செவ்வாய், 24 மே, 2011

மும்பை தாக்குதலில் ஐ.எஸ்.ஐ., கூட்டுச்சதி : பயங்கரவாதி ஹெட்லி வாக்குமூலம்

: மும்பை தாக்குதல் சதியில் தொடர்புடைய பயங்கரவாதிகள் டேவிட் கோல்மேன் ஹெட்லி, தகாவூர் ராணா ஆகியோர் அமெரிக்க புலனாய்வு நிறுவனமான எப்.பி.ஐ.,ஆல் கைது செய்யப்பட்டு சிகாகோ சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் மீதான வழக்கு விசாரணை நேற்று சி‌காகோ கோர்ட்டில் தொடங்கியது. வழக்கில் அரசு தரப்பு சாட்சியான ஹெட்லியின் வாக்குமூலம் தாக்கல் செய்யப்பட்டது. அதில் ஹெட்லி தெரிவித்த பல திடுக் தகவல்கள் இடம் பெற்றுள்ளன. மேலும் மும்பை தாக்குதலுக்கு பாகிஸ்தானின் உளவு நிறுவனமான ஐ.எஸ்.ஐ.,- லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத இயக்கத்துக்கு உதவியதாகவும் ஹெட்லி தெரிவித்துள்ளான். மும்பை தாக்குதலுக்கு சதி திட்டம் தீட்டிக் கொடுத்ததை ஒப்புக் கொண்ட ஹெட்லி தற்போது அதில் ஐ.எஸ்.ஐ.,ன் பங்கையும் அம்பலமாக்கியுள்ளான். மும்பை தாக்குதலுக்கு முன்னர் ஐ.எஸ்.ஐ., மேஜர்கள் இக்பால் மற்றும் சமீரை சந்தித்ததாகவும், இந்தியாவில் தாக்குதல் நடத்த தேர்வு செய்த இடங்கள் குறித்து எடுத்துரைத்ததாகவும் தெரிவித்துள்ளான்.
ஹபீசுடன் சந்திப்பு : மும்பை தாக்குதலுக்கு முளையாக செயல்பட்டவர் என ஹபீஸ் சையத் மீது இந்தியா தொடர்ந்து குற்றஞ் சாட்டி வருகிறது. இந்நிலையில் கோர்ட்டில் வாக்குமூலம் அளித்துள்ள ஹெட்லி, மும்பை தாக்குதலுக்கு முன்னர் லஷ்கர் இயக்கத் தலைவர் ஹபீஸ் சையத்தை சந்தித்ததாகவும், லஷ்கர் இயக்கத்தினரிடம் இருந்து ஆயுதப் பயிற்ச்சி பெற்றதாகவும் ஒப்புக் கொண்டுள்ளான். ஷபீஸ் சையத்தின் பேச்சுகளால் தான் மிகவும் கவரப்பட்டதாகவும், அதன் காரணமாகவே மும்பை தாக்குதலுக்கு உதவியதாகவும் கூறியுள்ளான்.
ஐ.எஸ்.ஐ., உதவி : பாகிஸ்தான் மண்ணில் இருந்து சுதந்திரமாக இயங்கிக் கொண்டிருக்கும் லஷ்கர் இ தொய்பா மற்றும் ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத இயக்‌கங்களுக்கு, பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ., நிதி உதவி, ஆயுதப் பயிற்சி ஆகியனவற்றை அளித்து வருவதாகவும். கடந்த 2008ம் ஆண்டு நவம்பர் 26ம் தேதி மும்பையில் நடந்த தாக்குதலுக்கும் ஐ.எஸ்.ஐ., பெரும் அளவில் உதவியதாகவும் ஹெட்லியின் வாக்குமூலம் தெரிவிக்கின்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக