செவ்வாய், 24 மே, 2011

இம்புட்டு வருஷமும் அம்மாதான் கூட்டணி தர்மங்களை சூப்பராகக் காப்பாற்றி வந்தார்.

ரத்து ராணி

மரியம் பிச்சை
எம்.எல்.ஏ. பதவி ஏற்பு விழாவில் கலந்துகொள்ள திருச்சியிலிருந்து காரில் கிளம்பிய அமைச்சர் மரியம் பிச்சை விபத்தில் பலியாகியிருக்கிறார். ஆழ்ந்த அனுதாபங்கள்.
படம்-நன்றி: தினமலர்போன கட்டுரையில் சொன்ன மாதிரி கட்சிக் கொடியை எடுத்து காரில் பறக்க விட்டாலே அது கார் இல்லை, ராக்கெட் என்ற நினைப்பு அனைவருக்கும் வந்து விடுகிறது. கார்களில் கட்சிக் கொடியோ, கட்சி சம்பந்தப்பட்ட ஸ்டிக்கர்களோ இருக்கக்கூடாது என்ற சட்டத்தை உடனடியாகக் கொண்டுவர வேண்டும். அவர்கள் காரில் எப்படி வேண்டுமானாலும் பறக்கட்டும், எக்கேடு கெடட்டும். சாதாரண பொது ஜனங்களுக்கும் பாதிப்பு ஏற்படுத்துகிறார்கள். வேண்டுமானால் ஆளுக்கொரு ஹெலிகாப்டர் வாங்கிக் கொண்டு அதில் ஆளுயரக் கொடியைக் கட்டிக் கொண்டு கடல் மார்க்கமாகப் பயணிக்கட்டுமே. யார் வேண்டாம் என்றது?!O
ஓ. பன்னீர் செல்வத்தின் அண்ணன் மாதிரியான தோற்றத்தில் இருக்கும் புதுவை முதல்வர் ரங்கசாமி ‘அம்மா’வுக்காக சுண்டக் காய்ச்சிய பாண்டிச்சேரி சரக்கு ரெடி செய்து அதையும் கொடுக்காமல் அப்படியே தானே முழுங்கி விட்டார்.
இம்புட்டு வருஷமும் அம்மாதான் கூட்டணி தர்மங்களை சூப்பராகக் காப்பாற்றி வந்தார். அடல் பிஹாரி வாஜ்பாயியிலிருந்து அண்ணன் வைக்கோ வரை பார்த்திருக்கிறோம். அப்படிப்பட்ட அம்மாவிடமே ஒருவர் ஆட்டம் காட்டியிருக்கிறார் என்றால் அவர் எப்படிப் பட்ட சூராதி சூரராக இருக்க வேண்டும்?!
பாண்டிச்சேரியில் (இருக்கிற ஆச்சரியங்கள் பத்தாது என்று) இன்னும் பல ஆச்சரியங்கள் காத்திருக்கின்றன!
தமிழகத்தில் சுழன்றடித்த சூறாவளியின் எஃபெக்டில்தான் ரங்கசாமிக்கு சான்ஸ் அடித்தது என்பது தான் உண்மை. ஜெ.வை அவமானப்படுத்தியதன் மூலம் ரங்கசாமிக்கு ஏழரை ஆரம்பித்து விட்டது என்று சொன்னால் சிரிப்பீர்கள். ஆனால் பொறுத்திருந்து பாருங்கள்!O

தலைமைச் செயலக மாற்றத்திற்கு நிறுத்தி நிதானமாக முதல்வர் ஒரு பெரிய விளக்கம் கொடுத்திருக்கிறார். ஆனால் நாம் ஏற்கெனவே கேட்ட நூலக நிலைமை குறித்து இது வரை தகவலில்லை! நூல்கள் பத்திரமாக இருந்தால் சரி! [எடைக்குப் போட்டால்கூட ஏழெட்டு லட்சங்களுக்குக் குறையாது.]
O
எதிர்பார்த்தபடியே சமச்சீர் கல்வித் திட்டத்தை ரத்து செய்திருக்கிறது அரசு. ‘தற்போதைய சமச்சீர் கல்வி பாடத்திட்டம் ஒட்டுமொத்த கல்வித் தரத்தை உயர்த்த வழிவகை செய்யாது என்பதால் அதை உயர்த்துவது குறித்து ஆராய வல்லுநர் குழு ஒன்றை அமைக்க அமைச்சரவை முடிவெடுத்துள்ளது’ என்றும் அரசு அறிவித்துள்ளது. புதிதாக (பழைய) பாடப் புத்தகங்களை அச்சடிக்க வேண்டும் என்பதால் பள்ளிக்கூடங்களை ஜூன் 15-ம் தேதி திறக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. பசங்களுக்குக் கொண்டாட்டம்! இன்னும் ஒரு நாள் கழித்து ஜூன் 16-ம் தேதி திறந்தால் அம்மாவின் (சமீபத்திய) ராசிப்படி கூட்டுத் தொகை 7 கிட்டும்!
பாடப்புத்தகங்களில் அரசியல் தலைவர்களின் கருத்துகளைத் திணிப்பது உச்சக்கட்ட அநாகரிகம். தயவு தாட்சண்யமின்றி அது போன்ற எதையும் இப்போதும், எப்போதும் பாடப்புத்தகங்களில் திணிக்காமலிருக்க முதல்வர் வழிவகை செய்ய வேண்டும்.
அரசின் வரிப்பணம் மட்டுமின்றி சமச்சீர் கல்வியை எதிர்பார்த்து நோட்ஸுகள் அடித்து வைத்திருந்த பல தனியார் நிறுவனங்களுக்கும் பலத்த அடி! இந்த நோட்ஸ் சித்தாந்தத்தையே அடியோடு ஒழிக்க வேண்டும். புரியாத அளவில் பாடத் திட்டத்தை வைத்து அதை புரிய வைக்காத அளவிற்கு ஆசிரியர்களை வைத்துக் கொண்டு அதற்கு தனியா(ரா)க நோட்ஸ் வேறு எதற்கு? இதற்குப் பேசாமல் நோட்ஸை மட்டும் பாடப் புத்தகமாக வைத்துப் பாடம் நடத்தி விட்டுப் போகலாமே!
சமச்சீர் கல்வி முறையே அள்ளித் தெளித்த அவசர கதியில் கொண்டு வரப்பட்டது தான்! எல்லாருக்கும் சமமாக எல்லாமே வழங்கி முடித்தாகி விட்டது. கல்வி ஒண்ணு தான் பாக்கி! அடிப்படை சாலை வசதிகளை தமிழகமெங்கும் சமச்சீராக வழங்கியாகி விட்டதா? அடிப்படை மின்சார வசதிகளை தமிழகமெங்கும் சமச்சீராக வழங்கியாகி விட்டதா? அடிப்படை குடிநீர் வசதிகளை தமிழகமெங்கும் சமச்சீராக வழங்கியாகி விட்டதா?
உண்மையிலேயே கல்வியின் மீது அக்கறையிருந்தால் மத்திய அரசின் CBSE பாடத்திட்டத்துக்கு இணையான கல்வியாக சமச்சீர் கல்வியைக் கொண்டு வந்திருக்க வேண்டும். செய்தார்களா முந்தைய ஆட்சியினர்?
10 மாடிக் கட்டடத்தில் 5 படி கூட ஏற முடியாதவனை 10 மாடியும் ஏற்றுவதற்கு முற்படுவதற்கு பதிலாக 10 படியையும் ஏற முடிந்தவனை, 5 படிகள் தான் ஏற வேண்டும் என்று சொல்வது அபத்தத்திலும் அபத்தம். இதற்குக் கல்வியாளர்கள் ஒப்புகை அளித்தார்கள் என்று சப்பைக்கட்டு வேறு! ஏசி ரூமில் முந்திரி பக்கோடா கொறித்துக்கொண்டு நீட்டிய இடத்தில் கும்பிட்டுக் கையெழுத்துப் போடும் கல்வியாளர்களால்தான் தமிழ்நாட்டில் கல்வித்தரம் பாதாளத்துக்குப் போய்க்கொண்டிருக்கிறது. இந்தக் கல்வியாளர்களுக்கெல்லாம் ஒரு பரீட்சை வைத்து யார் யார் நிஜமான கல்வியாளர் என்று கண்டுபிடிக்க ஏதாவது சட்டம் கொண்டுவந்தால்கூடத் தேவலை.
அனைத்து சமூகத்தினருக்கும், அனைத்து பொருளாதாரத் தளங்களிலிருந்து வருவோருக்கும் ஆரம்பக் கல்வி முதல் உயர்கல்வி வரை ஒரே மாதிரி தான் என்று கொண்டு வாருங்கள். வரவேற்கலாம்! அதை விட்டு விட்டு மெட்ரிகுலேஷன் கல்வி அளவிற்கு அரசுப் பள்ளிகளில் இல்லையாம், அதனால்தான் சமச்சீர் கல்வி என்பது கேலிக்குரிய விஷயம்!
ஐந்தாறு வகை ஆப்பிள் பழங்கள் கடையில் கிடைக்கின்றன. ஏழை மக்களால் விலை உயர்ந்த ஆப்பிளை வாங்கிச் சாப்பிட முடியவில்லை. எனவே இனிமேல் ஒரே விலையாக விலை குறைந்த ஆப்பிள்கள் மட்டும் தான் விற்பனை செய்யலாம் என்றால் எப்படி?!
திமுக ஆட்சியின் கொள்கை, கோட்பாடுகளைப் பிடிக்காமல்தான் மக்கள் ஒட்டு மொத்தமாக அவர்களை நிராகரித்தார்கள். எனவே புதிய தலைமைச் செயலகம், சமச்சீர் கல்வி போன்ற அவர்களின் திட்டங்களை அப்படியே செயல்படுத்த வேண்டும் என்பதில்லை. முந்தைய திமுக அரசின் அனைத்துத் திட்டங்களையும் அலசி ஆராய்ந்து அவற்றில் மக்கள் நலனுக்கு உகந்தது என்பதை விருப்பு வெறுப்பின்றி செயல் படுத்த வேண்டும்.
அதே நேரத்தில் கடந்த அரசு செயல்படுத்திய திட்டம் எதையாவது மாற்றினால், ரத்து செய்தால் அந்த அறிவிப்பிலேயே அதற்கான முழு விளக்கத்தையும் கொடுத்தால் மக்கள் மத்தியில் வீணான குழப்பங்கள் ஏற்படுவதைத் தவிர்க்க முடியும்.

மணல் குவாரிகளில் மணல் அள்ளத் தாற்காலிகத் தடை விதிக்கப்பட்டிருக்கிறது. தமிழ் நாடெங்கும் கட்டுமானப் பணிகள் இதனால் பாதிப்புக்குள்ளாகியுள்ளன. போன முறை ஆட்சியில் இருந்த போது ஜெயலலிதாதான் மணல் குவாரிகளை அரசுடமையாக்கினார். அப்படியும் கூட அளவுக்கு மீறி மணல் அள்ளுதல், அண்டை மாநிலங்களுக்கு மணல் கடத்துதல் என்று ஏகப்பட்ட குளறுபடிகள். அம்மா ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் தடை அமுலுக்கு வந்து விட்டது! மணல் குவாரிகள் மீதான அரசின் தெளிவான பார்வையை உடனடியாக அறிவிக்க வேண்டும். தடை விலக்கப்பட வேண்டும்.
O
சென்னை உட்பட பல இடங்களில் கோடை மழை இரண்டு நாட்களுக்கு முன் பொழிந்தது. ‘அம்மா ஆட்சிக்கு வந்தால் மழை நிச்சயம்’ என்று புளகாங்கிதம் அடைந்தார்கள் அடிப்பொடிகள். தொடர்ந்து புளகாங்கிதம் அடைந்து கொண்டேயிருக்க எல்லாம் வல்ல மழை பகவானை இறைஞ்சுவோம்!
O
மாயவரத்தான்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக