சனி, 14 மே, 2011

தென் மாவட்டங்களை மொத்தமாக பறிகொடுத்த திமுக கூட்டணி-அதிர்ச்சியில் மு.க. அழகிரி!

மதுரை: மத்தி்ய அமைச்சர் மு.க.அழகிரியின் கட்டுப்பாட்டில் உள்ள தென் மாவட்டங்களை மொத்தமாக திமுக பறிகொடுத்தது மட்டுமல்லாமல் அந்த மாவட்டங்களில் போட்டியிட்ட அமைச்சர்களும், கூட்டணிக் கட்சியினரும், சபாநாயகரும் படுதோல்வியடைந்துள்ளனர்.

தமிழகத்தில் கடந்த 2001ம் ஆண்டு திமுக, காங்கிரஸ் கட்சியோடு கைகோர்த்து தனிப்பெருபான்மையின்றி ஆட்சியை கைப்பற்றியது. மெஜாரிட்டி எம்எல்ஏக்கள் இல்லாமல் மைனாரிட்டி அரசாக இருந்து பல்வேறு, சலுகைகள் திட்டங்களை கொண்டு வந்தாலும் இடை இடையே பல குழப்பங்கள், அதிமுக எம்எல்ஏக்கள், மதிமுக எம்எல்ஏக்கள் கட்சித் தாவல், இடைத்தேர்தல் இப்படி குழப்ப சூழ்நிலைகள் தமிழகத்தில் ஏற்பட்டாலும், வாதத்திறமையால் வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் வழக்காடி வெற்றி பெறுவதை போல் திமுக அணி தன்னை ஒரு வலுவான ஆளும் கட்சியாக பல்வேறு தருணங்களில் காட்டி கொண்டு அதிகாரத்தை பலப்படுத்தி மத்திய அரசையை ஆட்டி படைத்தது.

காரணம் பிரதான எதிர்கட்சியான அதிமுக வலுவிழந்து விட்டதாக ஒரு கற்பனை காட்சி சூழ்நிலையை ஏற்படுத்தியது. இந்த வலுவிழந்துள்ளதாக நிலைப்பாடுதான் தமிழகத்திலுள்ள திமுக அமைச்சர்கள், எம்எல்ஏக்களை மக்களிடமிருந்து வேறுபடுத்திட என்பதை விட விலகிட வழி வகுத்தது.

திமுக அமைச்சர்களாகட்டும், சபாநாயகராட்டும், எம்எல்ஏக்களாகட்டும் யாரையும் மக்கள் நெருங்க முடியாத நிலைக்கு ஆட்படுத்தியது.

இந்த விலகி நின்ற செயல்தான் விருதுநகர், நெல்லை, தூத்துக்குடி, குமரி உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள திமுக அமைச்சர்கள், சபாநாயகர்கள், எம்எல்ஏக்கள் தோல்வியை நோக்கி சுனாமி பேரலையால் அடித்து ஒதுக்கியது எனலாம்.

2006ல் 20 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற அமைச்சர் கேகேஎஸ்ஆர் ராமசந்திரன், 15 ஆயிரம் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற அமைச்சர் கீதாஜூவன், 7 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற அமைச்சர் பூங்கோதை, 16 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற சபாநாயகர் ஆவுடையப்பன், 11 ஆயிரம் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற அமைச்சர் சுரேஷ்ராஜன், ஆகியோர் பெரும் தோல்வியை சந்தித்தனர். எம்எல்ஏக்களில் காங்கிரஸ் பீட்டர் அல்போன்ஸ், கருப்பசாமி பாண்டியன், வசந்தகுமார், உள்ளிட்டோர் அமைச்சர்களாகவே தங்களை கருதி கொண்டு தனி ஆவர்த்தனம் செய்ததும் தொண்டர்களையும், மக்களையும் மதிக்காத நிலைப்பாடு ஒரு புறம் இருந்தாலும் கருப்பசாமி பாண்டியன், மாலைராஜா, ஆவுடையப்பன் உள்ளிட்டோர் மணல் ராஜாங்கத்தில் கொடிகட்டி பறந்ததும் ஒரு பெரும் காரணம் இவர்கள் தோல்விக்கு உண்டு.

கடந்த தேர்தலில் 42 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளரை தேற்கடித்து வெற்றி பெற்ற அமைச்சரான மைதீன்கானின் வெற்றி இம்முறை வெறும் 605 வாக்குகளில் தான் நிர்ணயம் செய்யப்பட்டது. அதேபோல் பூங்கோதை தோல்வியும் 279 வித்தியாசத்தில்தான். அதிமுக அணியில் நெல்லை மாவட்டத்தில் பாளையங்கோட்டையை தவிர அனைத்து தொகுதிகளிலும், தூத்துக்குடி மாவட்டத்தில் திருச்செந்தூர் தவிர அனைத்து தொகுதிகளிலும், குமரி மாவட்டத்தில் 2 தொகுதிகளிலும் அதிமுக அமோக வெற்றியை தட்டி பறித்துள்ளது.

தென் மாவட்டங்களிலுள்ள 58 தொகுதிகளிலும் திமுக கூட்டணி அழகிரி அசைமெண்டின்படி திருமங்கலம் பார்மூலாப்படி வெற்றியை தக்க வைக்கலாம் என கருதி காய நகர்த்திய திமுகவுக்கு பெருத்த அடி விழுந்துள்ளது. 47 தொகுதிகளை இழந்துள்ளது திமுக. ஒட்டு மொத்ததில் தென் மாவட்டத்தில் திமுக அணி தோல்வியை தழுவியதற்கு காரணம் மணல் பிரச்சனை, மின் தட்டுபாடு, வேலைவாய்ப்பின்மை, எம்எல்ஏக்கள் மக்களோடு நெருங்காமல் ஒதுங்கியது, கூடவே ஸ்பெக்டரம் மோசடி போன்றவை மக்களை வெறுப்படைய செய்ததும் குறிப்பிடத்தக்கது.

மொத்ததில் எதிர்பார்க்காத வெற்றியை அதிமுகவும், எதிர்பார்க்காத தோல்வியை திமுகவும் தென்மாவட்டத்தில் சந்தித்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக