திங்கள், 27 ஜூன், 2011

கிரைண்டருக்கு 1,000 வீதம் பல நூறு கோடிகளை இந்தக் கும்பல் கொள்ளையடிக்கப்போகிறது

கிரைண்டர்... மிக்ஸி... மின்விசிறி..

மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கு,

கோயம்புத்தூர் மாவட்ட கிரைண்டர் தயாரிப்​பாளர் சங்கத்தின் உறுப்பினர்களில் ஒருவனாகிய நான் தங்களின் நலன் விரும்பி. தங்கள் ஆட்சி மீண்டும் வர, எமது கோவை மாவட்ட மக்களே பிள்ளையார் சுழி போட்டவர்கள். மாவட்ட வளர்ச்சிக்காக உங்கள் மீது மாபெரும் நம்பிக்கைவைத்து எதிர்பார்ப்பு​களுடன் காத்திருக்​கிறார்கள் இந்தப் பகுதி மக்கள்.

கருணாநிதி குடும்பத்தினர் செய்த ஊழல், கபளீகரம் ஆகியவையே கடந்த தேர்தலில் தி.மு.க. படுதோல்வி அடையக் காரணம் என்பது அனைவரும் அறிந்ததே. உங்களுக்கும் இது தெரியும். தாங்கள் ஆட்சிப் பொறுப்பு ஏற்றதும் தமிழகத்தில் ஊழல் அற்ற, யாருடைய தலையீடும் இல்லாத, நேர்மையான, மக்களாட்சி நடக்கும் என்று சொன்னீர்கள். உங்களின் அந்த நம்பிக்கையில் மண் விழும் காட்சிகள் ஆரம்பமாகி உள்ளன. உங்களின்.......... குடும்பத்தினர் ஆடும் ஆட்டம் அப்படி!

தேர்தல் அறிக்கையில் நீங்கள் கூறியவாறு, ஏழை மக்களுக்கு இலவச கிரைண்டர், மிக்ஸி, மின்விசிறி வழங்கும் திட்டப் பணிகள் ஆரம்ப கட்டத்தில் உள்ளன. இந்நிலையில், கோவையில் இருக்கும் ...........

(மூன்று நபர்களின் பெயரை அவர் குறிப்​பி​டுகிறார்!) ஆகியோர் தங்களுக்கு வேண்டிய கிரைண்டர் தயாரிப்போர் சிலரின் துணையுடன், சிண்டிகேட் அமைத்து தமிழக அரசின் இலவச கிரைண்டர் ஆர்டரைப் பெற களத்தில் இறங்கி உள்ளனர். இதற்கு அமைச்சர் ................ அவர்களும் உடந்தை. இந்த சிண்டிகேட் கும்பலுக்குத்தான் இனி வரும் எல்லா ஆர்டரும் போகுமாம். கிரைண்டருக்கு அதிக விலையை டெண்டர் மதிப்பில் இடம்பெறச் செய்து, அதற்கு உண்டான தொகையை தமிழக அரசிடம் இருந்து பெற்று, தங்கள் பாக்கெட்டில் நிரப்ப வேண்டும் என்பதே இவர்கள் நோக்கம். ஒரு கிரைண்டருக்கு 1,000 வீதம் பல நூறு கோடிகளை இந்தக் கும்பல் கொள்ளையடிக்கப்போகிறது. மக்களின் வரிப் பணத்தைச் சுரண்ட நினைக்கும் இந்தக் கும்பலின் கூட்டு தொடர்ந்தால், உங்கள் ஆட்சிக்குத்தான் கெட்ட பெயர்.

இது குறித்த விவரங்களை மாநில உளவுப் பிரிவு போலீஸாரிடம் நீங்கள் கேட்டுப் பாருங்கள். புட்டுப் புட்டு வைப்பார்கள். இல்லை எனில், சமீபத்தில் சென்னையில் நடந்த பொருட்களின் தரம் குறித்த ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டவர்களின் பின்னணியை நீங்கள் ஆராய்ந் தால், நான் சொல்வது உண்மை என்று தெரியும். இந்த விவகாரம் விரைவில் எதிர்க் கட்சி​களுக்கும் கசியப் போகிறது.

அலைக்கற்றை ஒதுக்கீடு செய்து, தேசத்துக்கு பல்லாயிரம் கோடி வருவாய் இழப்பு ஏற்படுத்தி, மக்கள் பணத்தைக் கொள்ளை​யடித்து ஊழல் செய்ததற்கும், தரம் அற்ற கிரைண் டருக்கு அதிக விலை நிர்ணயித்து அரசுப் பணத்தை (மக்கள் வரிப் பணம்) விழுங்க நினைப்பவர்களுக்கும் என்ன வித்தியாசம்?

கிரைண்டர், மிக்ஸி அல்லது மின்விசிறி அசெம்பிள் செய்ய குறைந்த எண்ணிக்கையில் ஆன உதிரிப் பாகங்கள் போது​மானவை அதன் மொத்த அடக்க விலையை மூலப் பொருட்களின் தரத்தைக்​கொண்டு, யார் வேண்டுமானாலும் நிர்ணயிக்க லாம். தங்களது முழுக் கண்காணிப்பில் அனைத்துக் கட்சி எம்.எல்.ஏ-க்கள் அடங்கிய ஒரு கமிட்டி ஏற்படுத்தி, தமிழக மக்கள் அனைவரும் அறிந்து​கொள்ளும் வகையில், ஓப்பன் டெண்டர் மூலமாக அதன் விலையை நிர்ணயம் செய்ய வேண்டும். இதை நீங்கள் செய்யத் தவறினால், 'ஆட்சிதான் மாறி உள்ளது; காட்சிகள் மாறவே இல்லை’ என்று தமிழக மக்கள் எண்ணும் சூழல் உருவாகும்.

அண்ணா ஹஜாரே மற்றும் பாபா ராம்தேவ் உள்ளிட்​டோரின் சமீபத்திய செயல்பாடுகளால், இந்திய மக்கள் அனைவரும் மிகவும் விழிப்புடன் இருக்கிறார்கள்.

இந்தச் சூழலில் .............. தலையீட்டை தமிழக அரசின் நிர்வாகத்திலும், ஆட்சியிலும் நீங்கள் அனுமதித்தால், தி.மு.க. மீதுகொண்ட வெறுப்பு உங்கள் மீதும் திரும்பும்.

அம்மா, நீங்கள் மோடியைப்​போல, நிதீஷ்குமார்போல சிறப்பாக ஆட்சி நடத்த வேண்டும் என்றே மக்கள் நினைக்கிறார்கள். இந்த நிலை தொடர்ந்தால்... வரும் உள்ளாட்சித் தேர்தல் வரைகூட உங்களின் வெற்றிக் கோஷம் ஒலிக்காது. இறுதியாக, காமராஜரின் வார்த்தைகளுடன் நிறைவு செய்கிறேன். ஊழல் அற்ற, நேர்மையான நல்லாட்சியைத் தாங்கள் தர இயலாத நிலை ஏற்பட்டால், தி.மு.க-வும், அ.தி.மு.க-வும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்தான். உங்களின் அதிரடி முடிவுக்​காக நம்பிக்கையுடன் காத்திருக்​கிறேன். நன்றி!’

இப்படிக்கு,

இரட்டை இலைக்கு வாக்களித்தவன்.

என்ன செய்யவேண்டும் ஜெ.?

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்.எல்.ஏ பாலபாரதி இந்த விவகாரம் குறித்து, ''பொதுநல நோக்கு கொண்ட நிறுவனங்கள் வசம் இலவச பொருட்கள் தயாரிக்கும் பொறுப்பை ஒப்படைக்கலாம். முறைகேடுகள் நடைபெறாமல் தடுக்க, உடனடியாக அனைத்துக் கட்சி எம்.எல்.ஏ-க்கள் அடங்கிய குழுவை நியமிக்க வேண்டும். அந்த குழுவில் சீனியர் அதிகாரிகளுக்கும் இடம் கொடுக்கலாம். நிறுவனங்கள் தயாரித்துத் தரும் பொருட்களின் தரத்தை தீவிரமாக ஆராய்வதுடன், குறைந்தது இரண்டு வருட கேரண்டி கொடுக்கப்பட வேண்டும். ஓப்பன் டெண்டர் சிஸ்டத்தை அமல்படுத்தி ஒப்பந்த ஆர்டர் வழங்கினால்தான் மக்கள் வரிப்பணம் பாழாகாது!'' என்று தெரிவித்தார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக