செவ்வாய், 31 மே, 2011

சன் சீ கப்பல் அகதிகளில் ஒருவரை நாடு கடத்த உத்தரவு

சன் சீ கப்பலில் சென்ற இலங்கைத் தமிழர்களில் ஒருவர் தமிழீழ விடுதலைப் புலிகளின் பிரச்சார வீடியோவொன்றில் காணப்பட்டமையால் கனடா குடிவரவு மற்றும் அகதிகள் சபை அவரினை நாடுகடத்துமாறு உத்தரவிட்டுள்ளது.

இதன்படி சன் சீ கப்பலில் சென்ற சுமார் 500 பேர்களில் நான்காவது நபர் நாடு கடத்தப்பட உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை எழுதப்பட்ட தீர்ப்பில், அவர் முன்னாள் விடுதலைப் புலிகளின் படை உறுப்பினரோ அல்லது ஆயுத யுத்தத்தில் பங்கு பற்றியவரோ கிடையாது என குறிப்பிடப்பட்டுள்ளது.

எப்படியாயினும் குறித்த நபர் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீது அக்கரை கொண்டு குறைந்தளவில் ஒத்துழைப்பினை வழங்கியுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் இலங்கை இராணுவத்துடனான யுத்தத்தினை சித்தரிக்கும் தமிழீழ விடுதலைப்புலிகளின் திரைப்படத்தில் குறித்த நபர் அங்கம்வகித்துள்ளார் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த நபர் சார்பில் வாதிட்ட சட்டத்தரணி குறித்த திரைப்படமானது பொழுது போக்கு நோக்கத்துக்காக காட்சிப்படுத்தப்பட்டதனாலேயே குறித்த நபர் நடித்ததாக தெரிவித்துள்ளார்.

இதனை அரச தரப்பு சட்டத்தரணி மறுத்துள்ளார்.

அவ்வாறான திரைப்படங்கள் தமிழீழ விடுதலைப் புலிகளின் பிரசாரத்தினை நோக்காக கொண்டது என அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், குறித்த நபர் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு கராத்தே ஆலோசகராக பணிபுரிந்ததாகவும் அரச தரப்பு சட்டத்தரணி தெரிவித்துள்ளார்.

தீர்ப்பு வழங்கப்பட்ட போது சந்தேகநபர் எதுவித கருத்துகளையும் வெளியிடவில்லை என தெரியவருகிறது என சர்வதேச ஊடகம் ஒன்றில் செய்தி வெளியாகியுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக