வெள்ளி, 27 மே, 2011

ஜெயலலிதா: அமைச்சர்கள், அதிகாரிகள் வாய் திறக்க கூடாது

அரசு திட்டங்கள் குறித்து அமைச்சர்கள், அதிகாரிகள் வாய் திறக்க கூடாது என்ற நிலையை, முதல்வர் ஜெயலலிதா மாற்ற வேண்டும்' என, மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான முந்தைய ஆட்சியின் போது, அரசின் திட்டங்கள், செயல்பாடுகள் குறித்து அவர் மட்டுமே பேசுவார்; அறிவிப்புகளை வெளியிடுவார். விழாக்களிலும், செய்தியாளர்கள் கூட்டத்திலும் அமைச்சர்கள், தலைமைச் செயலர் உள்பட எவரும் வாய் திறக்க மாட்டர். மக்களுக்கு உத்தரவாதம் வழங்குதல், நம்பிக்கையான வாக்குறுதி அளித்தல் போன்றவற்றுக்கும் இவர்களுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. மீறுபவர்கள் பதவி பறிக்கப்பட்டதும் உண்டு. தீர்க்கக்கூடிய பொதுவான பிரச்னையை சாதாரண மனிதன், முதல்வரின் தனிப்பிரிவுக்கு மனுவாக அனுப்பி, அது முதல்வர் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டு, நிறைவேற்றப்பட்ட பல சம்பவங்கள் உண்டு. ஆனால், அமைச்சர், அதிகாரிகளிடம் மனுவாக கொடுத்து, அது நிறைவேறிய சம்பவம் மிகச்சொற்பம் தான். அரசு விழாக்களில் அமைச்சர்கள் பேசும் போது கூட, "அம்மா அவர்கள் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்' என்று தான் கூறுவரே தவிர, தங்கள் துறை தொடர்பான தகவல்கள், முன்னேற்றங்கள், திட்டங்கள் பற்றி வாய் திறக்க மாட்டர்.

தற்போது, அ.தி.மு.க., ஆட்சி அமைந்துள்ள நிலையில், முதல்வர் ஜெயலலிதாவின் நடவடிக்கைகள், பேச்சு, செயல்பாடுகள் பெரிதும் மாறியுள்ளன. தன் கையால் அனைவருக்கும் இனிப்பு வழங்கியது, தேர்தல் முடிவுகள் வெளியான அன்று, போயஸ் கார்டனில் ஒன்றுக்கு இரண்டு முறை மாடியில் நின்று மக்களைப் பார்த்து கையசைத்து புன்னகைத்தது, பல முறை செய்தியாளர்களை சந்தித்தது, போக்குவரத்து நெரிசலின்றி தன் பயணத்திட்டத்தை வகுக்க போலீஸாருக்கு உத்தரவிட்டது, அமைச்சர்கள் தங்கள் வாகனங்களை போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்துதல், செல்லுதல் கூடாது என, உத்தரவிட்டது போன்றவை சில உதாரணங்கள். முக்கியமாக, "பதவியேற்பு விழாவில் எந்த அமைச்சரும், தன் காலில் விழக் கூடாது' என, முதல்வர் உத்தரவிட்டார். "செய்தியாளர்கள் தன்னை வழிமறித்து கேள்விகள் கேட்கக்கூடாது. வாரம் ஒரு முறை நானே பதிலளிக்கிறேன்' என்றும் தெரிவித்துள்ளார்.

தலைமைச் செயலக இடமாற்றம், கேபிள், "டிவி' அரசுடமை போன்றவை குறித்து நிருபர்களின் கேள்விக்கு, "இப்போதுதான் பொறுப்பேற்றுள்ளேன். விரைவில் அனைத்தையும் செய்து முடிப்பேன். அதற்காக தனித்துறையும், தனியாக அமைச்சரும் நியமிக்கப்பட்டுள்ளார்' என, வித்தியாசமான அணுகுமுறையை முதல்வர் கையாண்டுள்ளார். இந்த மாற்றம் மக்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது. முதல்வரிடம், மக்களுக்கு அதிக எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது. மக்களின் அவசியமான கோரிக்கைகள், தேவைகள் மீது முடிவெடுக்கவும், தீர்வுக்கான வழிகளை கூறவும், திட்டங்களை அறிவிக்கவும் அமைச்சர்களுக்கு அனுமதி தர வேண்டும். அதன் பின், முதல்வர் அனுமதி பெற்று அத்திட்டங்களை செயல்படுத்துவதில் தவறில்லை. "தவறு செய்பவர்கள் மீது சாட்டை சுழலும்' என, எப்போதும் அதிரடியாக தெரிவிக்கும் முதல்வர் ஜெயலலிதா, அமைச்சர்களும், அதிகாரிகளும் தன்னிச்சையாக செயல்பட, அவர்களது வாய்ப்பூட்டு, கைக்கட்டுக்களை அவிழ்த்து, அவர்கள் மக்களுக்கு கூடுதல் சேவையாற்ற பணிக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பு.

- நமது சிறப்பு நிருபர் -
kunjumani - Chennai ,இந்தியா
2011-05-27 02:53:50 IST Report Abuse
போட்டோவுல அந்த வழுக்க தலையா இருக்கிறவர் சரியா கும்பிடாததுமாதிரி தெரியுது அனேகமா இந்த வாரத்தோட அவர் பதவி காலின்னு நினைக்குறேன் , விஜயகாந்த் சொன்ன மாதிரி மந்திரி பதவிய அனுபவிக்காமலேயே போகப் போறார். இவங்களோட கம்பேர் பண்ணும்போது ஜெ., வை பற்றி சொன்ன சொன்ன அழகிரி உண்மையிலேயே அஞ்சா நெஞ்சன் தான்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக