சனி, 4 ஜூன், 2011

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் பொறியியல்பீடம் அமைக்க இந்தியா 250 மில்லியன் ரூபா உதவி:அமைச்சர் எஸ்.பி.திசாநாயக்க!


யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் பொறியியல் பீடம் ஒன்றை அமைப்பது தொடர்பான நடவடிக்கைகள் இடம்பெற்றுவருகின்றன. இது தொடர்பில் இந்திய அரசாங்கத்துடன் பேச்சு நடத்தப்பட்டுள்ளது. இந்தியா முதற்கட்டமாக 250 மில்லியன் ரூபாவினை இந்தத் திட்டத்துக்காக வழங்கவுள்ளது என்று உயர் கல்வி அமைச்சர் எஸ்.பி. திசாநாயக்க தெரிவித்தார்.

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்துக்கான பொறியியல் பீடம் உருவாக்கம் தொடர்பில் தகவல் வெளியிடுகையிலேயே அமைச்சர் இந்த விடயத்தை குறிப்பிட்டார். அவர் இது தொடர்பில் மேலும் கூறுகையில்,
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் பொறியியல் பீடம் ஒன்றை அமைப்பது தொடர்பான அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இது தொடர்பான ஆரம்பகட்ட நடவடிக்கைகள் இடம்பெற்றுள்ளன. இதனை அமைப்பதற்கு இந்திய அரசாங்கம் இரண்டு கட்டங்களாக உதவிகளை வழங்கவுள்ளது. முதற்கட்டமாக இந்திய 250மில்லியன் ரூபாவை வழங்கவுள்ளது. அந்த வகையில் நாங்கள் அதனைக்கொண்டு நிர்மாணப்பணிகளை ஆரம்பிப்போம்.
மேலும் இரண்டாம் கட்டமாகவும் இந்தியா 250 மில்லியன் ரூபாவை பொறியியல் பீடத்தை அமைப்பதற்கான உதவியாக வழங்கவுள்ளது. அத்துடன் இலங்கை அரசாங்கமும் 250 மில்லியன் ரூபாவை இதற்காக ஒதுக்கியுள்ளது.
அந்த வகையில் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்துக்கான பொறியியல் பீடம் விரைவில் கிளிநொச்சி மாவட்டத்தில் அமைக்கப்படும். இதற்கான காணியை அடையாளம் காணும் பணிகளும் இடம்பெற்றுவிட்டன.
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் பொறியியல் பீடம் ஒன்று அமைக்கப்படவேண்டும் என்று நீண்டகாலமாக கோரிக்கை விடுக்கப்பட்டுவருகின்றது. எனவே அதனை நிறைவேற்றி வைப்பதில் அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்படும் என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக