செவ்வாய், 10 மே, 2011

கலைஞர் : ஐந்தாம் வகுப்பிலாவது சேர்த்துக்கொள்ளுங்கள். மறுத்தால் எதிரே இருக்கும் குளத்தில் விழுந்து

அன்றைய ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில் இருக்கிறது திருக்கோளிலி கிராமம். வழக்குமொழியில் திருக்குவளை. இப்போது கருணாநிதி வேட்பாளராகப் போட்டியிட்டுள்ள திருவாரூரில் இருந்து பதினைந்து மைல்கள் பயணம் செய்தால் திருக்குவளைக்கு வந்துவிடலாம். கிராமத்தில் முத்துவேலர் என்றால் அத்தனை பேருக்கும் தெரியும் என்று சொல்லமுடியாது. ஆனால் பாம்பு தீண்டியவர்கள் அத்தனை பேருக்கும் தெரியும். பூச்சி கடித்தவர்களுக்கும் தேள் கொட்டியவர்களுக்கும் அம்மை வந்தவர்களுக்கும் ஆபத்பாந்தவன் அவர்தான். அடிப்படையில் விவசாயியாக இருந்தாலும் மூலிகை விஷயத்திலும் மந்திரங்கள் விஷயத்திலும் அதிகம் ஆர்வம் கொண்டவர் முத்துவேலர். ஆபத்து என்று ஓடி வருபவர்களுக்குத் தன்னால் இயன்ற வைத்தியத்தைச் செய்து விடுவார்.
மந்திரம் சொன்னது, மருந்து கட்டியது, வயலுக்குப் போனது போக எஞ்சியிருக்கும் நேரத்தில் பாட்டு எழுதுவார். நாட்டுப்புறப்பாட்டு. எழுதிய பாட்டை உரத்த குரலில் பாடவும் செய்வார். வம்பு செய்யும் வாண்டுகள் எல்லாம் முத்துவேலருக்கு முன்னால் பெட்டிப்பாம்பாக அடங்கிவிடுவார்கள். அவருக்கு என்றால் அவர் சொல்லுகின்ற கதைகளுக்கு. ராமாயண, மகாபாரதக் கதைகளை எல்லாம் சுவைபடச் சொல்வதில் முத்துவேலர் கெட்டிக்காரர்.
ஊர் மக்களின் நோய் தீர்க்கும் முத்துவேலரின் தனிவாழ்க்கையில் நிறைய பிரச்னைகள். ஆசையுடன் மணந்துகொண்ட முதல் மனைவியின் அகால மரணம். பிறகு கட்டிக்கொண்ட இரண்டாவது மனைவியும் மரணம். சோகம் கப்பிய முத்துவேலரின் வாழ்க்கையில் மறுமலர்ச்சி ஏற்படுத்தும் நோக்கத்துடன் மூன்றாவதாக அஞ்சுகம் என்ற பெண்ணைத் திருமணம் செய்துவைத்தனர். வாட்டத்துக்கு விடை கொடுக்கப்பட்டது.
முத்துவேலர் – அஞ்சுகம்  தம்பதிக்கு அடுத்தடுத்து இரண்டு பெண் குழந்தைகள் பிறந்தன. பெரியநாயகம் மற்றும் சண்முக சுந்தரம். இரண்டுமே ஆண்பால் பெயர்கள். ஆண் குழந்தை வேண்டும் என்ற ஏக்கத்தின் விளைவு. ஏக்கம் விரைவில் தணிந்தது. 3 ஜூன் 1924 அன்று ஆண் குழந்தை பிறந்தது. கருணாநிதி!
அடிப்படையில் முத்துவேலர் ஆசாரமானவர். வைதிக விஷயங்களில் விட்டுக்கொடுக்காதவர். பூஜை, புனஸ்கார விஷயங்களில் தீவிர நம்பிக்கை கொண்டவர். விஷக்கடிக்கு மருந்து கட்டியபிறகும் மந்திரம் சொல்ல மறக்கமாட்டார். மருந்தைக் காட்டிலும் மந்திரத்தில்தான் அவருக்கு நம்பிக்கை அதிகம். அதன் காரணமாகவே மொட்டை அடித்தல். காது குத்தல் உள்ளிட்ட அத்தனை சடங்குகளையும் சம்பிரதாயம் மாறாமல் கருணாநிதிக்குச் செய்துவைத்தார் முத்துவேலர்.
உரிய வயதை எட்டியதும் பள்ளிக்கூடத்துக்கு அனுப்பிவைத்தார். பள்ளிப்படிப்புடன் சேர்த்து இசைப்பயிற்சியும் அளிக்கவிரும்பினார் முத்துவேலர். இசை வேளாளர் சமூகத்தைச் சேர்ந்த கருணாநிதிக்கு இசை கற்பதில் ஆர்வம் இருந்தது. கற்றுக்கொள்ளச் சென்ற இடத்தில் அதிர்ச்சி காத்திருந்தது. செருப்பைக் கழற்றித் தூரமாக வீசு என்றார் இசை ஆசிரியர். சுதாரித்து நிமிர்வதற்குள் ‘சட்டையைக் கழற்று‘ என்ற உத்தரவு வந்து விழுந்தது. துண்டை எடுத்து இடுப்பில் கட்டு என்றதும் சுயமரியாதை பொங்கிஎழுந்துவிட்டது கருணாநிதிக்கு. இந்த மூன்றையும் செய்தால்தான் இசைப்பாடம் கிடைக்குமா? வேண்டாம் என்று சொல்லிவிட்டு வீட்டுக்கு வந்துவிட்டார்.
கருணாநிதியின் குணம் முத்துவேலருக்குப் புரிந்தது அந்த நிமிடத்தில்தான். வெறுமனே பள்ளிக்கூடம் மட்டும் போனால் போதும் என்று சொல்லிவிட்டார். மகிழ்ச்சியாக இருந்தது கருணாநிதிக்கு. பாடங்களைப் படித்தது போக நாடகங்களில் நடிப்பதிலும் ஆர்வம் செலுத்தினார். பள்ளிக்கூட நண்பர்களை ஒத்தாசைக்கு வைத்துக்கொண்டு வீட்டின் மாட்டுத்தொழுவத்தையே நாடக மேடையாக்கிவிடுவார். கிருஷ்ணனாக. அர்ஜுனனாக. இன்னும் இன்னும் பல வேடங்கள். கதை, வசனங்களுக்கு எங்கே போவது? இருக்கவே இருக்கின்றன அப்பா சொன்ன கதைகளும் சம்பவங்களும். நாடக மேடை களைகட்டத்தொடங்கியது.
முதல் படிவம் முழுக்க திருக்குவளையிலேயே முடித்துவிட்ட கருணாநிதியை மேலும் படிக்கவைக்க விரும்பினார் முத்துவேலர். ‘இரண்டாவது படிவம் படிக்க உள்ளூரில் வாய்ப்பில்லை;  திருவாரூருக்கு அழைத்துச் சென்று அங்குள்ள பள்ளியில் சேர்க்கிறேன்’ என்றார் பள்ளி ஆசிரியர். அந்தப் பள்ளியில் நுழைவுத் தேர்வு எழுதி, அதில் தேறியவர்களுக்கு மட்டுமே இடம் என்று சட்டம். தேர்வை எழுதினார் கருணாநிதி. தேறவும் செய்தார். ஆனாலும்  இடமில்லை என்று சொல்லிவிட்டார்கள். பள்ளியில் சேராமல் வீட்டுக்குப் போவதை கௌரவக் குறைச்சலின் உச்சம் என்று நினைத்தார் கருணாநிதி. நேரே தலைமை ஆசிரியரிடம் சென்று பேசினார்.
‘அய்யா, இரண்டாவது படிவம்கூட வேண்டாம். குறைந்தபட்சம் ஐந்தாம் வகுப்பிலாவது சேர்த்துக்கொள்ளுங்கள். மறுத்தால் எதிரே இருக்கும் குளத்தில் விழுந்து செத்துவிடுவேன்.’
இடம் கிடைத்துவிட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக