்கப்பட்ட மக்களைப் பற்றியது.
அபிப்பிராயங்கள் ஒரே மாதிரி இருக்கமாட்டா. இதற்கு இந்தியாவும் இலங்கையும் விதிவிலக்கல்ல. இன்னொரு உதாரணமாக இலங்கையில் நடந்த பாதுகாப்பு மாநாட்டில் 'வெள்ளைக் கொடி' விவகாரத்தில் அமெரிக்க பாதுகாப்பு ஆலோசகர் லெப் கேணல் லோறன்ஸ் கூறிய கருத்து அவருடைய சொந்தக் கருத்து எனக் கூறி அமெரிக்க, அக்கருத்திலிருந்து விலகியுள்ளது.
வேறு ஒரு நாட்டில், இப்படி ஒன்று நடக்கவேயில்லை என்று மறுத்திருக்கலாம். அரசாங்கம் ஒன்றின் வௌ;வேறு துறைகளுக்கிடையிலும் வித்தியாசமான பார்வைகள் இருக்கமுடியும். இலங்கையில் யுத்தம் மும்முரமாக நடந்த சமயத்தில் அப்போது இராணுவ தளபதியாகியிருந்த சரத் பொன்சேகா, தமிழ் சிறுபான்மையினர், பெரும்பான்மையினரான சிங்கள பௌத்தர்களுடன் வாழப்பழகிக் கொள்ள வேண்டுமென கூறியிருந்தார்.
இலங்கையின் அரசியல் தலைமைப்பீடமும், இராஜதந்திர சேவையினரும் இதை மறுத்துரைக்கும் பெரும் முயற்சியில் ஈடுபட்டனர். தற்போதைய நிலையில், கண்ணாடி வீட்டில் வசிக்கும் இலங்கையும் இலங்கையரும் இந்தியாவை குறைகான முடியாது. அவர்கள் தமக்குள் காணப்படும் இந்தியாவுக்கு எதிரான சக்திகளை கட்டுப்படுத்தவில்லை. என்ன பிரச்சினைகள் காணப்படினும் இந்த இரண்டு நாடுகளினதும் உள்நாட்டு அரசியல் ஒன்றுடன் ஒன்று பிணைந்தவை அல்ல. உள்நாட்டு அரசியல் அவர்களின் வெளிவிகாரங்கள் மீது செல்வாக்கு செலுத்தக் கூடாது.
- தமிழ்மிரர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக