சனி, 7 மே, 2011

பின்லேடன் கொல்லப்பட்டதை அடுத்து சவுதிக்கு தாவூத் தப்பியோட்டம்

: மும்பை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் தேடப்படும் முக்கிய குற்றவாளி தாவூத் இப்ராகிம், பாகிஸ்தானில் இருந்து சவுதி அரேபியாவுக்கு தப்பியோடி விட்டான். அல் கய்தா தீவிரவாத இயக்க தலைவன் ஒசாமா பின்லேடன் சுட்டுக் கொல்லப்பட்டதை அடுத்து, பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ, தாவூத்தை பாதுகாப்பாக அனுப்பி வைத்த தகவல் வெளியாகி உள்ளது.

மகாராஷ்டிர மாநிலம் மும்பையின் பல இடங்களில் கடந்த 1993ம் ஆண்டு பயங்கர வெடிகுண்டுகள் வெடித்தன. இதில் பலர் கொல்லப்பட்டனர். பலர் படுகாயம் அடைந்தனர். இந்த தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் தேடப்பட்டு வரும் முக்கிய குற்றவாளி தாவூத் இப்ராகிம். மும்பையில் சதி திட்டத்தை நிறைவேற்றிய பின், இவன் தனது குடும்பத்துடன் பாகிஸ்தானுக்கு தப்பி விட்டான்.

அங்கு கராச்சி நகரில் அந்நாட்டு உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ.யின் பாதுகாப்பில் வசித்து வந்தான். ‘பல்வேறு வழக்குகளில் தேடப்பட்டு வரும் குற்றவாளியான தாவூத் இப்ராகிமை ஒப்படைக்க வேண்டும்‘ என்று மத்திய அரசு பலமுறை பாகிஸ்தானிடம் வலியுறுத்தியுள்ளது. அதற்கான ஆதாரங்களையும் அந்நாட்டுக்கு மத்திய அரசு அளித்தது. ஆனால், தாவூத் தங்களது நாட்டில் இல்லை என்று பாகிஸ்தான் அரசு  மறுத்து வருகிறது.

போதைப் பொருள் கடத்தல், கூலிக்கு கொலை செய்தல் போன்ற வழக்குகளில் சர்வதேச போலீசாராலும் தாவூத் தேடப்பட்டு வருகிறான். இவன் தனது குடும்பத்துடன் கராச்சி நகரில் கிளிப்டன் பகுதியில் சவுதி மசூதி அருகே சொகுசு மாளிகையில் வசித்து வந்ததாக தகவல்கள் வெளியாகி இருந்தன.

இந்த நிலையில், சர்வதேச தீவிரவாதி பின்லேடன் சுட்டுக் கொல்லப்பட்டதை அடுத்து சவூதி அரேபியாவுக்கு  மே 1ம் தேதி இரவு தாவூத் தனது நெருங்கிய கூட்டாளி சோட்டா ஷகீலுடன் தப்பிவிட்டதாகவும், அதற்கு ஐ.எஸ்.ஐ. முழு ஏற்பாடு செய்ததாகவும்  புலனாய்வுத் துறை வட்டாரங்கள் கூறுகின்றன.

தேடப்படும் 2வது குற்றவாளி

சர்வதேச அளவில் இரண்டாவது முக்கிய தீவிரவாதி  தாவூத் இப்ராகிம்.  2ம் இடத்துக்கு முன்னேறியுள்ளான். இதுவரை பின்லேடன், மெக்சிகோ போதைக் கடத்தல் மன்னன் சினாலோ ஆகியோருக்கு அடுத்ததாக 3ம் இடத்தில் தாவூத் பெயர் இருந்தது. பின்லேடன் பலியாகி விட்ட நிலையில், தாவூத் 2வது இடத்துக்கு வந்துள்ளான்.

25 பேர் பட்டியல்

இந்தியாவில் நாசவேலைகளில் ஈடுபட்ட டைகர் மேமன், ஜெய்ஷ் இ முகமது தீவிரவாதி மசூத் அசார், ஜமாத் உத் தவா தலைவன் ஹபிஸ் சயீத் ஆகியோர் உட்பட 25 தீவிரவாதிகளை ஒப்படைக்க வேண்டுமென்று கடந்த 4ம் தேதி பாகிஸ்தானுக்கு இந்தியா கடிதம் அனுப்பியது.  அந்த கடிதத்தில் தாவூத் பெயரும் இடம்பெற்றுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக