வியாழன், 23 ஜூன், 2011

9.12 லட்சம் மாணவர்களுக்கு Laptop அரசு திட்டம்

3 வருட உத்தரவாதத்துடன், தரமான லேப்டாப்களை 9.12 லட்சம் மாணவர்களுக்கு வழங்க அரசு திட்டமிட்டுள்ளது. இதுதொடர்பாக நடந்த ஆலோசனைக் கூட்டத்தின்போது கம்ப்யூட்டர் தயாரிப்பு நிறுவனங்களுக்கு எல்காட் நிர்வாக இயக்குநர் அதுல் ஆனந்த் பல்வேறு அறிவுரைகளை வழங்கினார்.

தமிழக அரசின் இந்த பெரும் திட்டத்தில் முதல் கட்டமாக 9.12 லட்சம் இலவச லேப்டாப்புகள் தயாரித்து மாணவர்களுக்கு வழங்கப்படவுள்ளது.

அரசு பள்ளிக்கூடங்கள், அரசு உதவி பெறும் பள்ளிக்கூடங்களில் படிக்கும் பிளஸ்-1, பிளஸ்-2 மாணவ, மாணவிகள், அரசு கல்லூரிகள், அரசு உதவிபெறும் கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு இந்த லேப்டாப்புகள் இலவசமாக வழங்கப்படவுள்ளன. செப்டம்பர் 15ம் தேதி, அண்ணா பிறந்த நாளன்று இந்தத் திட்டத்தை முதல்வர் ஜெயலலிதா தனது கையால் தொடங்கி வைக்கிறார்.

லேப்டாப்களை கொள்முதல் செய்வதற்காக சர்வதேச டெண்டர் விடப்பட்டுள்ளது. இதையடுத்து பல்வேறு நிறுவனங்கள் விருப்பங்களைத் தெரிவித்தன. இதையடுத்து இதுதொடர்பான செயல் முறை விளக்கக் கூட்டம் நேற்று எல்காட் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.

சோனி, விப்ரோ, எச்.சி.எல்., டெல், இன்டெல், சாம்சங் உள்பட 140 உள்நாட்டு, வெளிநாட்டு நிறுவனங்களின் அதிகாரிகள் இதில் கலந்து கொண்டனர். தங்களது தயாரிப்புகளின் மாதிரிகளுடன் வந்திருந்த அவர்கள் அந்த லேப்டாப்கள் குறித்து விவரித்தனர்.

லேப்டாப் எப்படி இருக்க வேண்டும் என்பதை அதுல் ஆனந்த் விளக்கினார். நிகழ்ச்சியில் உயர் கல்வித்துறை இணை செயலாளர் உமா மகேஸ்வரி, ஐ.ஐ.டி. பேராசிரியர் ஜெயப்பிரகாஷ், அண்ணா பல்கலைக்கழக இயக்குனர் ரைமன்ட் உத்தரியராஜ், `நிக்' நிறுவனத்தின் அதிகாரிகள் மணிவண்ணன், கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் உடனிருந்தனர்.

லேப்டாப் தயாரிப்புக்கு பல்வேறு நிபந்தனைகளை அரசு விதித்துள்ளது.

அதன்படி, லேப்-டாப் சர்வதேச தரத்தில் இருத்தல் அவசியம். டெண்டர் கோரும் நிறுவனம் மாதத்திற்கு ஒரு லட்சம் லேப்-டாப்கள் தயாரிக்கும் திறன் கொண்ட தொழிற்சாலை வைத்திருக்க வேண்டும். மாத வருமானம் ரூ.70 கோடிக்கு மேல் இருக்க வேண்டும். லேப்-டாப்பில் தமிழ், ஆங்கிலம் சாப்ட்வேர் இடம்பெற வேண்டும். லேப்-டாப் 14 அங்குல திரையுடன், 2 கிலோ 700 கிராம் எடைக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

லேப்-டாப் பழுது ஏற்பட்டால் உடனுக்குடன் சரிசெய்ய வசதியாக தாலுகா அளவில் சர்வீஸ் மையங்கள் வைத்திருக்க வேண்டும். லேப்-டாப்பிற்கு 3 வருட உத்தரவாதமும், பேட்டரிக்கு ஒரு வருட உத்தரவாதமும் அளிக்க வேண்டும்.

2ஜிபி ரேம், 320 ஜிபி ஹார்ட் டிஸ்க், டிவிடி ரைட்டர் உள்ளிட்டவை இடம்பெற வேண்டும். டெண்டரில் பங்கேற்கும் அனைத்து நிறுவனங்களும் அரசு அறிவித்துள்ள அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கிய மாதிரி லேப்-டாப் ஒன்றை இந்த மாத இறுதிக்குள் தயாரித்துக் கொடுக்க வேண்டும் என்பது அந்த நிபந்தனைகளாகும்.

ஜூலை 11ம் தேதி டெண்டர்கள் திறக்கப்படவுள்ளன. அன்று லேப்டாப் தயாரிக்க யாருக்கு அனுமதி தரப்படும் என்பது தெரிய வரும்.

English summary
TN govt will distribute 9.12 lakh free laptops to the Higher secondary, college students in the first phase of the scheme. Govt had called nearly 140 computer firms which are willing to get the contract to manufacture the free laptops and explained the needs and conditions to them yesterday.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக