புதன், 8 ஜூன், 2011

அதிமுகவினரின் காட்டுமிராண்டித்தனம்,மணல் கடத்தலை தடுத்த தாசில்தார் மீது தாக்குதல்



வேலூர் காட்பாடி பாலாற்றில், மணல் கடத்தலை தடுத்த வருவாய் துறை அதிகாரிகளை தாக்கிய, அ.தி.மு.க., கிளைச் செயலாளர் உட்பட ஆறு பேரை போலீசார் கைது செய்தனர். தலைமறைவான ஐந்து பேரை தேடி வருகின்றனர்.
காட்பாடி பாலாற்றிலிருந்து இரவு நேரத்தில் மணல் கடத்தப்படுவதாக, காட்பாடி தாசில்தார் மனோகரனுக்கு தகவல் கிடைத்தது. தாசில்தார் தலைமையில் ஆர்.ஐ., பரசுராமன், வி.ஏ.ஓ., சாந்தகுமார், துணை தாசில்தார் பாலஜி ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று வாகனங்களை தணிக்கை செய்தனர்.

அப்போது, காட்பாடி பகுதியிலிருந்து மணல் ஏற்றி வந்த டிராக்டரை நிறுத்தி விசாரணை நடத்தினர். டிராக்டரை ஓட்டிவந்த அம்முன்டி பகுதியை சேர்ந்த அ.தி.மு.க., கிளைச் செயலாளர் சுப்பிரமணி (52) அவரது மகன்கள் சின்னதுரை, வெங்கடேசன் மற்றும் டிராக்டரில் வந்த சிவா, கோட்டீஸ்வரன் ஆகிய, 11 பேர் வருவாய் துறை அதிகாரிகளை தாக்கினர்.
இச்சம்பவத்தை அறிந்த அப்பகுதியினர், வருவாய் துறை அதிகாரிகளை மீட்டனர். இந்த சம்பவத்தை கண்டித்து, வேலூர் மாவட்டத்திலுள்ள அனைத்து தாலுக்கா அலுவலக ஊழியர்களும் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதையடுத்து, மணல் கடத்தலில் ஈடுபட்டு, தடுக்க முயன்ற வருவாய்த்துறை அதிகாரிகளை தாக்கிய சுப்பிரமணி உட்பட ஆறு பேரை திருவலம் போலீசார் கைது செய்தனர். தலைமறைவான 5 பேரை தேடி வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக