வெள்ளி, 24 ஜூன், 2011

2 லிட்டர் பால் கொடுக்கும் அதிசய கன்றுக்குட்டி



பெல்காம் அருகே 71/2 மாதமே ஆன கன்றுக்குட்டி ஒன்று பால் கொடுக்கிறது. இந்த அதிசய கன்றுக்குட்டியை `தெய்வப் பிறவி'யாக கருதிய சுமங்கலி பெண்கள், தினமும் வந்து பூஜை செய்து கும்பிட்டுவிட்டு செல்கிறார்கள்.

பொதுவாக பசுமாடுகள் கன்று ஈன்ற பிறகு அதன் மடியில் பால் சுறப்பது வழக்கம். அந்த பால் அதன் கன்றுக்கு உணவாக இருப்பதுடன், பொதுமக்களுக்கும் பயன்படுகிறது.
ஆனால் பெல்காம் அருகே ஒரு கன்றுக்குட்டியின் மடியில் 71/2 மாதத்திலேயே பால் சுறக்க தொடங்கி விட்டது. அந்த கன்று தினமும் 2 லிட்டர் பால் கொடுத்து வருகிறது.

பெல்காம் மாவட்டம் அதானி தாலுகாவில் உள்ளது தவம்சி கிராமம். இந்த ஊரைச் சேர்ந்தவர் ராமனகவுடா. இவர் வளர்த்து வரும் பசுமாடு, கன்று ஒன்றை ஈன்றது. அந்த கன்றுக்குட்டிக்கு தற்போது 71/2 மாதங்களே ஆகிறது.

இந்த நிலையில் கடந்த 15 நாட்களாக அந்த கன்றுக்குட்டி பால் கொடுத்து வருகிறது. தினமும் 2 லிட்டர் வீதம் அந்த கன்றின் மடியில் இருந்து பால் கறக்கிறார்கள்.

இதுபற்றிய தகவல் கிடைத்ததும் பெல்காம் மாவட்ட அரசு கால்நடை மருத்துவர்கள் வந்து ஆய்வு செய்து வருகிறார்கள். உண்மையிலேயே இது ஒரு அதிசயம் தான் என்று டாக்டர்களும், பொதுமக்களும் வியந்துள்ளனர்.

இதற்கிடையே கிராம பெண்கள், ராமனகவுடாவின் வீட்டுக்கு தினமும் படையெடுத்து வருகிறார்கள். அதிசய கன்றுக்குட்டி ஒரு தெய்வீகப்பிறவி என்று கூறும் அவர்கள் கன்றுக்குட்டியை தொட்டு வணங்குகிறார்கள். குறிப்பாக சுமங்கலி பெண்கள் தினமும் வந்து கன்றுக்குட்டியை குளிப்பாட்டி மஞ்சள், குங்குமம் வைத்து மாலை போட்டு பூஜை நடத்துகிறார்கள்.
அதிசய கன்றுக்குட்டி பற்றி அதன் உரிமையாளரான ராமனகவுடா,
’நாங்கள் ஒரு பசுமாட்டை மராட்டிய மாநிலத்தில் இருந்து வாங்கி வந்தோம். அந்த பசு ஈன்ற கன்றுதான் பால் கொடுத்து வருகிறது. முதலில் எங்களுக்கு இந்த அதிசயம் தெரியவில்லை. 15 நாட்களுக்கு முன்பு இந்த கன்றுக் குட்டி கல் அருகே படுத்திருந்தது. கன்றின் மடி ஒரு கல்லின் மீது கிடந்தது. நான் தற்செயலாக அன்று சென்று பார்த்தபோது கல் மீது கன்றின் மடி கிடந்த இடத்தில் ஒரு துளி பால் காணப்பட்டது.

அதை தொட்டு சுவைத்து பார்த்தபோது சாதாரண பசும்பாலுக்கு உரிய சுவை தென்பட்டது. உடனே கன்றுக்குட்டியை எழுப்பி பால் கறந்து பார்த்தேன். என்ன ஆச்சரியம், என்னால் நம்பவே முடியவில்லை. பால் வரத்தொடங்கியது. கடந்த 15 நாட்களாக அந்த கன்றின் மடியில் பால் சுறந்து வருகிறது. பசுமாட்டின் பால் எந்த அளவுக்கு சுவையாக இருக்கிறதோ அதே ருசி கன்றுக்குட்டியிடம் இருந்து கிடைக்கும் பாலுக்கும் உள்ளது.

சுற்றுவட்டார கிராமத்தை சேர்ந்த சிறியவர்களும், பெண்களும், பெரியவர்களும் கூட்டம் கூட்டமாக வந்து பார்த்து செல்கிறார்கள். இது எங்களுக்கு பெருமையாக இருக்கிறது’’ என்று கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக