புதன், 1 ஜூன், 2011

8 மாவட்டங்களில் கடும் மழை,மண்சரிவு 32,774 பேர் பாதிப்பு; 343 வீடுகள் சேதம்

 நாடளாவிய ரீதியில் எட்டுமாவட்டங்களில் பெய்த கடும் மழை, மண்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கினால் நேற்று வரையிலும் எட்டுப் பேர் பலியானதுடன் 10 பேர் படுகாயமடைந்துள்ளனர். இந்த இயற்கை அனர்த்தங்களினால் 8622 குடும்பங்களை சேர்ந்த 32 ஆயிரத்து 774 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது. இயற்கை அனர்த்தங்களினால் எட்டு மாவட்டங்களிலும் 72 வீடுகள் முழுமையாக சேதமடைந்ததுடன் 343 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.  கொழும்பில் இடம்பெயர்ந்தவர்களில் 79 குடும்பங்களை சேர்ந்த 339 பேர் தஞ்சமடைந்துள்ளனர் என்றும் நிலையம் அறிவித்துள்ளது.  கேகாலை, காலி,களுத்துறை, கொழும்பு, கம்பஹா, குருணாகல், இரத்தினபுரி, மற்றும் நுவரெலியா ஆகிய எட்டு மாவட்டங்களிலேயே இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.  கேகாலை மாவட்டத்தில் இரண்டு சிறுவர்கள் உட்பட ஐவரும், காலிமாவட்டத்தில் ஒருவரும், மின்னல் தாக்கம்,வெள்ளத்தில் விழுந்ததில் களுத்துறை மாவட்டத்தில் இருவரும் பலியாகியுள்ளனர். கேகாலை மாவட்டத்தில் 1670 குடும்பங்களை சேர்ந்த 4970 பேரும், களுத்துறை மாவட்டத்தில் 406 குடும்பங்களை சேர்ந்த 1286 பேரும், கொழும்பு மாவட்டத்தில் மழை மற்றும் வெள்ளப்பெருக்கினால் 4108 குடும்பங்களை சேர்ந்த 16174 பேரும் கம்பஹா மாவட்டத்தில் 2437 குடும்பங்களை சேர்ந்த 10341 பேரும் நுவரெலியா மாவட்டத்தில் மூன்றுபேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். கொழும்பு மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட 79 குடும்பங்களை சேர்ந்த 339 பேரும் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.  முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளவர்களுக்கு தேவையான உலருணவு பொருட்களை வழங்குவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்றும் நிலையம் அறிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக