புதன், 1 ஜூன், 2011

பரோட்டாவுக்காக சண்டைபோட்ட அதிமுகவினர்: 25 பேர் மீது வழக்கு


மதுரை: மதுரையில் பரோட்டா வாங்குவதில் இரு அதிமுக பிரமுகர்கள் ஆதரவாளர்களிடையே ஏற்பட்ட தகராறில் 25 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.

மதுரை முனிச்சாலை அருகே உள்ளது கான்பாளையம். இந்த பகுதியைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். இவர் அதே பகுதியில் பரோட்டா கடை வைத்து நடத்தி வருகிறார்.

இவரது கடையில் இஸ்மாயில்புரத்தைச் சேர்ந்த அதிமுக பிரமுகர் பாலையா என்பவர் பரோட்டா வாங்க வந்து காத்திருந்தார். அப்போது தெற்கு சட்டசபை தொகுதி அதிமுக செயலாளர் ராஜபாண்டியன் என்பவர் பரோட்டா வாங்க வந்தார்.

இந்த இருவரில் யார் முதலில் பரோட்டா வாங்குவது என போட்டி ஏற்பட்டது. போட்டியால் சிறிது நேரத்தில் வாய்த்தகராறு ஏற்பட்டது. உடனே இருவரும் செல்போனில் அவரவர் ஆதரவாளர்களை பரோட்டா கடைக்கு வருமாறு அழைத்தனர். இரு தரப்பினரும் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர்.

இதில் குமார் மற்றும் ராஜபாண்டிக்கு படுகாயம் ஏற்பட்டது. இருவரும் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பாக இரு தரப்பினரும் கொடுத்த புகாரின் பேரில் தெப்பக்குளம் போலீசார் வழக்குப் பதிவு செய்து இரு தரப்பைச் சேர்ந்த 25 பேர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக