புதன், 25 மே, 2011

செய்யாத தவறுக்கு அமெரிக்காவில் இந்திய தூதரக அதிகாரி மகள் கைது!

வாஷிங்டன் : அமெரிக்காவில் இந்திய தூதரகத்தில் துணை கவுன்சலாக இருப்பவர் தேபாசிஷ் பிஸ்வாஸ். இவரது மகள் கிருத்திகா பிஸ்வாஸ். இவர் மேற்பட்டிப்புக்காக அமெரிக்காவுக்கு அண்மையில் வந்தார். அங்கிருக்கும் ஒரு பிரபல பள்ளியில் அட்வான்ஸ்ட் கணிதம் பாடப்பிரிவில் சேர்ந்தார். ஆனால் கிருத்திகா பிஸ்வாஸ், அவரது பள்ளி ஆசிரியர்கள் பற்றி தரக்குறைவான, ஆபாசமாக இ மெயில் அனுப்பியதாக புகார் எழுப்பப்பட்டது. இதனை தொடர்ந்து கிருத்திகா பிஸ்வாஸ் பள்ளியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார். தொடர்ந்து பள்ளிக்கூடத்தில் நடந்த விசாரணைக்குப் பின்னர் போலீசாரால் கைது செய்யப்பட்டார். விசாரணைக்காக ஒரு நாள் லாக்கப்பில் அடைக்கப்பட்ட அவர் பின்னர் விடுவிக்கப்பட்டார். லாக்கப்பில் அடிப்படை வசதிகள் மறுக்கப்பட்டு துன்புறுத்தப்பட்டுள்ளார். இந்த சம்பவம் நடந்து ஒரு மாதத்துக்குப் பின்னர் கிருத்திகாவுக்கு பள்ளிக்கூடத்தில் இருந்து ஒரு இ மெயில் வந்தது. அதில் அவர் மீதான குற்றச்சாட்டுகள் அனைத்தும் விலக்கிக் கொள்ளப்படுவதாகவும் , அவர் வழக்கம் போல் பள்ளிக்கு வரலாம் எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் உண்மையான குற்றவாளி பற்றி எந்த ஒரு தகவலும் சேர்க்கப்படவில்லை. இந்நிலையில் தன் மீது குற்றம் இல்லாத போது தன்னை பள்ளியில் இருந்து சஸ்பெண்ட் செய்த குற்றத்துக்காகவும், தவறு செய்யவில்லை என்பதற்கான ஆதாரங்களை அளித்தும், முறையான விசாரணை மேற்கொள்ளாமல் லாக்கப்பில் வைத்து இழிவு படுத்தியதற்காக நியூயார்க் போலீசார் மீதும் வழக்கு தொடரப் போவ‌தாக இளம் பெண் கிருத்திகா தெரிவித்துள்ளார்.

தாயகம் திரும்ப திட்டம் : பாதிக்கப்பட்ட மாணவி விரைவில் தான் தாயகம் திரும்ப இருப்பதாகவும், தனது மேற்படிப்பை இந்தியாவிலேயே தொடர விரும்புவதாகவும் கூறியுள்ளார். வெளிநாட்டில் கல்வி, வெளிநாட்டு வேலை என்ற மோகத்தால் அயல் நாடுகளுக்கு படை எடுக்கும் இந்தியர்கள் பலர் இவ்வாறான இன்னல்களுக்கு அவ்வப்போது ஆளாகி வருகின்றனர். தனக்கு நேர்ந்த சோக சம்பவம் குறித்து கூறிய கிருத்திகா : ஏராளமான கனவுகளுடன் அமெரிக்காவில் கல்வி பயில வந்தேன், ஆனால் எனக்கு கசப்பான அனுபவங்களே வாய்த்தன. செய்யாத குற்றத்துக்காக பெற்ற தண்டனைக்கு வழக்கு தொடர்ந்துள்ளேன், நீதி கிடைத்தவுடன் ‌தாயகம் திரும்புவேன். இவ்வாறு கிருத்திகா கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக