சனி, 11 ஜூன், 2011

காங்கிரஸ் கூட்டணியை திமுக மறுபரிசீலனை செய்ய வேண்டும்-திருமாவளவன்

மதுரை: காங்கிரசுடன் கூட்டணி தொடர்கிறது என்று திமுக சார்பில் வெளியான செய்தி, எங்களுக்கு கசப்பாக இருக்கிறது. இதனால் இந்த முடிவை திமுக பரிசீலனை செய்ய வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் கோரி்க்கை விடுத்துள்ளார்.

நிருபர்களிடம் அவர் பேசுகையில், கடந்த சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியுடன் திமுக கூட்டணி வைத்ததால் தான், விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு கசப்பு உணர்வு ஏற்பட்டது.

திமுகவுடனான நெருக்கத்தால் கூட்டணியில் இணைந்து போட்டியிடும் சூழல் உருவானது. இருப்பினும், திமுக விடுதலைச் சிறுத்தைகள் கட்சிகளின் தோல்விக்கு காங்கிரஸ் கட்சி தான் முக்கிய காரணம்.

காங்கிரஸ் பிளாக்மெயில் செய்து 63 சீட்டுகளை பெற்றது. இதனால் 2 கட்சிகளும் தேர்தலில் இணைந்து செயல்பட முடியாத நிலை இருந்தது. காங்கிரஸ் கட்சியுடன் கசப்பான உணர்வு கொண்ட எங்கள் தோழர்கள் தேர்தலில் செயல்பட முடியவில்லை. இதனால் தான் சட்டமன்ற தேர்தலில் திமுக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வேட்பாளர்கள் தோல்வி அடைந்தார்கள்.

திமுக அரசு மீது மக்களுக்கு எந்த கோபமும் இல்லை. காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைத்தது தான் தமிழின உணர்வாளர்களுக்கு ஆதங்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

காங்கிரசுடன் கூட்டணி தொடருகிறது என்று திமுக சார்பில் வெளியான செய்தி, எங்களுக்கு கசப்பாக இருக்கிறது. இதனால் இந்த முடிவை திமுக பரிசீலனை செய்ய வேண்டும்.

தமிழ்நாட்டில் சமச்சீர் கல்வி அமல்படுத்தலாம் என்ற ஐகோர்ட்டின் தீர்ப்பை வரவேற்கிறேன். சமச்சீர் கல்விக்கு மக்கள் ஆதரவு இருக்கும் போது, அதனை அரசு பரிசீலனை செய்து நடைமுறைப்படுத்த வேண்டும்.

இலங்கை அதிபர் ராஜபக்சே போர்க்குற்றவாளி என்றும், இலங்கை அரசு மீது பொருளாதார தடை விதிக்க வேண்டும் என்றும் சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றிய அ.தி.மு.க. அரசை பாராட்டுகிறேன். அதேபோல கச்சத்தீவை திரும்ப பெறும் தீர்மானத்தையும் வரவேற்கிறேன் என்றார்.

English summary
VCK leader Tirumavalavan has urged DMK to reconsider its alliance with congress

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக